மேலும்

ஆட்கடத்தலுடன் முன்னாள் கடற்படைத் தளபதிக்குத் தொடர்பு – நீதிமன்றில் காவல்துறை தெரிவிப்பு

wasantha karannagodaசிறிலங்கா கடற்படைக் கொமாண்டோக்களால், தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டது குறித்து, சிறிலங்கா கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் வசந்த கரன்னகொட அறிந்திருந்தார் என்று, கொழும்பு நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரி சாட்சியம் அளித்துள்ளார்.

2008ஆம் ஆண்டு செப்ரெம்பர் 17ஆம் நாள் தெகிவளைப் பகுதியில், கடத்தப்பட்டு காணாமற்போன 5 தமிழ் இளைஞர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் நடந்த போது, குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியான உதவி ஆய்வாளர் நிசாந்த சில்வா சாட்சியமளித்தார்.

“தெகிவளையில் இடம்பெற்ற ஆட்கடத்தல்கள் தொடர்பாக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவும், உயர்மட்ட அதிகாரிகள் பலரும் அறிந்திருந்தனர் என்பதற்கான தகவல்கள் கிடைத்துள்ளன.

கடத்தப்பட்டவர்கள் எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை என்று கண்டறியப்பட்டிருந்தால், அவர்களை சித்திரவதை முகாமில் தடுத்து வைக்காமல், விடுதலை செய்திருக்க வேண்டியது சிறிலங்கா கடற்படை உயர் அதிகாரிகளின் கடமையாகும்.

கடத்தப்பட்டவர்கள், சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் உள்ள பிட்டுபம்புவ என்ற இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் அவர்கள் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

கடத்தப்பட்ட இளைஞர்கள் கைத்தொலைபேசியில் தமது பெற்றோருடன் பேசியுள்ளனர்.

அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடம் மிகவும் மோசமானதாக இருந்துள்ளது. அதற்குள் உயிர் வாழ்வது மிகவும் கடினமானது.  அவற்றை இப்போது முத்திரையிட்டு மூடியுள்ளோம்.

அந்த அறைகள், டச்சுக்காரர்களால் ஆயுதங்கள் வைக்கப் பயன்படுத்தப்பட்டவை.

இந்த இளைஞர்கள் கடத்தலுக்கு, கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் வசந்த கரன்னகொடவின் பாதுகாப்பு அணியில் இருந்த லெப்.கொமாண்டர் சம்பத் முனசிங்க, ஹெற்றியாராச்சி, ரணசிங்க ஆகிய அதிகாரிகள் பொறுப்பாக இருந்துள்ளனர்.

இந்தக் கடத்தல், குறித்து கடற்படைத் தளபதி நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.

கடத்தப்பட்டவர்களை விடுவிக்க பெற்றோரிடம் 5 இலட்சம் ரூபா தொடக்கம் 10 மில்லியன் ரூபா வரை கப்பமாக கோரப்பட்டுள்ளது.

இதுபற்றிய அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பியுள்ளோம். அவரது பதில் கிடைக்கவில்லை.” என்றும் உதவி ஆய்வாளர் நிசாந்த சில்வா சாட்சியம் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *