மேலும்

புலம்பெயர்ந்தோர் ஒன்றும் கொம்புவைத்த வேற்றுக் கிரகவாசிகள் அல்ல- மங்கள சமரவீர

mangala-samaraweeraபுலம்பெயர்ந்தவர்கள் ஒன்றும் வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்த கொம்பு வைத்த மனிதர்கள் அல்ல என்று, தெரிவித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.

வெளிநாடுகளில் நியமிக்கப்படவுள்ள, சிறிலங்காவின் புதிய தூதுவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்வை நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் புதிய தூதுவர்களுக்கான இந்த 10 நாள் பயிற்சி பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துல மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வருகிறது.

இந்த நிகழ்வின் ஆரம்பத்தில், உரையாற்றிய மங்கள சமரவீர,

‘புலம்பெயர்ந்தோருக்கான விழாவை நடத்தப் போவதாக நான் முன்வைத்த யோசனைக்கு இலங்கைக்குள் மீண்டும் ஈழமொன்றை உருவாக்க முயற்சிப்பதாகவும், இதற்காக ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து மூன்றரை மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றிருப்பதாகவும் ஊடகங்களில் வெளிவந்திருக்கும் செய்தியில் எவ்வித உண்மையுமில்லை.

இது எனது யோசனை மாத்திரமே. இதன் பின்புலத்தில் வேறு எவருமோ அல்லது எந்தவொரு அழுத்தமோ இல்லை.

அயர்லாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை ஒன்றிணைக்கும் வேலைத்திட்டம் வருடாந்தம் நடத்தப்படுகிறது.

இதை சிறிலங்காவிலும் நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது.

‘டயஸ்போரா’ என்பது புலம்பெயர் வாழ் மக்களாகும். இதில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், பறங்கியர் உள்ளிட்ட அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குவர்.

டயஸ்போரா என்றதும் வேற்று உலகிலிருந்து வந்த கொம்பு வைத்த மனிதர்களைப் போன்றே அவர்களைப் பலரும் கருதுகின்றனர்.

உலகம் முழுவதும் இலங்கையைச் சேர்ந்த திறமைசாலிகள் உள்ளனர். ‘நாசா’வில் மாத்திரம் 10 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் உள்ளனர்.

பிரபல வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கலைஞர்கள், வியாபாரிகள், சமையற்காரர்கள் என அனைத்து துறையிலும் இலங்கையர்கள் வெளிநாடுகளில் பிரகாசித்து வருகின்றனர்.

இவர்களது அறிவு, அனுபவம், திறமையிலிருந்து நாம் பல விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

முதலீடுகளுக்காக நாம் வெளிநாட்டவர்கள் பின்னால் செல்கிறோம். எதற்காக நாம் இலங்கையர்களின் முதலீடுகளை வரவேற்கக்கூடாது. இவர்களது அனுபவம் எமக்கு தேவையாகும்.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் புதிய பயணத்தில் புலம் பெயர்வாழ் மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்.

தமிழ் மற்றும் சிங்கள அடிப்படை வாதங்கள் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவையாகும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *