மேலும்

சிறிலங்கா அமைச்சரவை அங்கீகரித்த தேர்தல் முறை மாற்ற யோசனையை கூட்டமைப்பு நிராகரிப்பு

tnaதேர்தல்முறையில் மாற்றம் செய்வதற்காக சிறிலங்கா அமைச்சரவை அங்கீகரித்துள்ள 20ஆவது திருத்தச்சட்ட யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

“கடந்த திங்கட்கிழமை இரவு நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில், தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்காக முன்வைக்கப்பட்ட 20ஆவது திருத்தச்சட்ட யோசனை குறித்து எமது சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.

யாழ். மாவட்டத்தில் காணப்பட்ட அசாதாரண நிலைமைகளால் உயிரிழப்புக்களையும் சந்தித்துள்ளதுடன் மக்கள் இடம்பெயர்ந்தும் உள்ளனர்.

அவர்களுக்கான எந்த நியாயங்களும் தீர்வுகளும் வழங்காத நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள 11தொகுதிகளை 6ஆக குறைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதனால் வடக்கு மக்களின் பிரதிநிதித்துவம் குறைவடையும் அபாயமும் ஏற்படும். அவ்வாறு பிரதிநிதிகள் குறைவதானது மக்களின் அபிலாசைகளை உரிமைகளை வென்றெடுப்பதை பலவீனப்படுத்துவதற்கும் மறைமுகமாக காரணமாகிறது.

ஆகவே 125தொகுதிகள் என்ற, பிரதமரால் முன்மொழியப்பட்டு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ள 20ஆவது திருத்தச்சட்ட யோசனையை எம்மால் ஏற்கமுடியாது.

இதுதொடர்பாக முன்னதாக நாம் சிறிலங்கா அதிபர், பிரதமர் ஆகியோரிடம் நேரடியாக எமது நியாயங்களையும் யார்த்தங்களையும் எடுத்துக் கூறியிருந்தோம்.

அவ்வாறான நிலையில் மீண்டும் அவ்விடயங்களை நாம் எடுத்துரைக்கவுள்ளோம்.

எமது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுமானால் அதனை எதிர்த்தே கூட்டமைப்பு வாக்களிக்க வேண்டிய தவிர்க்கமுடியாத சூழலுக்குள் தள்ளப்படும்.

அவ்வாறான நிலை ஏற்படும் பட்சத்தில் அரசாங்கத்துடன் எமக்கு காணப்படும் தற்போதைய உறவிலும் மாற்றங்கள் ஏற்படும் அபாயமுள்ளது.

அத்துடன், நேற்றைய சந்திப்பில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள  நிலையில் தேர்தல் அறிக்கை,  அதனை எவ்வாறு கையாள்வது, தொடர்பாக ஒரு ஆரம்ப கட்டப் பேச்சுக்களும் நடத்தப்பட்டன.

ஆசன ஒதுக்கீடு ஏனைய விடயங்கள் தொடர்பாக மீண்டும் கூடி பேசப்படவுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *