மேலும்

பொதுத்தேர்தலும் போர்க்குற்ற அறிக்கையும் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

john-kerry-ms (1)காலத்திற்கு முன்னர் மைத்திரி அரசாங்கம் தேர்தலை நடத்தி, பலமான அரசாங்கம் ஒன்றை உருவாக்கினால், இவ்வாறான போர்க்குற்ற அறிக்கை தொடர்பான சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கான திட்டத்தை மைத்திரிபால சிறிசேன வரையமுடியும்.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலர் பான் கீ மூன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்குத் திடீரென தொலைபேசியில் அழைப்பு விடுத்தமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பாக கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள்   கடந்த வாரம் ஆராய்ந்தன.

பான் கீ மூன் தனது தொலைபேசி உரையாடலின் போது மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தைப் புகழ்ந்து பேசிய போதிலும்,  செப்ரெம்பர் மாதத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் இடம்பெறுவதற்கு முன்னர் சிறிலங்காவில் பொதுத்தேர்தல் நடத்தப்படுமா என்பது தொடர்பாக அறிவதற்காகவே அவர், தொலைபேசியில் உரையாடியதாகக் கூறப்படுகிறது.

புதிய அரசாங்கப் பிரதிநிதிகளுடனேயே ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் தான் பங்கேற்பேன் என மைத்திரிபால சிறிசேன, ஐ.நா செயலாளர் நாயகத்திடம் தெரிவித்ததாக செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. இந்தத் தகவலானது மைத்திரியும் பான் கீ மூனும் பொதுத்தேர்தல் தொடர்பாக பேச்சுக்களை நடத்தியுள்ளமையை உறுதிப்படுத்துகிறது.

செப்ரெம்பரில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை இடம்பெறுவதற்கு முன்னர் சிறிலங்கா தனது பொதுத்தேர்தலை நடத்த வேண்டிய தேவையுள்ளதாக அண்மையில் சிறிலங்காவுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வலியுறுத்தியிருந்தார்.

சிறிலங்காவை விட்டு கெரி புறப்படுவதற்கு முன்னர் மறைமுகமாக மைத்திரி அரசாங்கத்திற்குச் சாதகமான பொதுத்தேர்தலை நடத்துவதற்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும் என்பதைத் தெரிவித்திருந்தார்.

‘சிறிலங்காவில் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதற்காக தங்களால் எதிர்கொள்ளப்படும் பல்வேறு சவால்களுக்கும் அதாவது பாரம்பரியத்தைக் கட்டியெழுப்புவதில் உள்ள சவால்கள் மற்றும் திறன் விருத்திக்காக எடுக்கப்படும் முயற்சிக்கும் நாங்கள் என்றும் ஆதரவளிப்போம்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நாங்கள் உங்களுக்கு ஆதரவு தர விரும்புகிறோம். காலத்திற்குகந்த வகையில் தேர்தலை நடத்துவதானது அரசாங்கம் தனது கடப்பாடுகளைப் பின்பற்றுகிறது என்பதற்கான சிறந்ததொரு சமிக்கையாக இருக்கும்’ என சிறிலங்கா அதிபரிடம், அமெரிக்க இராஜாங்கச் செயலர் கெரி குறிப்பிட்டிருந்தார்.

சில வாரங்களின் முன்னர் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், சுகாதார அமைச்சர் கலாநிதி ராஜித சேனரட்னவும் பொதுத்தேர்தலை குறுகிய காலத்தில் நடத்துவது தொடர்பாக மோதிக்கொண்டனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செப்ரெம்பர் மாத கூட்டத்தொடருக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துமாறு அனைத்துலக சமூகமும் அமெரிக்க இராஜாங்கச் செயலரும் வலியுறுத்தியுள்ளதாக மங்கள சமரவீர சுட்டிக்காட்டியிருந்தார். பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பில் தீர்வை எட்டவேண்டியது மைத்திரிபால சிறிசேனவின் பணியே அன்றி இது கெரியின் பணியன்று என ராஜித தெரிவித்திருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நலன்களை அடிப்படையாகக் கொண்டே தேர்தலை நடத்துமாறு கெரியும் பான் கீ மூனும் மைத்திரி மீது அழுத்தம் கொடுப்பதாக மைத்திரியின் விசுவாசிகள் கருதுகின்றனர்.

இது உண்மையாயின், ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்பளிக்குமாறு சிறிலங்கா மீது கெரியும் பான் கீ மூனும் அழுத்தத்தை வழங்குவது கடினமான செயலாகும்.

இவ்வாண்டு மார்ச் மாதத்தில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக மேலும் நடவடிக்கை எடுக்காது தடுப்பதற்கு அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி கடுமையாக உழைத்திருந்தார். சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற அறிக்கையை வெளியிடுவதற்கான காலஅவகாசத்தை செப்ரெம்பர் வரை நீடிப்பதற்கு கெரி உதவியுள்ளார்.

போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை செய்வதற்கான உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை செப்ரெம்பருக்கு முன்னர் அமுல்படுத்துவதாக சிறிலங்கா வாக்குக்கொடுத்த பின்னர் இதற்கெதிரான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளது.

உள்ளகப் பொறிமுறை விரைவில் உருவாக்கப்படும் என மைத்திரி ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். செப்ரெம்பர் மாதத்திலும் உள்ளக விசாரணை அறிக்கையை வழங்காது, அதற்கப்பாலும் காலஅவகாசத்தைக் கோர முடியும் என்ற நம்பிக்கையுடன் தான் மைத்திரி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செப்ரெம்பர் மாதக் கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளார் என்பதையே இவரது அறிவித்தல் சுட்டிநிற்கிறது.

இதற்கு முரணாக, செப்ரெம்பரில் சிறிலங்கா அரசாங்கம் தனது உள்ளக விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்காது தட்டிக்கழிப்பதற்கும் இதற்காக மேலதிக காலஅவகாசத்தைக் கோருவதற்கும் ஜோன் கெரியால் கூட ஆதரவளிக்க இடமளிக்கப்படமாட்டாது என ஐ.நா மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.

போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை ஆகஸ்ட்டில் சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்படும். இக்கால அவகாசத்திற்கு முன்னர் அனைத்துலக ஊடகங்களின் அழுத்தத்தின் ஊடாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

இந்த அறிக்கை மக்களின் பார்வைக்காக வெளியிடப்படும் போது, மகிந்த ஆதரவாளர்களும் தேசப்பற்றாளர்களும் இதனைப் பயன்படுத்தி மைத்திரியின் தேர்தல் வெற்றியைக் குழப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு விடுவார்களோ என ஊடகங்கள் கருதுகின்றன.

போர்க் காலப்பகுதியில் பணியாற்றிய உயர் மட்ட இராணுவ அதிகாரிகள் மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டால், மைத்திரி அரசாங்கம் பொதுத்தேர்தலை முதன்மைப்படுத்தி பிறிதொரு தீர்மானத்தை முன்னெடுக்கலாம்.

காலத்திற்கு முன்னர் மைத்திரி அரசாங்கம் தேர்தலை நடத்தி, பலமான அரசாங்கம் ஒன்றை உருவாக்கினால், இவ்வாறான போர்க்குற்ற அறிக்கை தொடர்பான சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கான திட்டத்தை மைத்திரிபால சிறிசேன வரையமுடியும்.

செப்ரெம்பர் மாதத்திற்கு முன்னரும் பொதுத்தேர்தலின் முன்னரும் மைத்திரி உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை உருவாக்காவிட்டால், மகிந்த ஆதரவுக் குழுக்கள் இந்த நகர்வை முறியடிப்பதற்காக திட்டங்களைத் தீட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மைத்திரி போரை வென்றெடுத்த வீரர்களை அவமதிப்பதாக மகிந்த விசுவாசிகள் தவறான விளக்கத்தைக் கற்பிக்க முற்படுவார்கள்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் தன்னைப் பலப்படுத்திக் கொள்ளவும், மகிந்த விசுவாசிகளைப் பலவீனப்படுத்துவதற்குமாக மைத்திரி பொதுத்தேர்தலைப் பிற்போட வேண்டும். ஆனால் பொதுத்தேர்தலுக்கு முன்னர் போர்க்குற்ற விவகாரம் தீவிரமுற்றால், இந்தச் சூழலை மகிந்த விசுவாசிகள் தமக்குச் சாதகமாக்கிக் கொள்வார்கள். இது நடந்தால், மைத்திரி தனது அரசியற்கட்சிக்குள் மட்டுமல்லாது தேசிய அளவிலும் பலவீனமடைகின்ற நிலை உருவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *