மேலும்

அமெரிக்க – சிறிலங்கா உறவுகள் தொடருமா?

john-kerry-ms (1)ராஜபக்ச அரசாங்கத்தின் மீதான ஊழல் மோசடி விசாரணைக்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்குவதன் மூலம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச தனக்கான ஆதரவு வாக்குகளை இழப்பதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறு huffingtonpost ஊடகத்தில் Taylor Dibbert எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முதன்மை பிரதி உதவிச் செயலர் றிச்சார்ட் E. கொக்லான்ட் (Richard E. Hoagland) அண்மையில் வோசிங்ரன் அனைத்துலக வர்த்தக சபையில் உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார். இவர் தனது உரையின் ஆரம்பத்தில் நேபாளம் தொடர்பாகவும் பின்னர் அமெரிக்க-இந்திய உறவு நிலை முன்னேற்றம் அடைந்தமை தொடர்பாகவும் குறிப்பிட்டார்.

இதை விட சிறிலங்கா, பங்களாதேஸ், மத்திய ஆசியா, அமெரிக்காவின் வர்த்தக நலன்கள் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் வர்த்தக சார் செயற்பாடுகள் தொடர்பாகவும் கொக்லண்ட் எடுத்துக் கூறினார். இவரது உரை தரம் மிக்கதாகக் காணப்பட்டது. கொக்லண்ட் தனது உரையின் போது சீனா தொடர்பில் மென்மையான வார்த்தைகளைப் பயன்படுத்தியமை வரவேற்கத்தக்கதாகும்.

அமெரிக்க-சிறிலங்கா உறவு தொடர்பாக கொக்லண்ட் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:

‘இந்தியாவின் தென்கிழக்குத் திசையிலிருந்து பாக்குநீரிணைக்குக் குறுக்காக 35 மைல்கள் தொலைவிலுள்ள சிறிலங்காத் தீவில் இடம்பெற்ற ஜனநாயகத் தேர்தல் அமெரிக்காவுடன் நல்லதொரு உறவைப் பேண வழிவகுத்தது. சிறிலங்காவில் தற்போது ஆட்சி செய்யும் புதிய அதிபர் ஏற்கனவே நடைமுறையிலிருந்த கடும்போக்கு அரசியல்  மற்றும் குடும்ப முதலாளித்துவம் போன்றவற்றிலிருந்து நாட்டை மீட்டெடுத்து மீளிணக்கப்பாடு மற்றும் முழுமையான அபிவிருத்தி போன்றவற்றை முன்னெடுப்பதற்கான புதிய பாதையை நோக்கி நாட்டைக் கொண்டு செல்கிறார்.

இதுவே எமக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் நல்லுறவைப் பேண வழிவகுத்துள்ளது’

‘சிறிலங்காவின் தற்போதை அதிபர் தேர்ந்தெடுத்துள்ள புதிய பாதையை நோக்கிச் செல்வதற்கும், சிறிலங்காவில் நல்லாட்சியைப் பலப்படுத்துவதற்கும் குறிப்பாக இதனுடைய நீதி மற்றும் நிதி நிறுவகங்கள் தொடர்பில் புதிய அதிபரால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்துவதற்கு நாங்கள் நிறையத் திட்டங்களைக் கொண்டுள்ளோம். இப்புதிய பாதையானது சிறிலங்கா வாழ் மக்களுக்கு நலன் பயக்குவதுடன் அமெரிக்க நலன்களுக்கும் துணைபோகும். சிறிலங்காவில் நல்லாட்சியை மேம்படுத்துவதற்கும், மனித உரிமைகளை முன்னேற்றவும், இந்திய மாக்கடலின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தவும் சிறிலங்காவுடன் இணைந்து தற்போது எம்மால் பணியாற்ற முடியும்’ என கொக்லண்ட் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள பந்திகள் கொக்லண்ட்டால் ஆற்றப்பட்ட உரையில் காணப்படும் மிகவும் நம்பிக்கை தரும் பகுதிகளாகும்.

சிறிலங்காவில் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள அதிபரான மைத்திரிபால சிறிசேனவுடன் தனது நட்புறவை முறித்துக் கொள்வதற்கான எவ்வித சமிக்கைகளையும் ஒபாமா நிர்வாகம் காண்பிக்கவில்லை என்பது நிச்சயமாகும். சிறிலங்காவின் நீதி மற்றும் நிதி நிறுவகங்களை முன்னேற்றுவதற்கு அமெரிக்கா துணைநிற்கும் என கொக்லண்ட் தனது உரையில் குறிப்பிட்டுள்ளதானது சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் ஊழல் விசாரணையை முதன்மைப்படுத்தியதாகும்.

அதாவது மகிந்த ராஜபக்ச ஆட்சியிலிருந்த போது நாட்டில் இடம்பெற்ற மிக மோசமான ஊழல் மோசடிகள் தற்போது மைத்திரிபால அரசாங்கத்தால் விசாரணை செய்யப்படுகின்ற நிலையில் அமெரிக்கா இதற்கு தனது ஆதரவை வழங்குவதாக கொக்லண்ட் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான பரப்புரையில் ஈடுபடுவதை அண்மைய சில சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. தன்னால் தலைமை வகிக்கப்படும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைக் கட்டுப்படுத்துவதில் சிறிசேன தற்போதும் சிக்கல்களுக்கு முகங்கொடுக்கிறார்.

சிறிலங்காவின் அரசியலில் தற்போது குழப்பமான காலமாகும். சிறிசேன நாடாளுமன்றைக் கலைத்து ஆகஸ்ட்டில் பொதுத் தேர்தலை முன்னெடுப்பார் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இத்தீர்மானத்தை இன்னமும் மைத்திரிபால சிறிசேன உறுதிப்படுத்தவில்லை.

தற்போதைய நாடாளுமன்றம் 2016 ஏப்ரல் வரை நாட்டை நிர்வகிக்க முடியும். ஆனால் சிறிசேன அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள குழப்பமே நாடாளுமன்றைக் கலைப்பதற்கான முக்கிய காரணமாகும்.

ராஜபக்ச அரசாங்கத்தின் மீதான ஊழல் மோசடி விசாரணைக்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்குவதன் மூலம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச தனக்கான ஆதரவு வாக்குகளை இழப்பதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மகிந்தவைப் போட்டியிட ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என சிறிசேன தெளிவாக அறிவித்துள்ளார். இருப்பினும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர் ராஜபக்ச தேர்தலில் போட்டியிட வேண்டும் என விரும்புகின்றனர்.

இது தொடர்பில் ஒரு சாரார் ராஜபக்சவுடன் பேச்சுக்களை மேற்கொள்கின்றனர். இதன்மூலம் இவர்கள் ராஜபக்சவின் தலைமையில் பிறிதொரு கட்சியின் கீழ் போட்டியிடலாம் என ஊகிக்கப்படுகிறது.

சிறிலங்கா அதிபர் என்ற வகையில் சிறிசேனவின் நிர்வாகம் சிறப்பு மிக்கதாக இல்லாவிட்டாலும் கூட கண்ணியம் மிக்கதாக உள்ளது. வருகின்ற மாதங்களில் சிறிலங்காவின் அரசியலில் எத்தகைய மாற்றங்கள் வரவுள்ளன என்பதை எதிர்வுகூறுவது கடினமானதாகும்.

தற்போது, குறைந்தது இரண்டு விடயங்களாவது தெளிவாக உள்ளன. முதலாவதாக, சிறிசேன தன்னால் முடிந்தளவு தனது சொந்த அரசியற் கட்சிக்குள் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். இரண்டாவதாக, என்ன நடந்தாலும் சிறிசேன, ராஜபக்சவைப் போன்ற ஒரு ஆட்சியாளர் அல்லர்.

ஆகவே அமெரிக்க – சிறிலங்கா உறவு இன்னமும் சில காலம் நீடிக்கும் எனத் தோன்றுகிறது. குறிப்பாக ராஜபக்ச மீண்டும் சிறிலங்காவின் ஆட்சியில் அமர்வதற்காக முன்னெடுக்கும் நடவடிக்கைகளை குழிதோண்டிப் புதைப்பதற்கு அமெரிக்கா தனது தடையற்ற ஆதரவை வழங்குவதன் மூலம் சிறிலங்காவுடன் தொடர்ந்தும் நல்லுறவைப் பேணமுடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *