மேலும்

வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றக் கூடாது – நிமால் சிறிபால டி சில்வா

nimal siripala de silvaவடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றுமாறு கூறுவதற்கு விக்னேஸ்வரன் ஒன்றும் சிறிலங்கா அதிபர் அல்ல, யார் சொன்னாலும் வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றக் கூடாது என்று சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை முழுமையாக அழித்து  விட்டதாக குறிப்பிட்டாலும், அவர்கள் அனைத்துலக அளவில் இன்னமும் பலமாகவே உள்ளனர்.

விடுதலைப் புலிகளின் அனைத்துலக  வலையமைப்பு மீண்டும் சிறிலங்காவைத் தாக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகவே உள்ளன.

இவ்வாறான நிலையில் எமது நாட்டை பாதுகாக்க வேண்டியது எமது கடமை.

வென்றெடுத்த விடுதலையை மீண்டும் தாரைவார்க்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. வடக்கில் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளதுடன் அச்சுறுத்தல்களும் ஏற்பட்டுள்ளளன.

அதேபோல் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் புலிகள் இயக்கத்தின் தலையீடுகள் மீண்டும் வடக்கை ஆக்கிரமிக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

எனவே மீண்டும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் முக்கிய பகுதிகளில் இராணுவப் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

அதேபோல் வடமாகாண முதலமைச்சர் மீண்டும் இனவாத செயற்பாடுகளை ஆரம்பித்து விட்டார். தடைசெய்யப்பட பயங்கரவாத இயக்கத்தை வடமாகாண முதலமைச்சர் தலைமையில் நினைவு கூருகின்றனர்.

வடக்கில் சட்டத்துக்கு முரணான வகையில் நீதிமன்ற தடைகளை மீறி ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன.

அதேபோல் வடக்கில் நீதிமன்றம், பொலிஸ் நிலையம் என்பன தாக்கப்பட்டுள்ளன. மக்களை தூண்டிவிடும் செயற்பாடுகள் மீண்டும் வடக்கில் ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றும் செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

வடக்கில் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டு அனைத்து பகுதிகளும் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த அரசாங்கம் ஐந்து மாத ஆட்சிக்காலத்தில் வடக்கில் உள்ள அதிகளவான இராணுவத்தை வெளியேற்றியுள்ளது.

வடக்கில் உள்ள ஒட்டுமொத்த இராணுவத்தையும் வெளியேற்றும் முயற்சியை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேற்கொண்டு வருகிறார்.

வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றுவது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கே உள்ளது. அதிபரின் அதிகாரங்களை மாகாண முதலமைச்சர் எடுத்துக் கொள்ளும் நிலைமை இன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது.

இராணுவத்தை வெளியேற்றக் கூற விக்னேஸ்வரன் நாட்டின் அதிபர் அல்ல என்பதை அவர் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வட மாகாணத்துக்கு இன்று அரசாங்கம் அடி பணிந்துள்ளது. வடக்கில் மட்டுமே இவர்களின் சேவைகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

வடக்கில் இருந்து ஒருபோதும் இராணுவத்தை வெளியேற்றக்கூடாது. வடக்கில் மக்களின் பாதுகாப்பு இராணுவத்தின் கைகளில் மட்டுமே உள்ளது. அதை மீண்டும் சீரழிக்கக் கூடாது.

தொடர்ந்தும் வடக்கில் இராணுவம் பலப்படுத்த வேண்டும் என்பதை நாம் அரசாங்கத்துக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.

எமது ஆட்சியில் நாட்டின் பாதுகாப்புக்கே முக்கியத்துவம் வழங்கினோம். ஆனால் இன்று நிலைமை மாறியுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *