மேலும்

அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் நியமனத்தில் சர்ச்சை – நாளை நாடாளுமன்றில் சூடு பறக்கும்

parliamentஅரசியலமைப்பு சபைக்கான உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. 19வது திருத்தச்சட்டத்துக்கு அமைய உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பு சபைக்கு, உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, அரசியலமைப்புச் சபைக்கான உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

இவற்றில், நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்று உறுப்பினர்களின் நியமனங்களை உறுதி செய்வதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நாளை கூட்டப்பட்டுள்ளது.

கலாநிதி ராதிகா குமாரசாமி, கலாநிதி ஏ.ரி.ஆரியரத்ன, முன்னாள் நீதிபதி  சலாம் ஆகியோரின் பெயர்கள், அரசியலமைப்பு சபைக்காக வெளியக உறுப்பினர் பதவிக்காக முன்மொழியப்பட்டுள்ளன. இவர்களின் நியமனங்களை நாடாளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும்.

ஆனால், அரசியலமைப்பு சபைக்கு சிறிலங்கா அதிபரும், பிரதமரும் நியமித்துள்ள பிரதிநிதிகள் அமைச்சர்களாக இருப்பதால் அவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

19வது திருத்தச்சட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களே அரசியலமைப்புச் சபைக்கான உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாகவும், ஆனால், அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, விஜேதான ராஜபக்ச ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதானது, அதனை மீறும் வகையில் இருப்பதாகவும், தினேஸ் குணவர்த்தன, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோர் கூறியுள்ளனர்.

இந்தநிலையில், அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர்களின் நியமனத்துக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக நாளை கூட்டப்படும் நாடாளுமன்றக் கூட்டத்தில் கடுமையான விவாதங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *