மேலும்

நடுக்கடலில் 54 இலங்கையர்களை திருப்பி அனுப்பியது அவுஸ்ரேலியா

இந்தோனேசியாவில் இருந்து 54 இலங்கையர்கள் உள்ளிட்ட 65 பேருடன் சென்ற அகதிகள் படகு ஒன்றை அவுஸ்ரேலிய சுங்கத் துறையினர் நடுக்கடலில் வழி மறித்து, திருப்பி அனுப்பியுள்ளனர். இந்தோனேசிய காவல்துறை அதிகாரியை மேற்கோள்காட்டி சிட்னி மோர்னிங் ஹெரோல்ட் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை, மியான்மார், பங்களாதேஸ் நாட்டு அகதிகள் 65 பேரும், இந்தோனேசியாவின் ரோட் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்ரேலிய கரையில் இருந்து 500 கி.மீ தொலைவில் உள்ள மேற்கு ரோட் மாவட்டத்தில் உள்ள தீவு ஒன்றுக்கு ஒருகே இரண்டு படகுகள் தத்தளிப்பதை அவதானித்த மீனவர்களே, இவர்களை நேற்றுமுன்தினம் மீட்டனர்.

“அவர்கள் சோர்வடைந்திருந்தனர். கர்ப்பிணியான  ஒரு பெண்ணும் அவர்களுள் இருந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது நலமாக இருக்கிறார்.

அவுஸ்ரேலிய சுங்கத்துறையினரால் தாம் கடந்தமாதம் 26ம் நாள் கைப்பற்றப்பட்டதாகவும், இரண்டு படகுகளைக் கொடுத்து இந்தோனேசியக் கரைக்கு அவர்கள் திருப்பி அனுப்பியதாகவும் அகதிகள் தெரிவித்தனர்.

உணவு, குடிநீர் மற்றும் இந்தோனேசியாவைச் சென்றடைவதற்கான சிறிளவு எரிபொருளை மட்டும் அவர்கள் கொடுத்திருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

படகில் இருந்த 65 பேரில், நான்கு பெண்கள், மூன்று சிறுவர்களும் அடங்கியுள்ளனர். இவர்களில் 54 பேர் இலங்கையர்கள்.  10 பேர் பங்களாதேசையும்,  ஒருவர் மியான்மாரையும் சேர்ந்தவர்.

மேற்கு ஜாவாவில் உள்ள பெலபுஹான் ராதுவில் இருந்து இவர்கள் கடந்தமாதம் 24ம் நாள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இரண்டு நாட்கள் கழித்து அவுஸ்ரேலியக் கடற்படை இவர்களை கைது செய்துள்ளது.

இந்த அகதிகள் படகின் ஆறு மாலுமிகளில் நால்வரை இந்தோனேசியக் காவல்துறை கைது செய்துள்ளது.

ஆறாவது மாலுமி பற்றிய குழப்பமான தகவல்கள் உள்ளன. அவரை அவுஸ்ரேலிய கடற்படை பிடித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.” என்றும் இந்தோனேசிய காவல்துறை தலைவர் ஹிதாயத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்த அகதிகள் மேற்கு திமோர் மாகாணத்தில் உள்ள பெரிய நகரான குபாங்கிற்கு மாற்றப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக அங்குள்ள அமைப்பு ஒன்றின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

அங்கு குடிவரவுத் தடுப்பு நிலையம் ஒன்று இருந்தாலும் அது முழுமையாக நிரம்பியுள்ளதால், அகதிகள் விடுதிகளில் தங்கவைக்கப்படலாம் என்றும்  கூறப்படுகிறது.

இதற்கிடையே, இந்த அகதிகள் நியூசிலாந்து செல்லும் வழியிலேயே அவுஸ்ரேலிய சுங்கத்துறையால் தடுக்கப்பட்டதாக பிறிதொரு செய்தி கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *