மேலும்

திங்கள் இரவு சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் நடந்தது என்ன?

parliament-mps-sleepசிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடத்திய 23 மணிநேரப் போராட்டத்தின் போது, நடந்த சம்பவங்களை, சிலோன் ருடே நாளிதழில், பிரசாத் மஞ்சு எழுதியுள்ள கட்டுரையில் சுவையாக விபரித்துள்ளார். இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்காவின் நாடாளுமன்ற வரலாற்றில் முதன் முதலாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு சாரார் தொடர்ந்து 23 மணித்தியாலங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.  ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் மீளக்கூடிய பின்னர், சபாநாயகர் சமல் ராஜபக்ச ஆர்ப்பாட்டக்காரர்களின் வேண்டுகோள்களை பரிசீலிப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து கடந்த 21ம் நாள் காலை 9.30 மணிக்கு 23 மணி நேரமாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விசாரிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தியும், அவருக்கு அழைப்பாணை விடுத்த ஆணைக்குழுவின் இயக்குனருக்கு எதிராகவுமே, மகிந்தவிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 20ம் நாள் காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்திற்குள் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

கடந்த 20ம் நாள் காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆர்ப்பாட்டத்தை நிறுத்தவில்லை.

அவர்கள் தண்ணீர் போத்தல்களை நாடாளுமன்றத்திற்குள் வருவித்து அருந்தினார்கள். அத்துடன் மதிய உணவிற்கு ஓரிருவராகச் சென்று நாடாளுமன்ற உணவகத்தில் தமக்குப் பிடித்தமான உணவை உண்டனர்.

parliament-night-demo (1)

parliament-night-demo (2)

parliament-night-demo (3)

இரவானதும், கடுமையான மழை பெய்து கொண்டிருந்த போதிலும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய இரவை நாடாளுமன்றத்திற்குள்ளேயே கழிப்பதெனத் தீர்மானித்தார்கள்.

படைக்கல சேவிதர் அனில் சமரசேகர மற்றும் அவரது அதிகாரிகளை, அன்று இரவு நாடாளுமன்ற வளாகத்திற்குள் தங்குமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ச,  அறிவுறுத்தினார்.

இதனால் நாடாளுமன்றத்தில் பணிபுரியும் முக்கிய அதிகாரிகள் அனைவரும் அன்றைய இரவு நாடாளுமன்றத்திற்குள் கழிக்க வேண்டியேற்பட்டது.

இதேபோன்று  சிறப்புப் பாதுகாப்பு நடவடிக்கையை அமுல்படுத்துமாறு நாடாளுமன்ற காவற்துறையினரும் அறிவுறுத்தப்பட்டனர்.

திங்கள் இரவு 7 மணியளவில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமது வீடுகளுக்குச் சென்று இரவுணவை முடித்துக் கொண்டு, சாதாரண உடையுடன் மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் வந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது உடைகளை மாற்றிக் கொண்டு அன்றைய இரவை நாடாளுமன்றத்திற்குள் கழிப்பதற்கான ஆயத்தத்துடன் இருந்தனர்.

இரவு உணவுக்காக தமது வீடுகளுக்குச் செல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உணவு விடுதியில் தமக்கான உணவுகளைப் பெற்றுக் கொண்டனர்.

இவர்களுக்குத் தேவையான பிரைட் ரைஸ், கோழிப் பொரியல், நூடில்ஸ், இடியப்பம், கிறிகொட்டி, மீன், பாண், சம்பல் போன்ற உணவுகளை வழங்குவதில் நாடாளுமன்றப் பணியாளர்கள் சிறப்புக் கவனத்தைச் செலுத்தினர்.

parliament-night-demo (4)

parliament-night-demo (5)

parliament-night-demo (6)

வீடுகளுக்குச் செல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கென ஒதுக்கப்பட்டிருந்த பகுதிக்குச் சென்று இரவுணவை உண்டனர்.

இரவு 9 மணி வரை 90 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சாதாரண உடைகளை அணிந்திருந்தனர்.

வழமையாக தேசிய உடைகளில் அல்லது சேலைகளில் நாடாளுமன்றத்திற்கு வரும் இந்த உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அன்றைய இரவு சாதாரண உடைகளில் இருந்தமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகக் காணப்பட்டது.

றோகித அபேகுணவர்த்தன, ரி.பி.எக்கநாயக்க, குமார வெல்கம, விமல் வீரவன்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சி.பி.ரட்ணயக்க உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சறம் (லுங்கி) மற்றும் ரீ-சேட் அணிந்திருந்தனர்.

அமைச்சர் சி.பி.ரட்ணநாயக்க முன்னாள் அதிபர் அணிந்திருக்கின்ற சிவப்பு நிற சால்வை போன்று நீல நிற சால்வை அணிந்திருந்தார்.

நாமல் ராஜபக்சவும், உதித் லொக்கு பண்டாரவும், ரீ-சேட் அணிந்திருந்தனர். உபேக்சா சுவர்ணமாலி தளர்ச்சியான ரீ- செட் அணிந்திருந்தார். வெள்ளித்திரையின் இராணியான மாலினி பொன்சேகா தளர்வான நீளக்காற்சட்டையும் ரீ-சேட்டும் அணிந்திருந்தார்.

எனினும் கமலா ரணதுங்க, அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மற்றும் சுமேதா ஜி.ஜெயசேன போன்றோர் சேலைகளை அணிந்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிய சிறிய குழுக்களாக ஒன்று கூடி கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். இரவு 11 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்தது.

parliament-night-demo (7)

parliament-night-demo (8)

தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சிலரும் நள்ளிரவு வரை நாடாளுமன்ற வளாகத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிறேம்ஜெயந் மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலர் அனுரா பிரியதர்சன யாப்பா ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் நலன்கள் தொடர்பாக விசாரிக்க மறக்கவில்லை.

இரவு 10 மணியளவில் நாடாளுமன்றப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு பால் கோப்பி மற்றும் சிற்றுண்டிகளையும் வழங்கினர்.

சிலர் தமது கடந்த கால  நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நடுத்தர வயதுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமது பாடசாலை நாட்கள், அக்காலப்பகுதியில் தமக்கு ஏற்பட்ட காதல் அனுபவங்கள் தொடர்பாகவும் முறிந்து போன காதல் அனுபவங்கள் தொடர்பாகவும் பகிர்ந்து கொண்டனர்.

இதன்போது சிலர் உரத்துச் சிரித்த போது அந்தச் சத்தத்தை நாடாளுமன்றத்திற்கும் அப்பால் எதிரொலித்தது.  அப்போது “Order Please, Order Please” என்று கூறி அமைதியை ஏற்படுத்த முயன்றார்.

இவ்வாறான நிகழ்வுகளை பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி வேடிக்கையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

றோகித அபயகுணவர்த்தன, மகிந்தானந்த அளுத்கமகே, விமல் வீரவன்ச, டலஸ் அழகப்பெரும, சி.பி.ரத்நாயக்க, ரி.பி.எக்கநாயக்க ஆகியோர் ‘ஹெல ஜாதிக அபிமன்னே’ எனப் பாடத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து இவர்கள் பல்வேறு தேசப்பற்றுப் பாடல்களைப் பாடினர்.

நாடாளுமன்ற உறுப்பினர் றோகித அபயகுணவர்த்தன இந்த நிகழ்வை சங்கீதக் கச்சேரி போல் மாற்றினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சீட்டுப் பொதிகளை எடுத்து வந்தார். ஜானக வக்கும்பர, றஞ்சித் சொய்சா, செகான் சமசிங்க, உபேக்சா சுவர்ணமாலி போன்ற நாடாளுமன்ற உறுப்பினர் சீட்டு விளையாடினர்.

parliament-night-demo (9)

parliament-night-demo (10)

‘ஓ துசாரா’ என்ற பாடலைப் பாடியவாறு மகிந்தனந்த அளுத்கமே நடனம் ஆடினார். ரி.பி.எக்கநாயக்க, திஸ்ஸ கரலியத்த ஆகியோர் மிகவும் அமைதியாக உட்கார்ந்திருந்தனர்.

இரவு ஒரு மணியளவில் இவர்களுக்கு பால் கோப்பி பரிமாறப்பட்டது. அதிகாலை 2.30 மணியளவில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றுவிட்டனர். பெரும்பாலானவர்கள் நாடாளுமன்றத்திற்குள் விரிக்கப்பட்டிருந்த சிவப்பு நிறக் கம்பளத்திலும் வேறும் சிலர் சபாநாயகர் ஆசனத்திற்கு அருகிலுள்ள படிகளிலும் உறங்கினர்.

இவர்கள் தாம் கொண்டிருந்த சொகுசான வசதிகளைப் புறக்கணித்து விட்டு வெறும் தரையில் படுத்திருந்தனர். நித்திரைக்குச் செல்வதற்கு முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்தனர். ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் தொடர்பான நிகழ்ச்சியையே இவர்கள் பார்த்தனர்.

ஊழல் மற்றும் மோசடி ஆணைக்குழுவிலிருந்து அதன் பொது இயக்குனரைப் பதவியிறக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்துக்களைத் திரட்டும் பணியை றஞ்சித் சொய்சா பொறுப்பேற்றிருந்தார். றஞ்சித் சொய்சா நித்திரைக்குச் செல்லும் முன்னர் 116 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்துக்களைப் பெற்றிருந்தார்.

கையெழுத்துக்கள் பெறப்பட்ட கோவையை சொய்சா தனது தலையின் கீழே வைத்துக் கொண்டே உறங்கினார். இதனைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புத் தனக்குரியது என்பதால் இவர் பொறுப்புடன் செயற்பட்டார்.

நாடாளுமன்றத்திற்குள் உறங்கிய உறுப்பினர்களில் றோகன புஸ்பகுமார நன்றாகக் குறட்டை விட்டு உறங்கினார். இதனால் சிலரது உறக்கம் கலைந்ததாகவும் மாளிகாவத்தையிலுள்ள மரஆலை ஒன்று நாடாளுமன்றத்திற்குள் கொண்டு வரப்பட்டது போன்று தாம் உணர்ந்ததாகவும் அவர்கள் கூறினர்.

நாடாளுமன்றத்துக்குள் கடுமையான குளிராக இருந்ததால், அரைக்கால், அரைக் கைச் சட்டைகளை அணிந்திருந்த உறுப்பினர்களில் சிலர், நாடாளுமன்ற ஊழியர்களிடம் விரிப்புகளை பெற்று போர்த்திக் கொண்டனர்.

சிலர் அதிகாலை 5.30 மணிக்கு நித்திரை விட்டு எழும்பிய கையோடு தமது வீடுகளுக்குச் சென்று காலைக்கடன்களை முடித்து விட்டு மீண்டும் காலை எட்டு மணியளவில் நாடாளுமன்றிற்கு வந்தனர். சிலர் நாடாளுமன்ற வளாகத்திற்குள்ளேயே தமது காலைக்கடன்களை முடித்து உணவு உண்டனர்.

இவ்வாறான செயல்கள் இதுவரை காலமும் சிறிலங்காவின் நாடாளுமன்ற வரலாற்றில் இடம்பெறவில்லை.

இவ்வாறான ஒரு வரலாற்று நிகழ்வானது கடந்த  செவ்வாய் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் நாடாளுமன்ற அமர்வை ஆரம்பித்தவுடன் முடிவுக்கு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *