மேலும்

புலம்பெயர் தமிழ்க்கல்வி – முயற்சிகளும் சவால்களும்: நோர்வேயில் ஆய்வரங்கு

tamil_seminarபுலம்பெயர் தமிழ்க் கல்வி தொடர்பான ஆரோக்கியமான கருத்தாடலுக்கான ஆய்வரங்கு ஒன்றினை நோர்வே தமிழ் 3 வானொலி எதிர்வரும் மே 1ஆம் நாள் (வெள்ளிக்கிழமை), மாலை 5 மணிக்கு ஒஸ்லோவில் ஏற்பாடு செய்துள்ளது.

இன்றைய புலம்பெயர் சமூக வாழ்வியல் சூழலில் இளைய தலைமுறையினருக்கான தமிழ் மொழிக்கல்வி சார்ந்து  பெற்றோர், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் நிலவுகின்ற கேள்விகளை முன்னிறுத்திய ஒரு தேடலாக இந்த ஆய்வரங்கு அமையவிருக்கின்றது.

நோர்வேயிலும் ஏனைய புலம்பெயர் நாடுகளிலும் நீண்ட காலமாகத் தமிழ்க்கல்விக்கு வடிவம் கொடுத்து செயற்பாடுகளை முன்னெடுத்த பல முன்னோடி ஆளுமைகள் இக்கருத்தரங்கில் பங்கேற்றுக் கருத்துரைகளை ஆற்றவுள்ளனர்.

நோர்வேயின் தமிழ்க்கல்வி, கலை, பண்பாட்டு முயற்சிகளின் முன்னோடிகளான கவிஞர் திரு.கார்மேகம் நந்தா, கவிஞர் திரு சிவதாஸ் சிவபாலசிங்கம், கவிஞர் இளவாலை விஜயேந்திரன், ஆசிரியர் திரு. நாகரத்தினம் இரத்தினசிங்கம், பேராசிரியர் தயாளன் வேலாயுதபிள்ளை மற்றும் கனடா நாட்டின் புலம்பெயர் சூழலில் தமிழ் மொழி, பண்பாட்டுத் தளங்களில் நீண்டகால செயற்பாட்டு மற்றும்; வழிநடத்தல் அனுபவம் கொண்ட திரு. சுப்பிரமணியம் இராசரத்தினம், ஐரோப்பிய நாடுகளில் தமிழ்க்கல்விச் செயற்பாடு மற்றும் பாடத்திட்ட உருவாக்கத்திலும் பங்களிப்பு வழங்கிவரும் திருமதி. மல்லீஸ்வரி ஆதவன் (டென்மார்க்) ஆகியோர் கருத்துரைகளை ஆற்றுகின்றனர்.

ஊடகவியலாளர் ரூபன் சிவராஜா தலைமை வகிக்கின்றார்.

“புலம்பெயர் சூழலில் தமிழ்மொழிக் கல்வி”-முயற்சிகளும் சவால்களும் எனும் தலைப்பில் கருத்துரைகளும் அதனைத் தொடர்ந்து பார்வையாளர்களும் இணைந்து கொள்ளும் வகையில் “புலம்பெயர் தமிழ்க் கல்வி சரியான திசையில் பயணிக்கிறதா ?” எனும் கருப்பொருளில் விவாத அரங்கமும் இடம்பெறவுள்ளது. விவாதக்களத்தினை கலாநிதி சர்வேந்திரா தர்மலிங்கம் வழிநடத்தவுள்ளார்

ஆய்வரங்கின் ஒரு பகுதியாக இடம்பெறவுள்ள விவாதக்களத்தில் இளைய தலைமுறையைச் சேர்ந்த தமிழர்களினதும் பெற்றோர்களினதும் அனுபவங்களையும் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் களமாக அமையவுள்ளது.

tamil_seminar

தமிழ் மொழிக்கல்வியில் இன்றைய நிலை தொடர்பான மீள்பார்வையூடாக அதன் போதாமைகளை அடையாளங்கண்டு, அதன் ஆரோக்கியமான முன்னகர்வுக்கு உந்துதலை வழங்குவதற்குரிய நோக்கத்துடன் தமிழ்3 இதனை முன்னெடுக்கின்றது.

பெற்றோர், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இந்த ஆய்வரங்கிலும் கருத்துப்பகிர்விலும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர்.

மே மாதம் 1ம் நாள், மாலை 5 மணிக்கு Statsråd Mathiesens vei 27, 0594 Oslo எனும் முகவரியில் அமைந்துள்ள Linderud பாடசாலை மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது

மேலதிக தொடர்புகளுக்கு radiotamil3@gmail.com  எனும் மின்னஞ்சல் முகவரி அல்லது 90044523 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு தமிழ் 3 வானொலி அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *