மேலும்

இலங்கையர்களுக்கு வருகை நுழைவிசைவு வழங்குகிறது இந்தியா

Tourist-visa-on-arrival-schemeசிறிலங்காவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, இந்திய விமான நிலையங்களில் வைத்து வருகை நுழைவிசைவு வழங்கும் நடைமுறை இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் வருகை நுழைவிசைவு பெறும்  45 நாடுகளின் பட்டியலில் இன்று தொடக்கம் சிறிலங்காவும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மாதம், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த உறுதிமொழியை வழங்கியிருந்தார்.

அதற்கமைய, இன்று முதல், வருகை நுழைவிசைவுத் திட்டத்துக்குள் சிறிலங்காவும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

குறுகிய நாட்கள் இந்தியாவில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்வது, உறவினர்கள், நண்பர்களை சந்திப்பது, குறுகிய கால மருத்துவ சிகிச்சை, போன்றவற்றுக்கு இந்த நுழைவிசைவைப் பயன்படுத்த முடியும்.

குறைந்தது ஆறு மாதங்கள் செல்லுபடியாகத்தக்க கடவுச்சீட்டைக் கொண்டிருக்க வேண்டும்.

குடிவரவு அதிகாரிகள் முத்திரையிடுவதற்கு குறைந்தது இரண்டு வெற்றுப் பக்கங்கள் கடவுச்சீட்டில் இருக்க வேண்டும்.

இந்தியாவில் தங்கியிருந்து செலவிடுவதாற்கான பணம் மற்றும், இருவழிப் பயணச் சீட்டு ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, புதுடெல்லி, சென்னை, மும்பை, கொல்கல்தா, பெங்களூர், திருவனந்தபுரம், கொச்சின், ஹைதராபாத், கோவா ஆகிய 9 விமான நிலையங்களில் மட்டும், 30 நாட்களுக்கு செல்லுபடியாகத் தக்க வருகை நுழைவிசைவு வழங்கப்படும்.

எனினும், தமிழ்நாட்டில் உள்ள  சென்னை தவிர்ந்த, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களில் இந்த வருகை நுழைவிசைவு வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *