மேலும்

வடக்கு மாகாணசபையை ஓரம்கட்டுகிறார் சிறிலங்கா பிரதமர் ரணில்

RANILவடக்கு மாகாண நிலவரங்களை நேரில் மதிப்பீடு செய்வதற்காக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று தொடக்கம், மூன்று நாட்கள் வடக்கு மாகாணத்துக்கான பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். யாழ். நாகவிகாரையில் வழிபாட்டுடன், அவரது வடக்கிற்கான பயணம் ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் பயணத்தின் போது, வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறிலங்காப் படைகளின் உயர்மட்ட அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், மீள்குடியமர்வு விவகாரங்களைக் கையாளும் உயர்மட்ட அதிகாரிகள், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளையும் அவர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

இன்று காலை 11 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேசவுள்ளார்.

அத்துடன், இந்தப் பயணத்தின் போது, யாழ். ஆயர் வண. தோமஸ் சௌந்தரநாயகம், தென்னிந்தியத் திருச்சபையின் ஆயர் வண. டானியல் தியாகராஜா, ஆகியோருடனும் சிறிலங்கா பிரதமர் பேச்சு நடத்தவுள்ளார்.

பலாலி, விமானப்படைத் தளம், காங்கேசன்துறை கடற்படைத் தலைமையகம் ஆகியவற்றுக்கும் செல்லும் ரணில் விக்கிரமசிங்க, நாளை பலாலியில் உள்ள பாதுகாப்புப்படைகளின் தலைமையகத்தில் நடைபெறும் கூட்டம் ஒன்றிலும் பங்கேற்கவுள்ளார்.

இதன்போது, போருக்குப் பிந்திய நிலைமைகள் தொடர்பாக சிறிலங்கா படையினர் தரப்பில் விளக்கமளிக்கப்படவுள்ளது.

அதேவேளை, இந்தப் பயணத்தின் போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சிறிலங்கா பிரதமர் சந்திக்கமாட்டார் என்றும், அதற்கான எந்த நிகழ்ச்சி நிரலும் தயாரிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இனப்படுகொலைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விவகாரத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் பனிப்போர் நிலவி வருகிறது.

அண்மையில் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்திருந்த செவ்வியில், தாம் வடக்கு மாகாணத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தான் இணைந்து பணியாற்றுவேன் என்றும், வடக்கு முதல்வரைச் சந்திக்கமாட்டேன் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

அதுபோலவே, கடந்த 23ம் நாள், வளலாயில் காணிகளை ஒப்படைக்கும் நிகழ்வுக்கு, சிறிலங்கா அதிபருடன் சென்றிருந்த ரணில் விக்கிரமசிங்கவும், வடக்கு மாகாண முதல்வரும் ஒருவருடன் ஒருவர் முகம் கொடுத்துப் பேசிக் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாண முதல்வர் தொடர்பான, ரணில் விக்கிரமசிங்கவின் விமர்சனம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைக் கவலை கொள்ள வைத்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக வடக்கின் நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்கே ரணில் விக்கிரமசிங்க இந்தப் பயணத்தை மேற்கொள்வதாக, ஐதேக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *