மேலும்

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக அதுல் கெசாப் – பரிந்துரைத்தார் ஒபாமா

Atul Keshapசிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிப்பதற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச்செயலராகப் பணியாற்றும், அதுல் கெசாப்பின் பெயரை, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பரிந்துரை செய்துள்ளார்.

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக பணியாற்றிய மிச்சேல் ஜே சிசன் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் துணைத் தூதுவராக நியமிக்கப்பட்ட பின்னர், சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவர் பதவி வெற்றிடமாக உள்ளது.

இந்தப் பதவிக்கே, அதுல் கெசாப்பின் பெயரைப் பரிந்துரை செய்துள்ளார் அதிபர் பராக் ஒபாமா.

அமெரிக்க செனட் அங்கீகாரம் பெற்ற பின்னரே, இவரது நியமனம் உறுதிப்படுத்தப்படும்.

அமெரிக்க வெளிவிவகாரச் சேவை அதிகாரியான அதுல் கெசாப், கடந்த 2013ம் ஆண்டில் இருந்து, தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலராக உள்ள நிஷா பிஸ்வாலுக்கு அடுத்த நிலையில், பணியாற்றி வருகிறார்.

முன்னதாக இவர், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு பிரிவின் மூத்த அதிகாரியாக பணியாற்றினார்.

அதற்கு முன்னர், 2010 தொடக்கம் 2012 வரை, இந்தியா, நேபாளம், பங்களாதேஸ், சிறிலங்கா, பூட்டான், மாலைதீவு ஆகிய நாடுகளை உள்ளடக்கிய தெற்கு மத்திய ஆசிய விவகாரங்கள் பிரிவின் பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.

மேலும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் அனைத்துலக விவகாரங்களுக்கான பிரிவில், ஐ.நா மனித உரிமைகளுக்கான பணிப்பாளர், புதுடெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பிரதி அரசியல் கொன்சிலர், தேசிய பாதுகாப்புச் சபையில் தூர கிழக்கு மற்றும் வடஆபிரிக்க  விவகாரங்களுக்கான பணிப்பாளர், உள்ளிட்ட பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *