சீன அதிபரிடம் சரணடைந்தார் சிறிலங்கா அதிபர்
தமது அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் மீள ஆரம்பிக்கப்படும் என்று, சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
பீஜிங்கில் இன்று நடந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான பேச்சுக்களின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் லியூ ஜியான்சோ, இந்த தகவலை வெளியிட்டார்.
“இரண்டு தரப்புகளுமே மீண்டும் இந்த திட்டத்தைத் தொடர்வதற்கு விருப்பம் வெளியிட்டன.
ஆனால், எந்தவொரு முக்கியமான மாற்றங்களும் அதில் செய்வதற்கு, அதில் தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது.
பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டதும், துறைமுக நகரப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் தெரிவித்தார்.
துறைமுக நகரத் திட்ட விவகாரத்தில் என்ன நடந்தது என்றும், பணிகள் நிறுத்தப்பட்டது தற்காலிகமாகவே என்றும் சிறிலங்கா அதிபர் வலியுறுத்தியிருந்தார்.
சீனத் தரப்பில் பிரச்சினை என்பது பொய் இல்லை என்றும், இவை தீர்க்கப்பட்ட பின்னர், திட்டம் தொடரும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இரண்டு நாட்டுத் தலைவர்களும், எந்தவொரு கடன்கள் தொடர்பான வட்டி வீதம் குறித்த முக்கியமான மீள்பேச்சுக்களை நடத்தும் அளவுக்குச் செல்லவில்லை.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் சீனா நம்பிக்கை கொண்டுள்ளது.
இரு நாட்டுத் தலைவர்களும், இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிப்பது, இராணுவக் கருவிகளை வழங்குவது உள்ளிட்ட ஒத்துழைப்புக் குறித்து கலந்துரையாடினர்.
பீஜிங்கினால் முன்மொழியப்பட்ட ஆசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வங்கியால் நிதியிடப்படும் திட்டங்கள் உள்ளிட்ட சீனாவின் முதலீடுகளை் சிறிலங்காவில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் வாதிட்டார்.
இரண்டு நாட்டுத் தலைவர்களுக்கும் முன்பாக, சுகாதார பராமரிப்பு, கட்டுமானம், நகர அபிவிருத்தி சார்ந்த நான்கு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டன.” என்றும் அவர் தெரிவித்தார்.