மேலும்

சீனாவின் பட்டுப்பாதை திட்டத்துக்குப் போட்டியாக இந்தியாவின் பருத்திப் பாதை திட்டம்

indian-confrenceசிறிலங்கா உள்ளிட்ட நாடுகளை இணைத்து சீனா உருவாக்க எத்தனிக்கும், கடல்சார் பட்டுப்பாதைத் திட்டத்தைத் தோற்கடிக்க, இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளை உள்ளடக்கிய பருத்திப் பாதை திட்டத்தை உருவாக்க இந்தியாவும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளுடன் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை  முன்னேற்றுவதன் மூலம், இந்த பருத்திப் பாதையை உருவாக்க இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில், கடந்த வெள்ளிக் கிழமை ஆரம்பமாகி நேற்று முடிவடைந்த , ‘இந்தியாவும் இந்தியப் பெருங்கடலும்’ என்ற தலைப்பிலான, மூன்று நாள் அனைத்துலக மாநாட்டில் இதுபற்றிக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர், உள்ளிட்டோர் பிராந்தியத்தில் இந்தியாவின் எதிர்பார்ப்புகள் குறித்து உரையாற்றியுள்ளனர்.

இந்தியப் பெருங்கடல் நாடுகளான, மொறிசியஸ், சீசெல்ஸ், சிறிலங்கா ஆகிய நாடுகளுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட பயணத்தை அடுத்து இந்த மாநாடு இடம்பெற்றுள்ளது.

பட்டுப்பாதைத் திட்டத்தின் மூலம், இந்தியப் பெருங்கடலில் உள்ள நாடுகளை கடல் மற்றும் தரைவழியாக ஒன்றிணைத்து பொருளாதார பட்டி ஒன்றை சீனா உருவாக்க முயற்சித்து வருகிறது.

இந்தநிலையில், இந்தியா தனது பலத்தைப் பெருக்க வேண்டும் என்பது குறித்து மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என்று, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் வலியுறுத்தியிருந்தார்.

“உலக கொள்கலன் கப்பல்களில் பாதி இந்தியப் பெருங்கடல் வழியாகவே பயணிக்கின்றன.

மூன்றில் ஒரு பங்கு சரக்கு கப்பல்களும், மூன்றில் இரண்டு பங்கு எண்ணெய் தாங்கி கப்பல்களும் இந்த வழியாகவே பயணம் செய்கின்றன. உலகின் ஏனைய பகுதிக்கு இந்த வழியாகவே நான்கில் மூன்று பங்கு கப்பல்கள் ஏனைய பிராந்தியங்களுக்குச் செல்கின்றன.

இந்தியாவின் 90 வீதமான ஏற்றுமதியும், 90 வீதமான எண்ணெய்  இறக்குமதியும், கடல் வழியாகவே இடம்பெறுகின்றன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *