மேலும்

தென்னந்தோட்டத்தில் ஒளிந்திருந்த மைத்திரி – மகிந்தவிடம் இருந்து தப்பியது எப்படி?

maithri-final-campain (1)சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால் குடும்பத்துடன் கொல்லப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில், தொடங்கஸ்லந்தை பகுதியில் உள்ள தென்னந்தோட்டத்தில், தேர்தல் நாளன்று இரவு முழுவதும், ஒளிந்திருந்துள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அண்மையில் பிபிசி சந்தேசயவுக்கு அளித்த செவ்வியில், தேர்தலில் தோல்வியுற்றிருந்தால் தாம் குடும்பத்துடன் கொல்லப்பட்டிருப்பேன் என்று மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

இந்தநிலையில், அவர் எவ்வாறு தேர்தல் நாளன்று குருநாகல் மாவட்டத்தில் உள்ள – மாத்தளை மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தொடங்கஸ்லந்த கிராமத்தில் உள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் ஒளிந்திருந்தார் என்ற விபரத்தை வெளியிட்டுள்ளது.

தேர்தல் நாளான ஜனவரி 8ம் நாள், பொலன்னறுவவில் தனது வாக்கை அளித்த மைத்திரிபால சிறிசேன,  தமது வீட்டை விட்டு வெளியேறி இரகசிய இடம் ஒன்றில் மறைந்திருக்க முடிவு செய்தார்.

தேர்தலுக்கு மறுநாள் முடிவுகள் வெளியான பின்னர், வீட்டில் இருந்தால் தமக்கும், தமது குடும்பத்தினருக்கும் ஆபத்து விளைவிக்கப்படும் என்ற நம்பகமான தகவல் அவருக்கு கிடைத்திருந்தது.

தேர்தல் நாளன்று இருள் சூழ்ந்ததும், வாகனங்களின் தொடரணி தம்புள்ளையைக் கடந்து, மைத்திரிபால சிறிசேனவின் நெருங்கிய நண்பரான கிரன் அத்தப்பத்தவுக்குச் சொந்தமான தொடங்கஸ்லந்தவில் உள்ள தென்னந்தோட்டத்தை நோக்கிச் சென்றது.

கிராமம், இருளில் மூழ்கியிருந்த போது, கறுப்பு நிற பிஎம்.டபிள்யூ கார், மைத்திரிபால சிறிசேனவுடன் அந்த தோட்டத்தை அடைந்தது.

மறைந்திருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு எதையும் விட்டு வைக்காத வகையில், குறுகிய இருள் சூழ்ந்த வீதி வழியாக அந்த வாகனம் தென்னந்தோட்டத்துக்குள் வளைந்து வளைந்து சென்றது.

சரியான இடம் வெளியே கசிவதை தடுப்பதற்காக, தொடரணியில் இருந்த ஏனைய வாகனங்கள், ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டன.

கிராம மக்கள் விழிப்படைவதை தடுப்பதற்காகவும், ஏனைய வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

பின்னர் சில வாகனங்கள் பாதுகாப்பான வளைவான அந்த தோட்ட வீதியில், ஒன்றன் பின் ஒன்றாக, தென்னை மரங்களுக்குக் கீழ் நிறுத்தப்பட்டன.

அந்தப் பகுதியைச் சுற்றி சாத்தியமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இராப்போசனத்துக்குப் பின்னர், மைத்திரிபால சிறிசேன, அவரது மனைவி ஜெயந்தி புஸ்பகுமாரி, பிள்ளைகள் தஹம், சதுரிகா, தாரணி,  மருமகன் திலின, மற்றும் பேரப் பிள்ளைகள், வாக்களிப்பு முடிவுகளை அவதானித்த பின்னர் ஓய்வெடுத்தனர்.

பல தொலைபேசி அழைப்புகள் வந்தன. சில அதிகாரிகள் கொழும்பு நிலவரங்கள் எடுத்துக் கூறினர்.

எங்கே இருக்கிறீர்கள் என்று சிலர் கேள்வி எழுப்பிய போது, பொலன்னறுவவில் என்று மைத்திரிபால சிறிசேன பதிலளித்தார்.

அங்குள்ள வீட்டில் இருப்பது நல்லதல்ல என்று கவலையுடன் கூறிய அவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறும் அறிவுரை கூறினர்.

கொழும்பில் திடீரெனப் படையினர் குவிக்கப்பட்டு வருவதாகவும், பதற்றம் அதிகரித்து, சதிப்புரட்சி ஒன்று மேற்கொள்ளப்படக் கூடும் என்றும் மைத்திரிபால சிறிசேனவுக்கு தகவல் கிடைத்தது.

மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்ட சில தொலைபேசி அழைப்புகளுக்கே பதிலளித்தார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்தவர்கள் பலரையும் அவரால் நம்ப முடியவில்லை. அந்த நெருக்கடியான நேரத்தில் மறைந்திருக்கும் இடம் வெளிப்படுத்தப்பட்டால், பேரழிவு ஏற்பட்டிருக்கும்.

தொலைபேசியில் அழைத்தவர்கள் சிலர், குறிப்பாக, பொலன்னறுவவில் இருக்கிறாரா என்பதையே அறிய விரும்பினர்.

அது ஒரு நீண்ட இரவாக இருந்தது. பொதுவேட்பாளர் வேட்பாளர் உறுதியாக முன்னேறிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

வெற்றி உறுதியானதும், மகிழ்ச்சியுடன், மறுநாள் காலையில் கொழும்பு நோக்கிப் புறப்பட முடிவு செய்தார்.

அவரது கார் புறப்படத் தயாரான போது, உதவியாளர் ஒருவர், பி.எம்.டபிள்யூ காரின் முன்புறமாக சிறிலங்காவின் தேசியக் கொடியை கட்டிவிட்டார்.

தன்னைப் பாதுகாப்பதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்காக கிரன் அத்தப்பத்து மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் மைத்திரிபால சிறிசேன.

சிங்கக்கொடி பறக்கவிடப்பட்ட காரில் மைத்திரிபால சிறிசேன தொடங்கஸ்லந்தவில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்” என்றும் அதில் விபரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *