மேலும்

திருமலையை இந்தியாவுக்கு வழங்கியதால் பயங்கர விளைவுகள் ஏற்படும் – எச்சரிக்கிறார் திஸ்ஸ விதாரண

tissa vitharanaதிருகோணமலையை இந்தியாவுக்கு வழங்கியமை எதிர்காலத்தில் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்த வழிவகுக்கும் என்று முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமாசக் கட்சித் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண எச்சரித்துள்ளார்.

“13ஆவது திருத்தம் இந்தியாவின் தேவைக்காக எம் மீது பலாத்காரமாக திணிக்கப்பட்டது.அந்த நாட்டைப் போன்று இங்கு அதிகாரத்தை பரவலாக்க முடியாது.

எமது நாட்டுக்கென ஒரு அரசியல் வரையறை உள்ளது. அதற்கமையவே அதிகார பரவலாக்கல் இடம்பெற வேண்டும்.எனவே இந்தியப் பிரதமர் மோடி எமக்கு யோசனைகளை முன்வைக்கலாம்.

ஆனால் 13ஆவது திருத்தத்தைத் தான் நடைமுறைப்படுத்த வேண்டுமென அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் அவருக்கு கிடையாது. நாம் இந்தியாவுக்கு அடிமைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

உலகில் இன்று பொருளாதாரத்தில் சீனா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. எனவே கடந்த ஆட்சியில் சீனாவிடம் உதவி பெற்று பல அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தவறேதும் இல்லை.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாததன் காரணமாகவே, அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா கடந்த ஆட்சியை கவிழ்த்து ஐ.தேக ஆட்சிக்கு வித்திட்டது.

தெற்காசியாவில் அமெரிக்காவின் பலத்தை அதிகரிக்க செய்து சீனாவை ஓரம் கட்டும் முயற்சியை நரேந்திர மோடி மேற்கொண்டு வருகிறார். அதற்காகவே இங்கு வருகை தந்தார்.

ஒரு நாட்டின் எரிபொருள் தொடர்பான ஆதிக்கம் அந்நாட்டு அரசிடமே இருக்க வேண்டும். ஆனால் இன்று திருகோணமலை இந்தியாவிடம் தாரை வார்க்கப்பட்டு எரிபொருள் ஆதிக்கமும் அந்நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது எதிர்காலத்தில் எமது நாட்டில் பயங்கரமான சூழ்நிலைகளை ஏற்படுத்தும். இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும். இந்தியாவுக்கு நாம் அடிமைப்படும் நிலைமை ஏற்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *