மேலும்

இந்திய விமானப்படை உலங்குவானூர்திகளிலேயே தலைமன்னார், யாழ். செல்கிறார் மோடி

Mi-17B-5சிறிலங்காவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது நாளான இன்று யாழ்ப்பாணம், தலைமன்னார், அனுராதபுர ஆகிய இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்ளவுள்ளார்.

அவரதும், அவரது பாதுகாப்பு அதிகாரிகளினதும் பயணங்களுக்கென இந்திய விமானப்படையின் மூன்று உலங்கு வானூர்திகள் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

கடந்த 2013ம் ஆண்டு கொமன்வெல்த் மாநாட்டுக்காக சிறிலங்கா வந்திருந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரொன், யாழ்ப்பாணத்துக்கு சிறிலங்கா விமானப்படையின் விமானங்களிலேயே பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

கடந்த ஆண்டு சீன அதிபரின் பயணத்தின் போதும், 2009இல் ஐ.நா பொதுச்செயலரின் பயணத்தின் போதும், சிறிலங்கா விமானப்படை விமானங்களே பயன்படுத்தப்பட்டன.

எனினும், இந்தியப் பிரதமரின் பயணங்களுக்காக இந்திய விமானப்படை உலங்குவானூர்திகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இன்றுகாலை 11 மணியளவில் தலைமன்னாருக்குச் செல்லும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு இந்தியாவின் உதவியுடன் புதிதாக அமைக்கப்பட்ட மதவாச்சி – தலைமன்னார் இடையிலான தொடருந்துப் பாதையில் தொடருந்துச் சேவையை ஆரம்பித்து வைப்பார்.

அதையடுத்து, பிற்பகல் 12.30 மணியளவில், உலங்குவானூர்தி மூலம், யாழ். மாநகரசபை மைதானத்தில் சென்று தரையிறங்கும் மோடி, யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில், வடக்கு மாகாண முதலமைச்சர்  சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களை சந்தித்துக் கலந்துரையாடுவார்.

அதைத்தொடர்ந்து, கீரிமலைக்குச் செல்லும் இந்தியப் பிரதமர், அங்கு நகுலேஸ்வரம் சிவன் கோவிலில் வழிபாடுகளை செய்த பின்னர், கீரிமலைப் பகுதியில் இந்திய உதவியுடன் அமைக்கப்பட்ட வீடு ஒன்றைப் பயனாளியிடம் கையளிப்பார்.

யாழ்ப்பாணம் செல்லும் இந்தியப் பிரதமருக்கு, வடக்கு மாகாண ஆளுனர் எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார, மதிய விருந்து அளித்து கௌரவிப்பார்.

அதையடுத்து, யாழ் பொதுநூலகம் அருகே இந்திய உதவியுடன், அமைக்கப்படவுள்ள கலாசார நிலையத்துக்கு மோடி அடிக்கல் நாட்டுவார்.

இதேவேளை, இந்தியப் பிரதமரின் பயணத்துக்காக சிறிலங்கா வந்துள்ள இந்திய விமானப்படையின் எம்.ஐ 8 உலங்கு வானூர்திகள் நேற்றுமுன்தினம், யாழ்ப்பாணத்தில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தன.

1990ம் ஆண்டு துவக்கத்தில் இந்தியப் படைகள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய பின்னர், இந்திய விமானப்படையின் உலங்கு வானூர்திகள் முதல்முறையாக யாழ்ப்பாணத்தில் தரையிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *