மேலும்

அரசுடன் முரண்படாத மூலோபாயத்தை கடைப்பிடிக்க வேண்டும் – கூட்டமைப்புக்கு மோடி அறிவுரை

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன் முரண்படாத வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது மூலோபாயங்களில் மாற்றங்களைச் செய்ய முன்வர வேண்டும் என்றும், பொறுமையாக விடயங்களைக் கையாளுமாறும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

நேற்றுமாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுக்களின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தப் பேச்சுக்கள் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் திருப்தி வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, இந்தச் சந்திப்புக் குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போது, கூட்டு சமஷ்டி என்ற சொற்பதத்தை பயன்படுத்தியிருந்தார்.

அதுதொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கருத்துக்களை பரிமாறியிருந்தார். அதன் பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தோம்.

அப்போது இந்தியா என்றும் தமிழ் மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பக்கபலமாக இருக்கும் என்று இந்தியப் பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார்.

அத்துடன் ஆட்சிமாற்றம் இடம்பெற்றுள்ளது. அவர்களுக்கான காலஅவகாசத்தை வழங்குவது அவசியம்.

கடந்த அரசாங்கங்கள் ஆட்சி செய்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முரண்போக்கினை கொண்டிருந்தது.

புதிய அரசாங்கத்தின் மனநிலையில் சில மாற்றங்களை என்னால் உணரமுடிகிறது.

ஆகவே நீங்கள் பொறுமையைக் கடைப்பிடிப்பதுடன், கடந்த காலத்தில் மேற்கொண்ட அணுகுமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி புதிய காத்திரமான அணுகுமுறைகளை மேற்கொள்வது சிறந்தது என ஆலோசனையையும் எமக்கு வழங்கினார்” என்று குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்தச் சந்திப்புக் குறித்து கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்  பிரேமச்சந்திரன்,

“இனப்பிரச்சினைக்கான தீர்வு ஏற்படுகின்ற போது வட-கிழக்கு இணைப்பு என்பது ஒரு முக்கிய விடயம். இந்திய- சிறிலங்கா உடன்பாடு என்பது வட- கிழக்கு இணைப்பு என்ற அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது.

பின்னர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் அந்த உடன்பாடும் இடைநிறுத்தப்பட்டது.

வடகிழக்கு என்பது தமிழ் மக்களுடைய வரலாற்று பூர்வமான தாயகப்பிரதேசம். ஆகவே இனப்பிரச்சினை தீர்வுக்கு வடகிழக்கு இணைப்பு என்பது முக்கியமாகும்.

மக்கள் முழுமையாக குடியேற்றப்பட வேண்டும். சொற்ப அளவிலேயே மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். இன்று தான் அதுவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மிகுதி எப்போது நடக்கும் என்பது தெரியாது ஆகிய விடயங்களை உள்ளடக்கிய கருத்துக்களை இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு எடுத்து விளக்கினோம்.

அதன்போது கருத்து வெளியிட்ட இந்தியப் பிரதமர் சிறிலங்கா அதிபரை சந்தித்த போது,அவர் காணி மற்றும் அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பில் சாதகமான கருத்துக்களை கொண்டிருக்கிறார்.

அவர் எனக்கு உறுதியளித்ததாக நான் சொல்ல மாட்டேன் ஆனால் இவை தொடர்பில் அவர் ஒரு சாதகமான மனநிலையை கொண்டிருப்பதாக நான் உணர்கிறேன்.

இது ஒரு புதிய அரசாங்கம் ஆகவே நீங்கள் அவர்களுக்கு காலஅவகாசம் வழங்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பொறுமை தேவை.

முன்னர் ஏனைய அரசாங்கங்களோடு அணுகியதைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அரசாங்கத்தோடும் அணுகக்கூடாது.

இந்த அரசாங்கம் பல மாற்றமான கருத்துக்களை கொண்டிருக்கிறது. ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது மூலோபாயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலோபாயக் குழு இவை தொடர்பில் விரிவாக ஆலோசித்து புதிய மூலோபாயங்கள் தந்திரோபாயங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.

அவ்வாறான தந்திரோபாயங்களின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேசவேண்டும்.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இந்தியா எப்பொழுதும் உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

இந்தியா மீது உங்களுக்கு நம்பிக்கை இருகின்றது தானே  என  அவர் எம்மிடத்தில் வினவியபோது நாம் ஆம் என பதிலளித்தோம்.

அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிதானமாக செயற்பட வேண்டுமென எமக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்தியப்பிரதமர் சிறிலங்காவின் புதிய அரசு மீது நிறைவான நம்பிக்கை வைத்திருப்பதை எம்மால் உணரமுடிந்தது.

இந்திய பிரதமர் சிறிலங்காஅரசு மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக இலங்கை அரசு செயற்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *