மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்தார் மோடி

modi-tnaசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

இன்றுமாலை நடந்த இந்தச் சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பில்  இந்தியப் பிரதமருடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இந்தியத் தூதுவர் வை.கே.சின்கா, ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கொழும்பில் உள்ள தாஜ் சமுதிரா விடுதியில் மாலை 6.15 மணியளவில் தொடங்கிய இந்தச் சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் வரை இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கக் கூடிய ”ஒத்துழைப்புடனான சமஷ்டியே” (cooperative federalism) சிறிலங்காவில் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வைத் தர முடியும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இதே விடயத்தை வலியுறுத்தி இன்று சிறிலங்கா  நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மோடி , தன்னை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளிடம் அதனையே வலியுறுத்தியதாக சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசியிடம் கூறினார்.

இந்தியாவின் ஒரு மாநிலத்தின் முதல்வராக நீண்ட காலம் இருந்தவர் என்ற வகையிலும் இந்திய பிரதமராக ஒரு வருடம் கடமையாற்றியவர் என்ற வகையிலும் தனது அனுபவங்கள் மூலமே தான் இதனை கூறுவதாக மோடி குறிப்பிட்டதாக பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அதேவேளை, புதிய அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள இனப்பிரச்சினை தீர்வு, காணிப் பிரச்சினை, கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் பிரச்சினை உள்ளிட்டவைகள் குறித்து இந்திய பிரதமருக்குத் தெளிவுபடுத்தியதாக சந்திப்பில் பங்கேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள இந்த விடயங்களை செயற்படுத்த இந்தியா அழுத்தம் கொடுத்து கூட்டமைப்புக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என இந்திய பிரதமரிடம் கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

அதற்கு பதில் அளித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புதிய அரசாங்கம் அந்த விடயங்களை செய்து முடிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்துமாறும் கூறியதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

எல்லாவற்றையும் உடனடியாக செய்து முடிக்கலாம் என நம்ப வேண்டாம் எனவும் படிப்படியாக செய்து முடிக்கப்படும் வரை பொறுமை காக்குமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை வழங்கியதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *