மேலும்

இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீனாவின் சவால்களை முறியடிக்குமா இந்தியா?

modi-maithri-talks (3)இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீனாவின் கை ஓங்கினால் அது இந்தியாவின் அதிகார சக்தியாக மிளிரவேண்டும் என்கின்ற இலட்சியத்தை முடிவுக்குக் கொண்டு வருவதையே குறித்து நிற்கும். இதன்பின்னர், இந்தியா இப்பிராந்தியத்தின் அதிகாரத்துவ சக்தியாக விளங்குவது கடினமானதாகும்.

இவ்வாறு “ஹிந்துஸ்தான் ரைம்ஸ்” நாளிதழில் Brahma Chellaney எழுதியுள்ள ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

இந்திய மாக்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த மூன்று நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணிப்பதானது வெளிச்சக்திகள் இப்பிராந்தியத்தில் தலையீடு செய்வதைத் தடுப்பது உட்பட இந்தியாவின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நோக்காகக் கொண்டுள்ளது.

இப்பிராந்தியத்தில் சீனாவின் கை ஓங்கினால் அது இந்தியாவின் அதிகார சக்தியாக மிளிரவேண்டும் என்கின்ற இலட்சியத்தை முடிவுக்குக் கொண்டு வருவதையே குறித்து நிற்கும். இதன்பின்னர், இந்தியா இப்பிராந்தியத்தின் அதிகாரத்துவ சக்தியாக விளங்குவது கடினமானதாகும். பாகிஸ்தானின் மேற்குப்புறமாகவும் சீனாவின் வடக்கு மற்றும் தெற்குப் புறமாகவும் இந்தியா தனது அதிகாரத்தைப் பலப்படுத்த முடியாதிருக்கும்.

இந்தியாவின் தந்திரோபாய மற்றும் மூலோபாய பிரதிகூலங்கள் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் இந்தியா கொண்டுள்ள செறிவான பூகோள நலன்கள் மூலம் ஈடுகட்டப்படுகிறது. உலகின் முதன்மையான சக்தி மற்றும் வர்த்தக கடல்வழிகளை உள்ளடக்கியுள்ள இந்திய மாக்கடலில் இந்தியத் தீபகற்பம் கொண்டுள்ள சாதகமான கேந்திர முக்கியத்துவமானது சீனாவின் துரித கரையோரப் பட்டுப் பாதைத் திட்டம் உட்பட முக்கிய கடல் தொடர்பு வழிகளைக் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

இந்தியா சாதகமான கடல்சார் இருப்பைக் கொண்டிருப்பினும், அயல்நாடுகளுடனான எல்லைத் தகராறு இந்தியா கடலை விட நிலத்தில் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இவ்வாறான எல்லைத் தகராறில் இந்தியா தனது பலத்தைச் செலவழிப்பதால் தான் ஒரு பெரிய கடற்பலத்தைக் கொண்டுள்ள ஒரு நாடு என்ற உண்மையை விளங்கிக் கொள்ளவில்லை.

இந்தியா கூட்டணிக் கட்சிகளால் 1989ல் ஆளப்பட்ட காலத்திலிருந்து கடந்த 25 ஆண்டுகளாக இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் தனக்கான செல்வாக்கை நிலைநாட்டுவதை இராஜதந்திர ரீதியாக புறக்கணித்து வருகிறது. இந்த நிலை அண்மைக்காலத்தில் மிகவும் மோசமாகியது. 34 ஆண்டுகளின் பின்னர் சீசெல்சுக்கும் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்காவுக்கும் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியப் பிரதமராக மோடி விளங்குகிறார்.

இந்தியா நீண்டகாலமாக இந்திய மாக்கடலில் தனது நலன்களைத் தட்டிக்கழித்ததன் காரணமாக சீனா இப்பிராந்தியத்தில் தனது மூலோபாய நலனை அடைவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது.

பல பில்லியன் டொலர் பெறுமதியில் பல்வேறு திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் சீனா இந்தியாவின் இயற்கையான பூகோள கேந்திர முக்கியத்துவத்தைக் குறைத்து வருவதுடன், இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் தனது செல்வாக்கைப் பலப்படுத்துவதுடன், தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடலிலும் தனது இருப்பைப் பலப்படுத்தி வருகிறது.

இந்திய மாக்கடலானது ஆசியாவிலும் அதற்கப்பாலும் அகன்ற பூகோள அரசியல் மற்றும் வலுச்சமநிலையை வடிவமைப்பேன் என உறுதியளிக்கிறது. எனினும், இந்தியாவானது தனது சொந்த மூலோபாய வளாகத்தில் தனது திறனை வலுப்படுத்த வேண்டும்.

‘இந்திய மாக்கடலை எந்தவொரு சக்திகள் கட்டுப்படுத்தினாலும் கூட, இந்தியாவின் கடல் சார் வர்த்தகம் மற்றும் இந்தியாவின் சுதந்திரச் செயற்பாடுகள் போன்றன இம்மாக்கடலில் தனித்துவம் பெற்றுள்ளது என்பதை வரலாறு எடுத்துரைக்கிறது’ என ஜவர்ஹலால் நேரு குறிப்பிட்டிருந்தார்.

தனியொரு நாட்டின் பெயரைக் கொண்டுள்ள ஒரேயொரு மாக்கடலாக இந்திய மாக்கடல் விளங்குகிறது என்பது இங்கு முரணாகும்.

இந்திய மாக்கடலில் மூலோபாய நலன்களையும் கடல் சார் இருப்பை அடைவதற்காகவும் ‘முத்துமாலை’ என்கின்ற மூலோபாயத் திட்டத்தை சீனா விடாமுயற்சியுடன் அமுல்படுத்தி வருகிறது. சீனாவின் முத்துமாலை மூலோபாயத் திட்டமானது ’21வது நூற்றாண்டின் கரையோர பட்டுப்பாதைத் திட்டமாக’ மீள்பெயரிடப்பட்டுள்ளதன் மூலம் சீனா தனது சொந்த நோக்கங்களை மூடிமறைப்பதற்கான வழியைத் தேடியுள்ளது.

சீனாவின் மீள்பெயரிடல் மூலோபாயத்தை சீன அதிபர் ஆரம்பித்து வைத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக ‘முத்துமாலை’ என்கின்ற பட்டுப்பாதைத் திட்டமானது சீனாவை அதிகார சக்தியாக மாற்றுவதன் மூலம் ஆசியாவின் பூகோள அரசியல் வரைபடத்தை மீளவரைவதற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

சீனாவின் பட்டுப்பாதைத் திட்டமானது சீனாவின் முதலீடு, உதவி மற்றும் தனது நீள்வட்டப்பாதையில் உள்ள நாடுகளில் துறைமுகங்கள், தொடருந்துப் பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் போன்றவற்றைக் கட்டுவதன் மூலம் மேலும் பலப்படுத்தப்படுகின்றது. இவ்வாறான கட்டுமாணங்கள் சீனாவின் இராணுவ மேலாதிக்கத்திற்கு வலுச்சேர்ப்பதாக உள்ளது.

சீனாவின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக நாடுகளை ஒன்றாக்கி அவர்களின் நலன்களுக்காகவே சீனாவை ஆசியாவின் முக்கிய வலுச்சக்தியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என அந்த நாடுகளை நம்பிக்கை கொள்ளச் செய்வதற்காகவும் சீனாவால் முன்னெடுக்கப்படும் மென்மையான மற்றும் கடும்போக்கான தந்திரோபாயங்களைச் செயற்படுத்துவதற்கு சீனாவின் பட்டுப்பாதைத் திட்டம் இன்றியமையாததாகும்.

சீனாவின் நிதியுதவியுடன் கொழும்புத் துறைமுகத்தில் கட்டப்பட்டுப் புதிதாகத் திறக்கப்பட்ட முனையத்தில் அண்மையில் இரண்டு சீன நீர்மூழ்கிக்கப்பல்கள் தரித்து நின்றமையானது சீனாவின் பொருளாதார மற்றும் இராணுவ நலன்கள் ஒருசேர செல்வாக்குச் செலுத்துவதற்கான எடுத்துக்காட்டாகும்.

இந்திய மாக்கடலில் தனது இராணுவ இருப்பிடத்தை நிலையாக்கிக் கொள்வதற்கு சீனா மூன்று தளங்களை விரிவாக்கியதன் மூலம் நிரூபணமாகிறது. ஹோர்மஸ் நீரிணையின் வாயிலில் மூலோபாய இருப்பிடத்தைக் கொண்டுள்ள பாகிஸ்தானின் குவாடர் துறைமுகம் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. தனது வர்த்தக செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்காக அன்றி, தனது கடற்படையின் இருப்பைப் பலப்படுத்துவதற்காக குவாடரில் சீனாவால் கட்டப்பட்ட துறைமுகத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் சீனா தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது.

இந்திய மாக்கடலில் இந்தியாவின் கடல் வளாகத்தில் தற்போது அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கு இந்தியாவுக்குச் சவாலாக உள்ளதால், இதனை எதிர்ப்பதற்கான நம்பகமான மூலோபாயத்தை மோடி விரிவாக்கிக் கொள்ள வேண்டும். புதிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்ட தனது பிராந்திய அயல்நாடுகளுக்கான மோடியின் பயணமானது இந்திய மாக்கடலில் தனக்கெதிரான சவாலை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் ஆரம்பமாக உள்ளது.

மாலைதீவுக்கான தனது பயணத்தின் மூலம் மோடி வெற்றிகரமாக மாலைதீவில் தனது உறவை விரிவாக்கியுள்ளார். ஆனால் சிறிலங்காவில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுறும் வரை சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மோடி பிற்போட்டிருக்கலாம். குறிப்பாக புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு மாதத்தின் பின்னர் இந்தியாவுக்குப் பயணம் செய்ததன் பின்னர் மோடி சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொள்கிறார்.

இரு தரப்புகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட புதிய பேச்சுக்களில் மோடி நம்பிக்கை கொண்டுள்ளார். மோடியின் இராஜதந்திர நகர்வுகள் மட்டும் போதுமனதல்ல. எடுத்துக்காட்டாக, சிறிலங்கா அதிபர் சிறிசேன சீனா மற்றும் பாகிஸ்தானுக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீனாவின் இராணுவ முற்றுகையைத் தடுப்பதற்கு இந்தியா தனது கடற்பலத்தை நவீனமயப்படுத்தி மேலும் விரிவுபடுத்த வேண்டிய தேவையுள்ளது. இப்பிராந்தியத்தில் சீனாவின் தலையீட்டைத் தடுப்பதற்காக இந்தியா போதியளவில் தனது கடற்படையைத் தயார்ப்படுத்தவேண்டும். இமயமலை யுத்தம் ஒன்று மீண்டும் ஏற்படாது தடுப்பதற்கு சீனாவின் பொருளாதார முற்றுகையைத் தடுக்கவேண்டும்.

சீன இராணுவத்தினர் சமாதான காலத்தில் இமயமலை எல்லையில் இந்திய இராணுவத்தினர் மும்முரமாகப் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுவதற்கான வழியை ஏற்படுத்தியிருந்தாலும் கூட, வளைகுடா மற்றும் ஆபிரிக்காவிலிருந்து சீனாவால் பெறப்படும் எரிபொருள் மற்றும் எரிவாயு போன்றன இந்திய மாக்கடலின் ஊடாக எவ்வித தங்குதடையின்றி கொண்டு செல்லப்படுகின்றது. இதற்கு இந்தியா எவ்வித தடைகளையும் இடவில்லை.

சீனாவால் இறக்குமதி செய்யப்படும் எண்பது சதவீத பெற்றோலியம் மலாக்கா நீரிணையின் முக்கிய புள்ளியின் ஊடாகவே கொண்டுசெல்லப்படுகிறது.

இந்திய மாக்கடலில் இந்தியக் கடற்படையினர் முக்கிய கடல்வழித் தொடர்புகளை ஆள்வதற்கான திறனை வளர்த்து அதன்மூலம் முக்கிய கடல்வழிகளை இந்தியக் கடற்படை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான உந்துதலை வழங்குவதற்கும் இமயமலை எல்லையில் சீன இராணுவச் செயற்பாட்டைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும் உதவும்.

சீனா இந்திய மாக்கடலில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான சவாலானது சீனாவை மையப்படுத்திய ஆசியாவைக் கட்டியெழுப்புவதற்கான சீன மூலோபாயத்தின் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாததாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *