மேலும்

சிறிலங்கா ஆட்சி மாற்றத்தின் பின் சீனா எதிர்கொள்ளும் சவால்கள் – கேணல் ஹரிகரன்

உலகின் உண்மையான அரசியலின் பிரகாரம், தனது மூலோபாய வெளிக்குள் சீனா உள்நுழைவதானது இந்திய மாக்கடல் பிராந்தியத்திலும் சிறிலங்காவிலும் இந்தியா தனது மேலாதிக்கத்தை இழப்பதற்கு வழிவகுக்கும் என இந்தியா கருதுகிறது.

இவ்வாறு eurasiareview.com இணையத்தில் கேணல் ஹரிகரன் எழுதியுள்ள ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். இதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’.

ஜனவரி 2015 இல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில், அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்ட எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை இலங்கைவாழ் மக்கள் தமது புதிய அதிபராகத் தேர்ந்தெடுத்ததன் பின்னர், சிறிலங்கா மீது மேலும் நலன்களைப் பெற்றுக் கொள்வதற்கான சீனாவின் இலக்கில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

உண்மையில் சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் சீனாவுக்கும் நன்கு பரிச்சயம் உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக மைத்திரிபால சிறிசேன சிறிலங்காவின் முன்னாள் அதிபரின் நெருங்கிய நண்பராகவும் இவரது அமைச்சரவையின் மூத்த அமைச்சராகவும் கடமையாற்றியிருந்தார்.

ஈழப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் மகிந்த ராஜபக்ச நாட்டில் இல்லாத வேளைகளில் மைத்திரிபால சிறிசேன உயர் அதிகாரம்மிக்க பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

எதுஎவ்வாறிருப்பினும், ராஜபக்சவுடனான சீனாவின் தனிப்பட்ட உறவானது ராஜபக்சவைத் தனக்கேற்றவாறு மாற்றி இவரது அதிகார ஆட்சி முறைமை மூலம் நலன்களை பெற்றுக்கொள்வதை நோக்காகக் கொண்டிருந்தது. ராஜபக்சவும் அவரது இரண்டு சகோதரர்களும் அரசாங்கங்கத்தைக் கட்டுப்படுத்தினர்.

அத்துடன் இவர்கள் நிதி அபிவிருத்தி, உள்ளகப் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி போன்ற முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களையும் தம்வசம் வைத்திருந்ததால் சீனா இதன்மூலம் இந்திய மாக்கடல் பிராந்தியத்திலும் தென்னாசியாவிலும் தனது செல்வாக்கை அதிகரித்து தனது மூலோபாய நிகழ்ச்சி நிரலை அடைந்து  கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

ஆகவே இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற ஏனைய நாடுகளைப் போலல்லாது சிறிசேனவின் ஆட்சியில் சீனா பல்வேறு பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்க வேண்டும்.

சிறிசேனவுடனான உறவை நெருக்கமாக்கி இழந்து போகும் ஆபத்திலுள்ள தனது மூலோபாய நலன்களை அடைந்து கொள்வது உட்பட குறுகிய கால நோக்கங்கள் பலவற்றை சீனா கொண்டுள்ளது.

நீண்ட கால அடிப்படையில் நோக்கில்,  ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் முறிந்து போன இந்தியாவுடனான சிறிலங்காவின் உறவை மீளவும் கட்டியெழுப்பி இந்தியாவுடன் சமநிலை உறவைக் கட்டியெழுப்புவதற்கு சிறிசேன அரசாங்கம் விருப்பங் கொண்டுள்ளதால், இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீனாவின் மூலோபாய பாதுகாப்புத் திட்டங்கள் தடைப்படுவதுடன், 21ம் நூற்றாண்டுக்கான கரையோர பட்டுப் பாதைத் திட்டத்தை சுமூகமான முறையில் அமுலாக்குவதும் பாதிப்பிற்கு உள்ளாகலாம் என சீனா கவலைப்படும்.

மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையம் (210 மில்லியன் டொலர்கள்), அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் -01 (361 மில்லியன் டொலர்கள்) கொழும்பு-கட்டுநாயக்க அதிவேகப்பாதை (350 மில்லியன் டொலர்) மற்றும் கொழும்பு துறைமுக கொள்கலன் முனைய விரிவாக்கம் போன்ற ராஜபக்சவின் பல்வேறு பாரிய திட்டங்களுக்கு சீனா தனது நிதியை வழங்கி நிர்மாணித்துள்ளது.

இத்திட்டங்கள் தொடர்பான போதியளவு தெளிவான விளக்கங்களை நாடாளுமன்றில் வழங்காது மிகத் துரிதமாக இதற்கான அனுமதியை ராஜபக்ச வழங்கியிருந்தார். இத்திட்டங்களை அமுல்படுத்தும் போது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்த முனைந்தபோது ஆளுங்கட்சிக்கு ஆதரவான கூலிப்படைகளால் இவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.

அண்மையில் இடம்பெற்ற அதிபர் தேர்தலுக்கான பரப்புரையில் எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளில் இதுவும் முதன்மையானதாகும்.

இதற்கும் மேலாக, இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் உண்மையென நிரூபிக்கப்பட்டிருந்தால் சிறிலங்காவுடன் 2014ல் சீனாவால் மேற்கொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை அமுல்படுத்துவதில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

சீனா தனது வெளியுறவுக் கோட்பாட்டு முறைமையை பலப்படுத்துவதற்காக சிறிலங்கா அதிபர் ராஜபக்சவின் எதேச்சதிகார ஆட்சி, ஆட்சிப் பிறழ்வுகள், ஊழல் மற்றும் அதிகார மீறல் குற்றச்சாட்டுக்கள் போன்றவற்றை சீனா அசட்டை செய்து ராஜபக்சவுடனான நட்பை மேலும் நெருக்கமாக்கியது.

சிறிசேன போன்ற மூத்த தலைவர்கள் சிலரை ராஜபக்ச ஓரங்கட்டியதைக் கூட சீனா கவனத்திற் கொள்ளவில்லை. இதுவே ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் அதிபராகப் பதவியேற்பதைத் தடுப்பதற்கான ஒரு சவாலாகக் கொள்ளப்பட்டது.

சீனாவுடன் தொடர்புபட்ட இவ்வாறான பிரச்சினைகள் சிறிசேனவினதும், முன்னாள் அதிபர் திருமதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் முன்னணியிலிருந்து பிரிந் துசென்ற சிறிய கட்சிகளை உள்ளடக்கிய சிறிசேனவின் ஆதரவாளர்களினதும் தேர்தல் பரப்புரையின் முக்கிய அம்சமாகக் காணப்பட்டன.

தேர்தல் முடிந்த கையோடு அதிபர் சிறிசேன 100 நாள் செயற்திட்டம் ஒன்றை அமுலாக்குவதற்கான பணியை ஆரம்பித்தார். நாடாளுமன்றம் மற்றும் பிரதமருக்கு நிறைவேற்று அதிபர் எவ்வாறான அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுத்தல் தொடர்பான பொறுப்புக்களை விரிவாக்குதலை நோக்காகக் கொண்டுள்ளது.

100 நாள் செயற்திட்டத்தின் ஊடாக பிரதமர் விக்கிரமசிங்கவின் உதவியுடன் அரசியல் யாப்பில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும், நல்லாட்சியை மேம்பாடுத்துவதற்கான முறைமையை அறிமுகப்படுத்துவதற்கும் அதிபர் திட்டமிட்டுள்ளார்.

அதிபர் ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஊழல் மற்றும் ஆட்சி மீறல்களைப் புரிந்தவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகளை தற்போதைய புதிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

சிறிசேனவின் ‘சுத்திகரித்தல் செயன்முறையின்’ ஒரு பகுதியாக சீனாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பாரிய திட்டங்களும் மிகவும் நுணுக்கமாக ஆராயப்படுகிறது. சீன நிறுவனம் ஒன்றால் அமுலாக்கப்படும் மிகப் பாரிய திட்டமான 1337 மில்லியன் டொலர் பெறுமதியான கொழும்பு துறைமுக நகரத் திட்டமும் இதற்குள் உள்ளடங்குகிறது.

காலிமுகத் திடலிலிருந்து 575 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவு இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மேற்கொள்வதால் ஏற்படக் கூடிய சூழல் பிரச்சினைகள் தொடர்பாகவும் இது தொடர்பான தெளிவான விளக்கமின்மையும் இத்திட்டத்தை மீளவும் ஆராயவேண்டும் என தற்போதைய அரசாங்கம் கருதுகிறது.

இத்திட்டத்தில் இழைக்கப்பட்ட பல்வேறு ஊழல் மோசடிகள் மற்றும் இழிவான செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களும் சீனாவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குலகத்தின் பரப்புரைகளே சீனாவின் வெளியுறவுத் திட்டம் தோல்வியுறக் காரணம் சீனாவிலிருந்து வெளியாகும் Global Times  ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா அதிகம் பயன்படுத்தும் கொழும்புத் துறைமுகத்திற்கு அடுத்ததாக உள்ள சுதந்திர வலயத்திற்குச் சொந்தமான 20 ஏக்கரை சீனா தனக்கு உடமையாக்குவதன் மூலம் தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என இந்தியா கருதுகிறது. எதுஎவ்வாறிருப்பினும், இத்திட்டத்திற்காக சீனா சேதக் கட்டுப்பாட்டு அளவீடுகளை மேற்கொண்டுள்ளதுடன் புதிய அரசாங்கத்துடன் நட்புறவைப் பேணவும் முயற்சித்துள்ளது.

சீனாவின் புத்தாண்டு தினத்தை வாழ்த்தி சிறிலங்காவின் புதிய அதிபர் வழங்கிய வாழ்த்துச் செய்தியில் சீனாவுடனான உறவைக் கட்டியெழுப்புதற்கான தனது ஈடுபாட்டைக் குறிப்பிட்டிருந்த செய்தியை சீன ஊடகங்கள் முதன்மைப்படுத்தியுள்ளன.

சிறிலங்காவின் அதிபர் சிறிசேனவை சீனாவுக்கு வருமாறு சீன அதிபர் அழைப்பு விடுத்த நிலையில் இந்த அழைப்பிற்கு மேலும் வலுச்சேர்க்கும் முகமாக சீனாவின் மூத்த இராஜதந்திரியும் வெளிவிவகார பிரதி அமைச்சருமான லியு ஜியான்சோ கொழும்பிற்கு வந்திருந்தார். சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் சமரவீர 2015 பெப்ரவரி இறுதியில் சீனாவுக்கான தனது பயணத்தை மேற்கொண்ட போது மார்ச் மாதத்தில் அதிபர் சிறிசேன சீனாவுக்கான பயணத்தை மேற்கொள்வதற்கான தயார்ப்படுத்தலை மேற்கொண்டுள்ளார்.

எவ்வாறெனினும், கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டம் உட்பட சீன ஆதரவுத் திட்டங்கள் சிறிலங்காவில் தொடர்வதற்கான தனது விருப்பத்தை தற்போதைய அரசாங்கம் மீளவும் உத்தரவாதப்படுத்தியுள்ளது.

இத்துறைமுக அபிவிருத்தித் திட்டம் தொடர்பான சூழல் மதிப்பீடுகள் தொடர்பான அறிக்கையை சிறப்பு ஆணைக்குழு ஒன்று மீள ஆராய்ந்த பின்னர், அமைச்சரவையின் பிரதி ஆணைக்குழு தனது தலைமையின் கீழ் ஏனைய பாதிப்புக்கள் தொடர்பாக ஆராய்ந்த பின்னரே இத்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாகத் தீர்மானிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் தெளிவாக அறிவித்துள்ளார்.

‘இது மிகப் பெரிய திட்டம். இது சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டமாகும். இவ்வாறான திட்டங்களை நாங்கள் திடீரென நிறுத்த முடியாது. இத்திட்டம் முற்றுமுழுதாக நிறுத்தப்பட வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டை நாங்கள் எடுக்கவில்லை’ என ரணில் விக்கிரமசிங்க சிறிலங்கா அரசாங்கத்தில் நிலைப்பாட்டை எடுத்து விளக்கியுள்ளார்.

2012 தொடக்கம் 2014 வரை 2.18 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்பட்ட சீனாவின் உதவி சிறிலங்காவுக்கு மேலும் தேவைப்படும் என்பதையே கரையோர மீள்கட்டுமானத் திட்டம் சுட்டிக்காட்டுகிறது. கடந்த ஆண்டு கைச்சாத்திடப்பட்ட சீனா-சிறிலங்கா சுதந்திர வர்த்தக உடன்பாடு வருகின்ற ஆண்டுகளில் இருதரப்பினதும் வர்த்தக மற்றும் வணிகச் செயற்பாடுகளை மேலும் ஊக்குவிப்பதற்கான வழியை ஏற்படுத்தும்.

ஏற்கனவே சிறிலங்காவில் சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்மூலம் சீனாவின் மிகவும் விருப்பத்திற்குரிய சுற்றுலா மையமாக சிறிலங்கா மாறுவதற்கான நல்லதொரு வாய்ப்புக் காணப்படுகிறது.

கடந்த மாதம் 27,28 ஆம் திகதிகளில் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சீனாவுக்கான தனது பயணத்தை மேற்கொண்டிருந்ததன் மூலம், மார்ச் மாதத்தில் சிறிசேனவின் சீனாவுக்கான சுற்றுப்பயணத்திற்கான தயார்ப்படுத்தலை மேற்கொண்டிருந்தார்.

சிறிலங்காவில் தற்போது சர்ச்சைக்குரிய கொழும்புத் துறைமுக நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக சீனாவுக்கான தனது சுற்றுப் பயணத்தின் போது சீன வெளியுறவு அமைச்சரைச் சந்தித்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தனது ஒப்புதலை வழங்கியுள்ளதையே ‘உலகில் வளர்ந்து வரும் வல்லரசு நாடுகளில் ஒன்றான சீனாவின் முதலீட்டை நாம் எப்போதும் வரவேற்போம்’ என மங்கள சமரவீரவின் கருத்து உறுதிப்படுத்துகிறது.

இத்திட்டம் தொடர்பான மீள் பரிசோதனையானது சீனாவை இலக்காகக் கொண்டதல்ல எனவும், ஏனைய நாடுகளால் சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் திட்டங்களையும் மீளஆராய்வது தமது வழமை எனவும் மங்கள சமரவீர ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

‘சீன முதலீட்டுடன் தொடர்புபட்ட எந்தவொரு விடயம் தொடர்பாக நாம் இறுதித் தீர்மானம் எட்டுவதற்கு முன்னர் சீன அரசாங்கத்துடன் இது தொடர்பாக கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு, கலந்துரையாடுவோம்’ சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

‘சிறிலங்காவில் புதிய மறுமலர்ச்சி ஏற்படுவதன் மூலம் இங்கு சட்ட ஆட்சி மற்றும் வெளிப்படையான ஆட்சி போன்றன இடம்பெறும் என நான் நம்புகிறேன். இதற்கு முன்னர் இருந்ததை விட சிறிலங்காவில் முதலீடு செய்வதற்கு சீன முதலீட்டாளர்கள் முன்வருவார்கள்’ என சமரவீர குறிப்பிட்டிருந்தார்.

சிறிலங்கா அதிபர் சீனாவுக்கான தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு சீன அதிபருடன் பேச்சுக்களை நடாத்தும் போது அவரது நிகழ்ச்சி நிரலில் சிறிலங்காவில் சீனாவின் எதிர்கால முதலீடுகள் தொடர்பான விடயம் முன்னுரிமைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். சீனத் திட்டங்கள் சிலவற்றில் மீள்சமரசத்தை சிறிலங்கா எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதுஎவ்வாறிருப்பினும், ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட கடன் நடைமுறைகள் தொடர்பாக மீள்சமரசத்திற்கு சீன தமது ஒப்புதலை வழங்குவதாக மார்ச் 2,2015 அன்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அறிவித்துள்ளதானது சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது.

‘சிறிலங்காத் தரப்பின் வேண்டுகோளுக்கு அமைவாகவே’ கடன்கள் வழங்கப்பட்டன என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

‘சிறிலங்காவினதும் அதன் மக்களினதும் நலன் கருதியே கடன் ஒழுங்குபடுத்தல் மேற்கொள்ளப்படுகிறது. சிறிலங்காவின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியை அதிகரிப்பதற்கான சாதகமான பங்களிப்பை இந்தக் கடன் வழங்கியுள்ளது.

சிறிலங்கா அமைச்சரின் சீனாவுக்கான பயணமானது சிறிலங்காத் தரப்பினர் சீனாவின் உதவியை வரவேற்கின்றனர் என்பதையே சுட்டிநிற்கிறது. இரண்டு நாடுகளினதும் இரண்டு நாட்டு மக்களினதும் அடிப்படை நலன்களை தளமாகக் கொண்டு எமது நடைமுறைசார் ஒத்துழைப்பு முன்னெடுத்துச் செல்லப்படும்’ என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

எனினும், சீன உதவிகளை அல்லது திட்டங்களை நிறுத்துவதை விட சீனாவின் திட்ட அமுலாக்கலில் ராஜபக்ச, அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது கூட்டாளிகளால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை வெளிக்கொண்டு வருவதே சிறிசேன அரசாங்கத்தின் பிரதான நோக்கம் போல் தெரிகிறது.

மூலோபாய பாதுகாப்பு விடயத்தைப் பொறுத்தளவில் சீனாவானது சிறிசேன அரசாங்கத்தின் இரு வேறு நிலைப்பாடுகள் தொடர்பாக கவலை கொள்கிறது. இதில் ஒன்று இந்தியாவுடனான சிறிலங்காவின் நெருங்கிய உறவில் விரிசலை ஏற்படுத்தி சீனாவுடன் நல்லுறவைப் பேணிய ராஜபக்சவின் தவறைத் திருத்துவேன் என சிறிலங்காவின் புதிய அரசாங்கம் மீண்டும் மீண்டும் உறுதி வழங்குவதுடன் தொடர்புபட்டதாகும்.

மற்றையது ‘சீனாவின் கனவு’ என சீன அதிபரின் கூற்றை உறுதிப்படுத்தும் விதமாக தென்னாசியாவிலும் இந்திய மாக்கடல் பிராந்தியத்திலும் செல்வாக்குச் செலுத்தும் சீனாவின் திட்டத்துடன் தொடர்புபட்டதாகும்.

ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் சீனாவின் செல்வாக்கைப் பெற்றுக்கொண்டதன் மூலம் சீனா, சிறிலங்காத் தீவில் தனது இருப்பைப் பலப்படுத்தவும் அதன் மூலம் இந்தியா மற்றும் இந்திய மாக்கடல் பிராந்தியத்துடன் தொடர்புபட்ட மூலோபாய இலக்குகளை அடைந்து கொள்வதற்கும் வழிவகுத்துள்ளது.

சீனாவின் உதவியுடன் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட துறைமுக அபிவிருத்தி மற்றும் ஏனைய கட்டுமாணத் திட்டங்கள், சீன இராணுவம் குறிப்பாக சீனக் கடற்படை இந்தியத் தீபகற்பத்தின் கடற்பரப்பில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான வழியை உருவாக்கியுள்ளன.

இந்த வசதி வாய்ப்புக்கள் வரும் ஆண்டுகளில் சீனக் கடற்படை இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் நிலவும் இந்தியாவின் மூலோபாய மேலாதிக்கத்தை சவாலாக்குவதற்குப் பயன்படும்.

இந்திய மாக்கடலில் இராணுவ நிலைகளைப் பலப்படுத்தும் நோக்குடன் ஏற்கனவே சீனாவின் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட சீனக் கடற்படைக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தில் தரித்துநின்றுள்ளன. சீனா தனது கரையோர பட்டுப் பாதைத் திட்டத்தை நிறைவுசெய்யும் போது இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீனாவின் அதிகரித்த செல்வாக்கைப் பாதுகாப்பதற்காக சீன கடற்படைக் கப்பல்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன.

2014 செப்ரெம்பரில் சீன அதிபர் சிறிலங்கா மற்றும் மாலைதீவுகளுக்கான தனது முதலாவது பயணத்தை மேற்கொண்ட போது, இவ்விரு நாடுகளும் தாம் சீனாவின் கரையோர பட்டுப்பாதைத் திட்டத்தில் இணைவதற்குத் தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தன. இந்தியாவின் பாதுகாப்புத் தொடர்பாகவும் கருத்திற்கொள்ளாது சிறிலங்கா தனது பொருளாதார நலன்களை அடைந்து கொள்வதற்காக சீனாவுடன் கைகோர்த்து நின்றது.

சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொண்டிருந்த சீன அதிபர் செப்ரெம்பர் 16, 2014 அன்று ராஜபக்சவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான ஒத்துழைப்பு உடன்பாட்டில் கைச்சாத்திட்டார்.

‘பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதற்கும், விஞ்ஞானம் மற்றும் தொழினுட்பத்துடன் தொடர்புபட்ட பாதுகாப்பு விவகாரங்களில் ஒத்துழைப்பை வழங்குவதற்கும் இராணுவ சார் பயிற்சிகளை பரிமாறிக் கொள்வதற்கும் வளங்களை வழங்குவதற்காக’ உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதாக இவ்விரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

தென்னாசியாவிலும் இந்திய மாக்கடல் பிராந்தியத்திலும் சீனா தனது பொருளாதார மற்றும் இராணுவ ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான சீன அதிபரின் மூலோபாய முயற்சிகளுக்கான முக்கிய சக்தியாக தற்போது சிறிலங்கா காணப்படுகிறது.

சீனாவின் கடற்படையானது இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் மிகவும் அண்மைக்காலத்தில் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்த முடியாவிட்டாலும் கூட, சீனா இதற்கான சாத்தியத்தை உருவாக்கும் போது இது இந்தியா மற்றும் தென்னாசியாவுக்கு மட்டுமல்ல இந்திய மாக்கடலை அதிகம் பயன்படுத்தும் அமெரிக்கா, யப்பான், அவுஸ்திரேலியா உட்பட இதன் மேற்குலக மற்றும் தென்கிழக்காசிய நட்பு நாடுகளுக்கும் அச்சுறுத்தலாகவே அமையும்.

‘கடந்த காலத்தைக் கருத்திற் கொண்டு, எல்லா நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக் கொள்வதற்கான வெளியுறவுக் கோட்பாட்டை வரைவதென நாங்கள் மிகத் தெளிவாகத் தீர்மானித்துள்ளோம்’ என அதிபர் சிறிசேன தனது சுதந்திர நாள் உரையில் தெரிவித்துள்ளமையானது மறைமுகமாக சீனாவுடனான கடந்த காலத் தொடர்பைச் சுட்டிக்காட்டுகிறது.

இந்தியாவுடன் நட்புறவைப் புதுப்பித்துக் கொள்வதை சிறிசேன தனது முன்னுரிமையாக்கிய போது அதிபர் சிறிசேனவின் சீனக் கொள்கை தொடர்பாக சீனா கவலை கொண்டமை ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல.

சிறிசேன சிறிலங்காவின் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் தனது முதலாவது வெளியுறவுப் பயணமாக இந்தியாவுக்குச் சென்றபோது அவரை இந்திய அரசாங்கம் வரவேற்றது. இந்தப் பயணத்தின் போது சிவில் அணுவாயுத ஒத்துழைப்பு உடன்படிக்கை உட்பட நான்கு வெவ்வேறு உடன்படிக்கைகளில் சிறிலங்காவும் இந்தியாவும் கைச்சாத்திட்டன.

சிறிலங்காவில் சீனாவால் மேற்கொள்ளப்பட்ட பாரிய திட்டங்களில் இடம்பெற்ற மோசடிகளை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் மீளாய்வு செய்யப் போவதாக அறிவித்ததானது இப்புதிய அரசாங்கம் தொடர்பாக சீனாவின் நிச்சயமற்றதன்மையை புரிந்துகொள்ள முடிகிறது.

சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் தரித்து நிற்பதற்கு ராஜபக்ச அரசாங்கம் அனுமதி வழங்கியதை விட சிறிலங்காவின் புதிய அரசாங்கம் சீனாவுடன் ‘வித்தியாசமான அணுகுமுறையைக்’ கைக்கொள்ளும் என சீனாவுக்குப் பயணம் செய்திருந்தபோது சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் சமரவீர தெரிவித்திருந்தார்.

‘யப்பானியப் பிரதமர் சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்த வேளையில் கொழும்புத் துறைமுகத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் எவ்வாறான சந்தர்ப்ப சூழ்நிலையில் தரித்து நிறுத்தப்பட்டன என்பது உண்மையில் எனக்குத் தெரியாது. ஆனால் இவ்வாறான ஒரு சம்பவம் எமது ஆட்சிக்காலத்தில் இடம்பெறாது என்பதை நாங்கள் உறுதிப்படுத்துவோம்’ என சமரவீர மேலும் குறிப்பிட்டார்.

ஆனால் சிறிலங்காவின் கருத்தை சீனா ஏற்பதற்கான மனநிலையில் இல்லை என்பதை சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளரின் கருத்துக்கள் வெளிப்படுத்தி நின்றன.

மார்ச் 02, 2015 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக வினாவப்பட்டபோது, ‘சீன நீர்மூழ்கிக்கப்பல்கள் ஏடன் வளைகுடா மற்றும் சோமலியா போன்றவற்றை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன. அவ்வழியே சிறிலங்காத் துறைமுகத்தில் மீள்வழங்கலுக்காகத் தரித்து நின்றன. இவை சாதாரணமான, வெளிப்படையான செயற்பாடுகள். அனைத்துலக நடைமுறைகளுக்கு அமைவாகவே இக்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்றன’ என சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

‘இது தொடர்பில் சீனா, சிறிலங்காவின் அனுமதியை பெற்றிருந்தது. உலகளாவிய ரீதியில் இடம்பெறும் கடற்கொள்ளைக்கு எதிரான பரப்புரைக்கு சிறிலங்கா தனது ஆதரவை வழங்குவதைக் கோட்பாடாகக் கொண்டுள்ளது. இதனால் நட்பு நாடுகளின் நீர்மூழ்கிக்கப்பல்கள் தனது துறைமுகத்தில் தரித்து நிற்பதையும் சிறிலங்கா வரவேற்கிறது’ என சீனப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

முறிந்துபோயுள்ள சிறிலங்காவுடனான உறவை மீளக் கட்டியெழுப்புவதற்கான முயற்சியை அமெரிக்கா மேற்கொள்வதற்கு சிறிலங்காவின் புதிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாகவும் சீனா கவலை கொள்கிறது.

அமெரிக்காவுடனான சிறந்த நல்லுறவானது சிறிலங்காவின் வர்த்தக மற்றும் முதலீட்டுத் துறையை ஊக்குவிப்பதோடு மட்டுமல்ல அண்மையில் இந்தியாவுக்கான தனது சுற்றுப்பயணத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா மேற்கொண்டதன் பின்னர் நெருக்கமாகியுள்ள இந்திய-அமெரிக்க உறவின் பின்னர் சீனாவுடனான தனது மூலோபாய உறவில் சமநிலையைப் பேணுவதற்கும் மிகவும் முக்கியமானதாகும்.

சிறிலங்கா மீதான போர்க் காலக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அனைத்துலக விசாரணைக்காக ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து அமெரிக்காவின் ஆதரவுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறிலங்கா எதிர்கொண்டு வரும் தீர்மானங்களை முகங்கொடுப்பதற்கும் சிறிலங்காவுக்கு அமெரிக்காவின் ஆதரவு அவசியமானதாகும்.

பெப்ரவரியில் அமைச்சர் சமரவீர அமெரிக்காவுக்கான தனது பயணத்தை மேற்கொண்டதுடன் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியுடன் பேச்சுக்களை நடாத்தினார். இவரது பயணத்தின் இறுதியில் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஊடக மாநாட்டில், ‘அமெரிக்காவுடன் நல்லுறவைப் பேணுவதில் சிறிலங்கா ஆர்வமுடன் இருப்பதாகவும் இரு நாடுகளுக்கும் இடையிலான பங்களிப்பை மேலும் ஆழமாக்கி விரிவாக்குவதாக தீர்மானித்துள்ளதாகவும்’ சமரவீர தெரிவித்திருந்தார்.

பெப்ரவரியில் அமெரிக்காவின் பாதுகாப்பை மையப்படுத்தி வெளியிடப்பட்ட இரண்டாவது மற்றும் இறுதி மூலோபாய பாதுகாப்புக் கோட்பாட்டில் ஒபாமா அரசாங்கம் ‘கூட்டு நடவடிக்கை’ தொடர்பாக அழுத்தமாகத் தெரிவித்ததுடன் இதன் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தியிருந்ததால் சீனா இது தொடர்பாக யோசனை செய்த அதேகாலப்பகுதியிலேயே மங்கள சமரவீரவும் அமெரிக்காவுக்கான தனது பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

அமெரிக்கா மற்றும் இந்தியாவுடனான சிறிலங்காவின் நட்புறவானது இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மூலோபாய நலனை மேலும் பலப்படுத்துவதற்கும் குறிப்பாக, அண்மையில் இந்தியாவுக்கான தனது பயணத்தின் போது அமெரிக்க அதிபர் இந்தியாவுடன் மேற்கொண்ட மேலும் ஐந்து ஆண்டுகளுக்கான இந்திய-அமெரிக்க மூலோபாய ஒத்துழைப்பு உடன்படிக்கை விரிவாக்கப்பட்டதன் பின்னர் இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் மூலோபாய நலன்கள் பலப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

எனினும், மே 2015ல் இந்தியப் பிரதமர் மோடி சீனாவுக்கான தனது பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்ததன் பின்னர் இந்தியாவுக்கான தனது பயணத்தை சீன அதிபர் மேற்கொண்ட போது இரு தலைவர்களுக்கும் இடையில் எட்டப்பட்ட உடன்பாடுகளின் சாதகமான அம்சங்களை முதன்மைப்படுத்தி அதனைப் பலப்படுத்துவதன் மூலம் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் ஏற்படும் அமெரிக்காவின் இருப்பைப் பலவீனப்படுத்த சீனா முயற்சி செய்துள்ளது.

இந்தியாவுடனான உறவை மீளக்கட்டியெழுப்புவதற்கான அதிபர் சிறிசேனவின் விருப்பத்தை வாய்ப்பாகக் கொண்டு சீன-இந்திய-சிறிலங்கா முத்தரப்பு உறவைக் கட்டியெழுப்புவதன் மூலம் சிறிலங்காவில் ஏற்கனவே நிலைத்திருக்கும் தனது உறவை மேலும் சிறப்பாக்குவதில் சீனா ஆர்வங் காண்பிப்பது போல் தெரிகிறது.

‘இந்திய-சிறிலங்கா உறவில் நட்பார்ந்த நெருக்கமான முன்னேற்றம் ஏற்படுவதைப் பார்க்கும் போது எமக்கு மகிழ்ச்சியாக உள்ளது. சீனா, சிறிலங்கா மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு இந்தியா மற்றும் சிறிலங்காவுக்கும் முழுப் பிராந்தியத்திற்கும் பயனளிக்கும் என சீனா நம்புகிறது. ஆகவே சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவில் முன்னேற்றத்தைக் காண்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்’ என சிறிசேன இந்தியாவுக்கான தனது பயணத்தை மேற்கொண்டிருந்த போது சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்த இக்கருத்தானது சீனாவின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துகின்ற சான்றாகும்.

இவ்வாறான ஒரு உறவுநிலை ஈர்ப்பை ஏற்படுத்துவதாகவும் மூன்று நாடுகளும் தமக்கான சொந்த நலன்களை வென்றெடுப்பதற்கான ஒரு வாய்ப்பையும் வழங்கும். சீனாவைப் பொறுத்தளவில் இந்திய மாக்கடல் பிராந்தியத்திலும் தென்னாசியாவிலும் தனது மூலோபாய நலன்களை அடைந்து கொள்வதற்கும், கரையோர பட்டுப் பாதைத் திட்டத்தை வெற்றிகரமான நிலைக்குக் கொண்டு செல்வதற்கும் உதவும்.

எனினும், இந்த உலகின் உண்மையான அரசியலின் பிரகாரம், தனது மூலோபாய வெளிக்குள் சீனா உள்நுழைவதானது இந்திய மாக்கடல் பிராந்தியத்திலும் சிறிலங்காவிலும் இந்தியா தனது மேலாதிக்கத்தை இழப்பதற்கு வழிவகுக்கும் என இந்தியா கருதுகிறது.

இதற்கும் மேலாக, இந்தியப் பிராந்தியத்தை சீனா சட்டத்திற்கு முரணாக அபகரித்துள்ளமை, அருணாச்சலப் பிரதேசம் முழுவதையும் உரிமை கோருதல், தீர்க்கப்பட முடியாத எல்லைப் பிரச்சினைகள் உட்பட இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்கனவே உள்ள பல்வேறு சிக்கல்கள் இவ்விரு நாடுகளின் உறவுநிலைக்குத் தடையாகக் காணப்படுகிறது.

எதுஎவ்வாறிருப்பினும், மார்ச் மாதத்தில் சீனாவுக்கான தனது சுற்றுப் பயணத்தை அதிபர் சிறிசேன மேற்கொண்டதன் பின்னரும், இதே மாதத்தில் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை இந்தியப் பிரதமது மேற்கொண்டதன் பின்னரும் இதேபோன்று சீனாவுக்கான தனது பயணத்தை மே மாதத்தில் இந்தியப் பிரதமர் மேற்கொண்டதன் பின்னரும் முத்தரப்பு உறவு நிலை எவ்வாறு இருக்கும் என்பது தெளிவாகும்.

ஏப்ரல் 2015இன் இறுதி வாரத்தில் சிறிலங்காவில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்ததன் பின்னர் சிறிலங்காவின் அரசியற் சூழல் எவ்வாறிருக்கும் என்பது மேலும் தெளிவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *