மேலும்

பிரான்சில் இருந்த சென்ற முன்னாள் போராளி கட்டுநாயக்கவில் கைது – சட்டநடவடிக்கை எடுக்கப்படுமாம்

airportவிடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தார் என்ற குற்றச்சாட்டில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட, பிரான்சில் இருந்து சென்ற முருகேசு பகீரதி மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து 15 ஆண்டுகளுக்கு முன்னர் விலகியிருந்த முருகேசு பகீரதி என்ற தாயும், அவரது 8 வயது மகளும் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

2005ஆம் ஆண்டு பிரான்சில் குடியேறிய பகீரதி, தனது 8 வயது மகளுடன் கிளிநொச்சியிலுள்ள அவரது பெற்றோருடன் ஒருமாத விடுமுறையை கழித்து விட்டு, பிரான்ஸ் திரும்பும் வழியிலேயே நேற்றுமுன்தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

நோயுற்றிருந்த நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகிய பகீரதி, அதன் பின்னர் அந்த இயக்கத்துடன் தொடர்புபட்டிருக்கவில்லை என்று அவரது சகோதரர் முருகேசு வேலவன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தமது தாயையும் தந்தையையும் பார்த்துச் செல்வதற்காக சிறிலங்கா வந்திருந்த போதே, பகீரதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பிரான்சில் பிறந்த அவரது 8 வயது மகளும் பகீரதியுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், போரற்ற  சூழ்நிலையில் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது என்ற நம்பிக்கையிலேயே தனது சகோதரி சிறிலங்கா வந்திருந்ததாக வேலவன் தெரிவித்தார்.

அதேவேளை, பகீரதி விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் பல்வேறு தாக்குதல்களை முன்னின்று நடத்தியுள்ளதாகவும் அவருக்கு எதிராக பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பகீரதி மூன்று நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் மூன்று ஆண்டுகள் இருந்துள்ள பகீரதி 2005ஆம் ஆண்டில் பிரான்ஸ் செல்ல முன்னர் பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளில் பங்கெடுத்திருந்தார்.

இவர் 1997ஆம் ஆண்டிலிருந்து 2000ஆம் ஆண்டு வரை கடற்புலிகளின் தலைவியாக இருந்துள்ளார். அவர் 2005ஆம் ஆண்டில் சிறிலங்காவில் இருந்து வெளியேறியுள்ளார்.

அந்தக் காலப்பகுதியில் கடற்படை மீது நடத்தப்பட்ட பல தாக்குதல்களுக்கு அவர் தலைமை தாங்கியுள்ளதாக தெரியவருகிறது.

அவ்வாறே, தற்கொலை குண்டுதாரிப் பெண்களை தயார்படுத்தும் திட்டங்களிலும் அவர் பங்கெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர் பற்றிய தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன. இந்த சந்தர்ப்பத்தில் அவர் சிறிலங்கா வந்துள்ளதாகவும் தெரியவந்தது.

அவர் சிறிலங்காவில் இருந்து வெளியேற முயன்ற சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்போது புலிகள் பிரச்சினை இல்லை. ஆனால் சிறிலங்காவில் கடந்த காலத்தில் யாராவது குண்டுத் தாக்குதல் அல்லது கொலைகளில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது வழக்குத் தொடுப்பதற்கு 20 ஆண்டுகாலத்திற்கு எமக்கு அதிகாரம் இருக்கிறது.

பகீரதி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சாட்சியங்கள் உள்ளன. அவை எதிர்காலத்தில் வெளிப்படுத்தப்படும்.

விசாரணைகளின் முடிவில் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும்”  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *