மேலும்

சிறிலங்காவின் முன்னாள் அதிபருடன் 5 நிமிடங்கள் – பாகிஸ்தான் ஊடகவியலாளர்

carlton-house

கார்ல்டன் இல்லத்துக்குள் நுழையக் காத்திருக்கும் மக்கள்

எனது நாட்டில் இடம்பெற்ற கிளர்ச்சி போன்றே உங்களுடைய நாட்டிலும் கிளர்ச்சி இடம்பெறுகிறது. இதற்குப் பின்னால் இந்தியாவின் றோ அமைப்பு செயற்படுகிறது என ராஜபக்ச குறிப்பிட்டார்.

இவ்வாறு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளருடனான சந்திப்புக் குறித்து, பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் Dawn ‎நாளிதழில், மலீகா ஹமித் சித்திக் என்ற பெண் ஊடகவியலாளர் விபரித்துள்ளார். இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சனிக்கிழமை காலை எட்டு மணி.

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் காட்டுப் பச்சை நிறத்தாலான இல்லமான Carlton House இற்கு வெளியே நான் காத்திருந்தேன். அது ஒரு சுமாரான, தாழ்ந்த கூரையைக் கொண்ட இல்லமாகக் காணப்பட்டது.

இந்த இல்லத்தின் முன்னால் நடுத்தர அளவிலான பலகையில் மகிந்த ராஜபக்சவின் உருவப்படம் காணப்பட்டது.

ஐம்பது நாட்களுக்கு முன்னர் வெளியாகிய அதிபர் தேர்தலின் அதிர்ச்சித் தோல்வியின் பின்னர் தற்போது சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தனது சொந்த நகரான தங்கல்லையில் தங்கியுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தான் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற அதீத நம்பிக்கையுடன் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் 1977ல் அடுத்த தேர்தலை நடத்தி அதில் தோல்வியுற்றது போன்ற நிலையே தற்போது மகிந்த ராஜபக்சவுக்கும் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்சவும் தனது சோதிடரின் ஆலோசனையின் பேரிலேயே தனது ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் தேர்தலை நடத்தினார்.

தங்கல்லையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் வதிவிட இல்லத்தில் இரண்டு காவற்துறையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுகின்றனர். இவர்கள் ஒலிவ் பச்சை நிற சீருடைகளை அணிந்துள்ளதுடன், இவர்களுடன் கடமையில் ஈடுபடும் மூன்று புலனாய்வு அதிகாரிகளும் மெல்லிய அரைக்கை சேட்டுடனும் கறுப்பு நிற நீளக்காற்சட்டையுடனும் காணப்பட்டனர்.

அவர்கள் மேம்போக்காக என்னைப் பார்த்ததுடன், சாய்ந்து செல்லும் வீதியை உற்றுநோக்கினர். சேலை அணிந்த பெண்களும், சேட் மற்றும் நிற சாரங்களை அணிந்திருந்த ஆண்களும் சீருடை தரித்த பாடசாலைச் சிறார்களும் அந்த வீதியால் பயணித்துக் கொண்டிருந்தனர்.

சிலர் முன்னாள் அதிபரின் வதிவிட இல்லத்தின் வாயிற் கதவுகளில் காத்திருந்தனர். மிகப் பெரிய மரம் ஒன்றின் நிழலின் கீழ் அமைந்திருந்த இந்த வாயிற் கதவில் காத்திருந்த மக்கள் சிலர் தமது பிள்ளைகளையும் கூட்டி வந்திருந்தனர். இந்தச் சிறார்கள் ‘மகிந்த ராஜாவிடம்’ (மகிந்த அரசன்) ஆசிர்வாதம் பெறுவதற்காகவே காத்திருந்தனர்.

மகிந்த ராஜபக்ச வழமையாக தங்கல்லையிலுள்ள தனது வதிவிட இல்லத்தில் தங்கியிருப்பார். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக இவர் கொழும்பில் இருந்துள்ளார். இவர் தற்போது தங்கல்லையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.

நான் வியாழக்கிழமையும் மகிந்த ராஜபக்சவின் இல்லத்திற்கு வந்திருந்த போது இதனை அறிந்திருந்தேன்.  கொழும்பு கல்கிசையில் தங்கியிருந்த போது தற்செயலாக நான் சந்தித்த நபர் ஒருவர் மகிந்த ராஜபக்சவை நான் சந்திக்க வேண்டும் எனக் கூறினார்.

இவர் தான் நான் முன்னாள் அதிபரைச் சந்திப்பதற்கான தொடர்பாளராகச் செயற்பட்டார். ‘தனது தேர்தல் தோல்வி தொடர்பாக முன்னாள் அதிபர் இதுவரையில் ஊடகங்களில் கருத்துத் தெரிவிக்கவில்லை. இவரைச் சந்தித்து நீங்கள் இது தொடர்பாக ஊடகத்தில் எழுதவேண்டும்’ என எனது தொடர்பாளர் என்னிடம் கூறினார்.

இதன்பிரகாரம் நான் திரு.ராஜபக்சவின் நெருங்கிய கூட்டாளியான நிசாந்த சண்டாபரனவுக்காக காத்துக்கொண்டிருந்தேன். இவர் என்னை திரு.ராஜபக்சவிடம் கூட்டிச் செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார்.

மகிந்த ராஜபக்சவின் வதிவிட இல்லத்தைச் சூழவிருந்த வழக்கமான காட்சிகள் என்னைக் குழப்பத்திற்கு உள்ளாக்கியது. மகிந்த ராஜபக்சவின் ‘கார்ல்டன் இல்லத்திற்கு’ அடுத்ததாக மருந்தகம் ஒன்று காணப்பட்டது. மக்கள் அங்கே தமக்குத் தேவையான மருந்துகளை வாங்குகின்றனர்.

இந்த இல்லத்திற்கு எதிராக தொழிற்சங்க அலுவலகம் ஒன்று காணப்பட்டது. இதற்கு அடுத்ததாக தீயணைப்புப் படையினரின் அலுவலகமும் திரையரங்கு ஒன்றும் அமைந்துள்ளன.

சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் எவரும் இங்கு நிறுத்தப்படவில்லை. இங்கு எவ்வித சோதனைச் சாவடிகளும் காணப்படவில்லை. பாதுகாப்பு அரண்களுடன் கூடிய நுழைவாயில் காணப்படவில்லை.

எமது முன்னாள் அதிபர் தனது சொந்த நகரான கராச்சியில் பாதுகாப்புக் கோட்டை ஒன்றுக்குள் தங்கியுள்ளார் என்பதை எவரும் இந்த இடத்தில் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது.

மணி எட்டரை. பல பேருந்துகள் ‘கார்ல்டன் இல்லத்திற்கு’ அருகில் மக்களை இறக்கி விட்டுச் சென்றன. தமக்குச் சிறப்பான உடைகளுடன் வந்திருந்த மக்கள் இந்த இல்லத்திற்குள் சென்றனர்.

இவ்வாறான நிகழ்வானது தற்போதும் மகிந்த ராஜபக்ச தனது நாட்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார் என்பதையே உணர்த்தி நிற்கிறது.

ஜனவரி 09 அன்று அதிபர் தேர்தலின் பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்களிலிருந்து ஒவ்வொரு நாளும் மக்கள் காலை நான்கு மணியிலிருந்து இந்த இல்லத்திற்கு வெளியே காத்திருக்கத் தொடங்குவார்கள் என அங்கிருந்த காவற்துறை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

‘முதல்நாள் பல ஆயிரக்கணக்கான மக்கள் முன்னாள் அதிபரைப் பார்ப்பதற்காக வந்தனர். இதன் பின்னர் ஒவ்வொரு நாளும் பல நூற்றுக்கணக்கான மக்கள் முன்னாள் அதிபரின் இல்லத்திற்கு வருகை தந்து தமது மரியாதைகளை அவருக்குச் செலுத்திச் செல்கின்றனர்’ என காவற்துறை உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.

கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்குப் பின்னர் திரு.சண்டாபரன என்னிடம் வந்தார். இன்னமும் அரை மணித்தியாலத்தில் திரு.ராஜபக்ச வந்துவிடுவார் என என்னிடம் கூறினார்.

நான் முன்னாள் அதிபரின் இல்லத்தின் நுழைவாயிலைக் கடந்து மிகச் சிறிய பாதுகாப்பு அறைக்கு அடுத்துக் காணப்பட்ட ஒரு இருக்கையில் அமருமாறு கூறப்பட்டேன். இங்கு மக்கள் தமது கைத்தொலைபேசிகளை கையளித்து விட்டு வரிசையில் அமைதியாகக் காத்திருந்தனர்.

காலை 9.15, இல்ல வளாகத்திற்குள் மிகப் பெரிய கறுப்பு நிற கார் ஒன்று நுழைந்ததை நான் கண்டேன். உடனே அங்கு கூடியிருந்த மக்கள் நீங்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பீர்கள் என வாழ்த்தினர். இறுதியாக திரு.ராஜபக்ச தனது இல்லத்திற்கு வந்தடைந்திருந்தார்.

திரு.சண்டபரான என்னைக் கூட்டிச் செல்வதற்காக வந்தார். அதற்கு முன்னர் நான் எனது கைப்பையை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கையளிக்க வேண்டியிருந்தது. நாங்கள் நீண்டு சென்ற மக்கள் வரிசையைக் கடந்து சென்று கொண்டிருந்தோம்.

‘பாகிஸ்தானிய பெண்மணி ஒருவர் தங்களைச் சந்திக்க விரும்புவதாகவும் ஏனெனில் அவரது உள்ளத்திலும் பாகிஸ்தானிய மக்களின் இதயங்களிலும் நீங்கள் வாழ்வதாக நான் ஏற்கனவே திரு.ராஜபக்சவிடம் கூறியுள்ளேன்’ என திரு.சண்டபரான என்னிடம் தெரிவித்தார். ‘ஆம். உண்மையில் அப்படித்தான்’ என நான் பதிலளித்தேன்.

மக்கள் வரிசையில் காத்திருந்த போது அவர்களைக் கடந்து என்னை ஒரு அறைக்குள் கூட்டிச்சென்றார். அங்கு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் பழுப்பு நிற தோலாலான கதிரையில் அமர்ந்திருந்தார். அவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். நாங்கள் கைகுலுக்கினோம்.

‘உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி’ என நான் அவரிடம் கூறினேன். ‘தங்களைச் சந்திப்பது போன்று எமது நாட்டின் முன்னாள் அதிபரைச் சந்திப்பதென்பதைக் கற்பனையில் கூட என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. நீங்கள் மிகவும் பிரபலமடைந்துள்ளீர்கள்’ என நான் அவரிடம் கூறினேன்.

அவர் பெருமை பொங்க எனது கைகளை மேலும் இறுக்கமாகப் பற்றிப்பிடித்தார். தமிழர் கிளர்ச்சியை முறியடிப்பதற்கு பாகிஸ்தான் தமக்கு உதவியதாக நான் சந்தித்த இலங்கையர்கள் சிலர் என்னிடம் கூறியது தொடர்பாக திரு.ராஜபக்சவிடம் நான் வினவினேன்.

‘அமெரிக்கா, ஐரோப்பா, மேற்குலகம் போன்றன எமது நண்பர்களல்ல. எமக்கு பாகிஸ்தான் உதவியுள்ளது. குறிப்பாக முசாரப் உதவியுள்ளார். எனது நாட்டில் இடம்பெற்ற கிளர்ச்சி போன்றே உங்களுடைய நாட்டிலும் கிளர்ச்சி இடம்பெறுகிறது. இதற்குப் பின்னால் இந்தியாவின் றோ அமைப்பு செயற்படுகிறது’ என திரு.ராஜபக்ச குறிப்பிட்டார்.

பாகிஸ்தானும் சிறிலங்காவும் எவ்வாறு மேலும் நெருக்கமான உறவைக் கட்டியெழுப்ப முடியும் என நான் அவரிடம் வினவினேன்.

‘நான் இரண்டு தடவைகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். நான் தக்சிலவுக்குச் சென்று பௌத்த எச்சங்களைப் பார்த்துள்ளேன். இவை தொடர்பாக இங்குள்ள மக்களுக்கு எதுவும் தெரியாது’ என திரு.ராஜபக்ச தெரிவித்தார்.

‘கிழக்கில் வாழும் முஸ்லீம்களும் வடக்கில் உள்ள மக்களும் தற்போது நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தவறாக வழிநடாத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக இவர்கள் அனைத்துலக சக்திகளால் தவறாக வழிநடத்தப்பட்டனர்’ என மகிந்த ராஜபக்ச விளக்கினார்.

பாகிஸ்தானிய மக்களுக்கு ஏதாவது செய்தியைக் கூறப்போகிறீர்களா என நான் ராஜபக்சவிடம் வினவியபோது, ‘உங்களது நாட்டில் தற்போது இடம்பெறும் கிளர்ச்சி விரைவில் முடிவுறும். நாடு வளம்பெறும். நாங்கள் மேலும் நெருக்கமானவர்களாவோம்’ என திரு. ராஜபக்ச குறிப்பிட்டார்.

திரு.ராஜபக்சவிடமிருந்து விடைபெறுவதற்கு முன்னர் என்னை அவர் சந்தித்ததற்காக நான் நன்றி கூறியதுடன் ‘நீங்கள் தற்போதும் சோதிடத்தில் நம்பிக்கை கொண்டுள்ளீர்களா’ என நான் திரு.ராஜபக்சவிடம் வினவினேன்.

அதற்கு அவர் ‘தற்போது நான் சோதிடத்தில் நம்பிக்கை கொள்ளவில்லை’ எனக் கூறிவிட்டு உரத்துச் சிரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *