மேலும்

தமிழ்மக்களை ஐ.நா ஏமாற்றிவிட்டது – யாழ். பேரணியில் மன்னார் ஆயர் உரை

Bishop-Rayappu-Josephவிசாரணை அறிக்கையைப் பிற்போட்டுள்ளதன் மூலம், தமிழ் மக்களை ஐ.நா ஏமாற்றி விட்டதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று பல்கலைக்கழக சமூகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட நீதி கோரும் அமைதிப் பேரணியில், பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“இது நீதியைக் கேட்கின்ற வைபவம். பிற்போடப்படும் நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பது சட்டத்தின் அடிப்படைத் தத்துவமாக உள்ளது.

உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றுதான் நாம் ஐ.நாவை நாடினோம். அவர்கள் எங்களை கைவிட்டு விட்டதாகவும் ஏமாற்றி விட்டதாகவும் உணர்கிறோம்.

உள்ளக விசாரணை செய்ய 6 மாதம் போதாது. ஒரு ஆண்டு, ஒன்றரை ஆண்டுகள் ஆகலாம். அதற்கு மேலும் செல்லலாம். முழுமையாக செய்ய முடியாது. அடுத்த மார்ச் மாதம் என்று பிற்போட்டு அப்படியே காலம் கடத்தலாம்.
இந்த நாட்டில் உள்ளவர்கள் தான் குற்றங்களைச் செய்தவர்கள். குற்றம் செய்தவனை நீதிவானாக்குவது எப்படி?

குற்றம்சாட்டப்பட்ட நபரும் நீதிவானும் ஒருவராக இருக்க முடியாது. அதுவும் சட்டத்தின் நியதி தான். அதுதான் இங்கு நடக்கப் போகிறது.

பாரபட்சமற்ற விசாரணை எமக்கும் தேவை. உள்நாட்டு விசாரணை அனைத்துலக பிரதிநிதிகளை சேர்த்துக் கொண்டு செய்யப்படலாம். அதுவே உண்மையை கண்டறிய சிறந்த பொறிமுறையாக அமையும்.

அரசாங்கத்தின் ஆவணங்களின் அடிப்படையில் 8 மாதங்களில் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் அழிக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *