மேலும்

சுதந்திர நாள் அணிவகுப்பில் அரச தலைவர்களைக் கொல்லச் சதி – புலனாய்வுத் தகவலால் முறியடிப்பு

maithri-national dayசிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில், புதிய அரசாங்கத்தின் தலைவர்களைக் கொலை செய்யும் சதித் திட்டம் ஒன்று குறித்து முன்னரே தகவல் கிடைத்ததால், அதனைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 4ம் நாள் கொண்டாடப்பட்ட சிறிலங்காவின் சுதந்திர நாளுக்கு முன்னதாக, அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு புலனாய்வு  எச்சரிக்கை கிடைத்தது.

கோட்டே நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே நடக்கும் இராணுவ அணிவகுப்பில்  அரச தலைவர் ஒருவர் அல்லது தலைவர்கள் தாக்குதலுக்குள்ளாகும் வாய்ப்பு இருப்பதாக அந்த புலனாய்வு அறிக்கை எச்சரித்திருந்தது.

1981ம் ஆண்டு இராணுவ அணிவகுப்பு ஒன்றில் எகிப்திய அதிபர் அன்வர் சதாத் படுகொலை செய்யப்பட்டது போன்ற தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது.

இராணுவ அணிவகுப்பை பார்வையிட்டுக் கொண்டிருந்த எகிப்திய அதிபர் அன்வர் சதாத், அணிவகுப்பில் சென்று கொண்டிருந்த இராணுவ வாகனங்களில் இருந்து திடீரெனக் குதித்த படையினரால் சரமாரியாக சுடப்பட்டு மரணமானார்.

புலனாய்வு எச்சரிக்கையை பாதுகாப்புச் செயலர் பி.எம்.யூ.டி.பஸ்நாயக்க, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.

அதையடுத்து, சிறிலங்கா அதிபர் தலைமையில், நடந்த கூட்டத்தில், அத்தகைய முயற்சிகளைத் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து திட்டமிடப்பட்டன.

எந்த அசம்பாதவிதங்களும் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்த உடனடியாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக, அரசாங்க வட்டாரம் ஒன்று கூறியது.

எனினும், சரியான இலக்கு  அல்லது இலக்குகள் யார் என்றோ, எந்த இடத்தில் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாகவோ அந்த எச்சரிக்கையில் கூறப்படவில்லை.

புலனாய்வுத் தகவல் நம்பகமாகத் தோன்றுவதாக கூறிய அந்த அரசாங்க வட்டாரம், மேலும் விரிவாக அதுபற்றிக் கூறு மறுத்து விட்டது.

இந்த அதிரடித் தாக்குதல் எச்சரிக்கை கிடைக்க முன்னரே, சுதந்திர நாள் கொண்டாட்டத்தை எளிமையாக நடத்துவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்திருந்தார்.

அணிவகுப்பில் இராணுவ தளபாடங்களைக் காட்சிப்படுத்துவது அவசியமிலலை என்றும், போர் விமானங்களில் அணிவகுப்புத் தேவையில்லை என்றும்,அவர் முடிவு செய்திருந்தார்.

அத்துடன் நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பங்கேற்பதையும் அவர் விரும்பவில்லை என்றும், கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *