மேலும்

அமெரிக்க பரப்புரை நிறுவனங்களை நட்டாற்றில் கைவிட்ட மகிந்த ஆட்சி

Dollarஅமெரிக்காவில் சிறிலங்காவின் நன்மதிப்பை உயர்த்துவதற்கு பரப்புரை நிறுவனங்களுடன் முன்னைய அரசாங்கத்தினால் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகள் புதிய அரசாங்கத்தினால் முறித்துக் கொள்ளப்பட்டுள்ளன.

போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட சிறிலங்கா வோசிங்டனில் நண்பர்களை வளைத்துப் போடுவதற்காக, பத்தாயிரக்கணக்கான டொலர்களை மாதம் தோறும், இந்த பரப்புரை நிறுவனங்களுக்கு முன்னைய அரசாங்கம் செலுத்தி வந்தது.

ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி வருகிறது.

இதையடுத்தே, அமெரிக்க பரப்புரை நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகளை புதிய அரசாங்கம் முறித்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.

அமெரிக்க அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகங்கள், மற்றும் கருத்துருவாக்குனர்கள் மத்தியில் சிறிலங்காவுக்கு ஆதரவான பரப்புரையை மேற்கொள்வதற்காக, வோசிங்டனைத் தளமாக கொண்ட, எட்டு நிறுவனங்களுடன் உடன்பாடுகள் செய்து கொள்ளப்பட்டுள்ளதாக, கடந்த ஆண்டில் அமெரிக்க நீதித் திணைக்களம் தெரிவித்திருந்த்து.

இந்த நிறுவனங்களுக்கு மாதம் 5 ஆயிரம் டொலர் தொடக்கம்,75 ஆயிரம் டொலர் வரை கட்டணமாகச் செலுத்தப்பட்டு வந்தது.

இந்த நிறுவனங்களின் உதவி தற்பாது தேவையில்லை என்று சிறிலங்காவின் புதிய அரசாங்கம் கருதுவதாகவும், இதனால், தேர்தலுக்குப் பின்னர், இந்த நிறுவனங்களுடனான உடன்பாடுகள் முறித்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவாசம் தெரிவித்துள்ளார்.

மாதம் 35 ஆயிரம் டொலருக்கான உடன்பாட்டினை நீடிக்க முடியாது என்று தேர்தலுக்குப் பின்னர், சிறிலங்கா துதரகம் தமக்கு அறிவித்திருப்பதாக, நீல்சன் முல்லியன்ஸ் ரிலே மற்றும் ஸ்காபரோ எல்எல்பி நிறுவனங்களைச் செர்ந்த வினோதா பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களை முன்னாள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரான சஜின் வாஸ் குணவர்த்தனவே பணிக்கு அமர்த்தியிருந்தார்.

தமது நிறுவனத்துக்கான கடைசி காலாண்டு கட்டணம், முற்பணமாக செலுத்தப்பட்டு விட்டதாகவும், வினோதா பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஆனால், சிறிலங்கா மத்திய வங்கியால் பணிக்கு அமர்த்தப்பட்ட, லெவிக் மூலோபாய தொடர்பால் நிறுவனத்தின் சேவை கடந்த ஜனவரி 28ம் நாளுடன் முடிவுறுத்தப்பட்ட போதிலும், தமக்கு மூன்று மாதங்களுக்கான கொடுப்பனவான 180,000 டொலர் இன்னமும் செலுத்தப்படாமல் நிலுவையாக இருப்பதாக, அந்த நிறுவனத்தின் நிறைவேற்று உதவித் தலைவர் கொன்னி மார்க் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தாம், சிறிலங்கா தூதுவருடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

ஆனால்,  பரப்புரை நிறுவனங்களுக்கு ஏதேனும் கட்டண நிலுவை இருக்கிறதா என்று தனக்குத் தெரியாது என்றும், தான் அத்தகைய உடன்பாடுகள் எதிலும் கையெழுத்திடவில்லை என்றும் கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவில் தூதுவராகப் பதவியேற்ற பிரசாத் காரியவாசம்,ஏபி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *