மேலும்

ஏமாற்றத்துடன் ஓய்வுபெறுகிறார் தயா ரத்நாயக்க – இராணுவத் தளபதி நியமனத்தில் கயிறிழுப்பு

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்கவுக்கு புதிய அரசாங்கம் சேவை நீடிப்பு வழங்க மறுத்துள்ள நிலையில், அவர் இன்றுடன் ஓய்வுபெற்றுச் செல்கிறார்.

சிறிலங்கா இராணுவத்தின் 20வது தளபதியாக இருப்பவர் லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க.

2013ம் ஆண்டு, இராணுவத் தலைமையில் மாற்றம் செய்யப்பட்ட போது, சேவை மூப்பு வரிசையில், முதல் நிலையில் இருந்த மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவை ஒதுக்கி விட்டு, அவரை விட இளையவரான லெப். ஜெனரல் தயா ரத்நாயக்க அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்தே ரஷ்யாவுக்கான துணைத் தூதுவர் பதவி மேஜர் ஜெனரல் கிரிசாந்த  டி சில்வாவுக்கு வழங்கப்பட்டது.

இன்றுடன், லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்கவின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், புதிய அரசாங்கத்திடம் அவர் தனது பதவியை நீடிக்குமாறு கோரியிருந்தார்.

ஆனால், அதிபர் தேர்தலுக்கு மறுநாள் அதிகாலையில் அலரி மாளிகையில் சதித்திட்டம் தீட்டப்பட்ட போது, லெப். ஜெனரல் தயா ரத்நாயக்கவும் அங்கிருந்ததாகவும், எனினும் அவர் அதற்கு ஒத்திழைக்க மறுத்திருந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

எனினும், லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்கவுக்கு சேவை நீடிப்பு வழங்கப்படுவதை முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா விரும்பவில்லை.

பதவியை விட்டு விலகும் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்கவும், புதிய தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவும் அருகருகே.

புதிய இராணுவத் தளபதி நியமன விடயத்தில் , ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் அழுத்தங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது இராணுவ மூப்பு வரிசைப்படி மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவே முதல் நிலையில் இருப்பதால் அவரை நியமிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

அதேவேளை, தனக்கு நெருக்கமானவரும், 2010ம் ஆண்டு இராணுவத்தில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு மீண்டும் அண்மையில் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை இராணுவத் தளபதியாக நியமிக்க ஜெனரல் சரத் பொன்சேகா, சிறிலங்கா அதிபருக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டால், இராணுவத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம், மறைமுகமாக ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வந்து விடும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருதியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், மேஜர் ஜெனரல் ஜெகத் ரம்புக்பொத்தவை இராணுவத் தளபதியாக நியமிக்க ஜெனரல் சரத் பொன்சேகா,வலியுறுத்தியதாகவும், எனினும், மூப்பு வரிசைப்படி மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவை நியமிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கையை தட்டிக்கழிக்க முடியாத நிலை சிறிலங்கா அதிபருக்கு ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தற்போதைய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் தயா ரத்நாயக்க இன்றுடன் ஓய்வு பெறுகின்ற நிலையில், புதிய இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரலாகத் தரமுயர்த்தப்படவுள்ள கிரிசாந்த டி சில்வா நாளை பதவியேற்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *