மேலும்

சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணை கவனமாக மதிப்பீடு செய்யப்படும்- ஐ.நா

farhan haqசிறிலங்காவில் பொறுப்புக்கூறும் உள்நாட்டு பொறிமுறை தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஐ.நா கவனமாக மதிப்பீடு செய்யும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹன் ஹக் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா குறித்த அறிக்கை பிற்போடப்பட்டுள்ளது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“புதிய அரசாங்கம் பொறுப்புக்கூறும் உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது குறித்து ஐ.நா பொதுச்செயலர் அறிவார். அதன் முன்னேற்றங்கள் குறித்து கவனமாக மதிப்பீடு செய்யப்படும்.

கடந்த வெள்ளிக்கிழமை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்த போது, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகள் போன்றவற்றில், சிறிலங்கா உறுதியானதும், தெளிவானதுமான கடப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் வலியுறுத்தியிருந்தார்.

சிறிலங்காவில் போருக்குப் பிந்திய ஏனைய நிகழ்ச்சி நிரலைப் போல, மேலதிக பொறுப்புக்கூறல், நாட்டில் அமைதி, ஜனநாயகம், அபிவிருத்தியில் மேலும் முன்னேற்றத்தைக் கொண்டு வரும்.

போருக்குப் பிந்திய பிரச்சினைகளைத் தீர்க்கும் சிறிலங்காவின் முயற்சிகளுக்குத் தொடர்ந்து உதவும் பொறுப்பு ஐ.நாவுக்கு உள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்  தீர்மானம் தொடர்பான பல்வேறு சமூகங்களின் பிரதிபலிப்புகளை ஐ.நா பொதுச்செயலர் அறிவார்.

புதிய அரசாங்கத்துடன் ஐ.நா பொதுச்செயலர் சாதகமான பேச்சுக்களில் ஈடுபடுவதுடன், அதன் முயற்சிகளுக்கு ஆதரவும் அளிப்பார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *