மேலும்

பொறுப்புக்கூறும் கடப்பாட்டை உறுதிப்படுத்துவதில் அமெரிக்கா உறுதியாக உள்ளதாம்

Keith-Harperசிறிலங்காவின் எல்லா மக்களுக்கும் பொறுப்புக்கூறல், நீதி, நல்லிணக்கம், மற்றும் மனிதஉரிமைகளுக்கு மதிப்பளிப்பதை உறுதிப்படுத்தும் கடப்பாட்டில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்கத் தூதுவர் கீத் ஹாப்பர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த விசாரணை அறிக்கையைப் பிற்போட ஐ.நா மனித உரிமைகள் பேரவை எடுத்துள்ள முடிவை வரவேற்று கீத் ஹாப்பர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர், “சிறிலங்கா தொடர்பான அறிக்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை எடுத்துள்ள ஒருமித்த முடிவை அமெரிக்கா ஆதரிக்கிறது.

முப்பதாண்டுப் போருக்குப் பின்னர், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும்,மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், நம்பகமான நீதி மற்றும் பொறுப்புக்கூறும் பொறிமுறைக்கு ஆதரவளிக்கவும், ஜனநாயகத்தை மீளமைக்கவும், நல்லாட்சியை ஏற்படுத்தவும், புதிய அரசாங்கம் எடுத்துள்ள ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை நாம் மதிக்கிறோம்.

புதிய திசையில் சிறிலங்கா பயணிப்பதற்கு சிறிலங்கா மக்கள் வாக்களித்துள்ளனர் என்று அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஜோன் கெரி குறிப்பிட்டிருந்தார்.

இப்போதிருந்து அறிக்கை வெளியிடப்படும் காலம் வரையாக உள்ள  நேரத்தை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்துடன் இணைந்து பணியாற்றுவதற்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், அறிக்கை வெளியிடப்படும் போது அதிலுள்ள பரிந்துரைகளை கவனத்தில் கொள்ளுமாறும் சிறிலங்கா அரசாங்கத்தை நாம் ஊக்குவிக்கிறோம்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், 25/1 தீர்மானத்தைக் கொண்டு வந்த பிரதான அனுசரணையாளர் என்ற வகையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மற்றும் அவரது குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட பணி முக்கியமானது என்று அமெரிக்கா நம்புகிறது.

இந்த ஆண்டு பிற்பகுதியில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையை அமெரிக்கா எதிர்பார்க்கிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் உண்மையுடன் நிறைவேற்றுவார் என்பதில், அமெரிக்கா முழு நம்பிக்கை கொண்டுள்ளது.

அவர் தனது ஆணையை எவ்வாறு மிகச்சிறந்த முறையில்  நிறைவேற்றலாம் என்பதற்கான வழிகாட்டுதலை வழங்க நாம் தயாராக இருக்கிறோம்.

அறிக்கையை வெளியிடுவதைத் தாமதிக்க எடுத்துள்ள ஒருமித்த முடிவுடன் நாமும் இணைந்து கொள்கிறோம்.

கிடைக்கக் கூடிய புதிய தகவல்களைக் கொண்டு சமர்ப்பிக்கக் கூடிய அறிக்கை, பேரவைக்கும், சிறிலங்கா மக்களுக்கும், போரின் போது என்ன நடந்தது என்ற இன்னும் தெளிவான விளக்கத்தைக் கொடுக்கும் என்று நம்புகிறோம்.

சிறிலங்காவின் எல்லா மக்களுக்கும் பொறுப்புக்கூறல், நீதி, நல்லிணக்கம், மற்றும் மனிதஉரிமைகளுக்கு மதிப்பளிப்பதை உறுதிப்படுத்தும் கடப்பாட்டில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது என்பதை மீளவும் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த இலக்குகளை அடைவதற்கு ஜெனிவாவில் முன்னெடுக்கப்படும் முயற்சிகள், அனைத்துலக சமூகமும், சிறிலங்காவும், இணைந்து செயற்படுவதற்கு உதவும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *