மேலும்

இந்திய – சிறிலங்கா அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

maithri-modi (1)சிறிலங்காவில் அதிகரித்துள்ள சீனாவின் செல்வாக்கை இல்லாதொழித்தல் என்பது குறுகிய காலத்தில் சிறிலங்காவைப் பொறுத்தளவில் இலகுவான காரியமல்ல.

இவ்வாறு firstpost.com இணையத்தளத்தில் ராஜீவ் சர்மா எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்ட போது,  திங்களன்று இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் இந்தியாவில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடானது நரேந்திர மோடி அரசாங்கத்தின் முதலாவது பாரிய இராஜதந்திர சாதனையாக நோக்க முடியும்.

சிறிலங்காவின் முன்னைய அரசாங்கம் சீன ஆதரவுக் கொள்கையை முற்றிலும் கடைப்பிடித்த நிலையில், சிறிலங்காவின் புதிய அரசாங்கம் இந்தியாவுடன் மேற்கொண்டுள்ள அணுசக்தி உடன்பாடானது முன்னைய அரசாங்கத்தின் வெளியுறவுக் கோட்பாட்டிற்கு முற்றிலும் எதிர்மாறாகச் செயற்பட ஆரம்பித்துள்ளதையே சுட்டிக்காட்டுகிறது.

ஏப்ரல்-மே மாதங்களில் இடம்பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக எவ்வித கவலையும் கொள்ளாது அதிபர் சிறிசேன இந்தியாவுடன் அணுசக்தி உடன்பாட்டை மேற்கொண்டுள்ளார்.

கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சவிடமிருந்து பெரியளவு வேறுபாட்டில் சிறிசேன வெற்றி பெறாத போதிலும் இந்தியாவுடன் மேற்கொண்டுள்ள உடன்பாடானது சிறிசேனவின் தன்னம்பிக்கையின் உச்சத்தையே வெளிப்படுத்தி நிற்கிறது.

அத்துடன் தற்போதும் சிறிலங்காவில் சீன ஆதரவு நிலைப்பாடு அதிகம் காணப்படுகின்ற அதேவேளையில் அதிபர் சிறிசேன இத்தகையதொரு பாரிய இராஜதந்திர நகர்வை முன்னெடுத்துள்ளமை இவரது உச்சமான தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

சிறிசேனவின் இத்தகைய தன்னம்பிக்கையைத் தான் தவறாகக் கருதவில்லை என இந்தியா நம்புகிறது.

அத்துடன் சிறிலங்காவில் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சிறிசேன வெற்றிபெறுவார் எனவும் இந்தியா நம்புகிறது.

உயிர்த்துடிப்பான ஒரு அணுசக்தித் திட்டம் தொடர்பாக சிறிலங்கா தற்பெருமை கொள்ளவில்லை என்பதும், 2031ல் 6000 மெகாவற் அணுசக்தியை உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை சிறிலங்கா கொண்டுள்ளது என்பதும் மிகவும் முக்கிய விடயமாகும்.

ஆகவே, சிறிலங்காவில் அணுசக்தி என்பது பாரியதொரு விவகாரமாகவோ அல்லது இது சிறிலங்காவுக்குத் தேவை என அழுத்தம் வழங்கப்படாத இக்காலப்பகுதியில் சிறிலங்கா ஏன் இந்தியாவுடன் அணுசக்தி உடன்பாட்டை மேற்கொண்டுள்ளது?

இந்தக் கேள்விக்குச் சாதகமான பதில்களை ஆராய்வதற்கு முன்னர், தற்போது சிறிலங்காவும் இந்தியாவும் மேற்கொண்டுள்ள அணுசக்தி உடன்பாடு தொடர்பாகச் சுருக்கமாக நோக்க வேண்டும்.

‘அணுசக்தியின் அமைதி மிக்க பயன்கள்’ (Peaceful Uses of Nuclear Energy)  என்கின்ற பெயரில் சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள அணுசக்தி ஒத்துழைப்பானது இது தொடர்பான அறிவு, சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்கள், வளங்கள் போன்றவற்றை பரிமாறுதல், மாற்றிக்கொள்ளுதல் போன்றவற்றுடன், திறன் அபிவிருத்தி, அணுசக்தியை அமைதி வழியில் அதாவது வன்முறையற்ற வழிகளில் பயன்படுத்துவதற்கான ஆட்களைப் பயிற்றுவித்தல், அணுசக்திப் பாதுகாப்பு, கதிரியக்கப் பாதுகாப்பு, கதிரியக்க விரய முகாமைத்துவம், அணுசக்தி மற்றும் கதிரியக்க அனர்த்த முகாமைத்துவம், சூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொள்ளுதலை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.

இந்தியா சார்பில் அணுசக்தித் திணைக்களத்தின் செயலர் றட்ண குமார் சிங்கவும், சிறிலங்கா சார்பாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் அணுசக்தி ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்

‘நாம் தற்போது செய்து கொண்டுள்ள சிவில் அணுசக்தி இருதரப்பு உடன்படிக்கையானது எமது இருதரப்பு நம்பிக்கையின் பிறிதொரு நகர்வாகும்.

சிறிலங்கா இவ்வாறானதொரு உடன்படிக்கையில் தற்போது முதன்முறையாகக் கைச்சாத்திட்டுள்ளது.

விவசாயம், சுகாதாரம் போன்ற துறைகள் உட்பட பல்வேறு விடயங்களில் ஒத்துழைப்பை வழங்கக் கூடிய வழிவகையை இது உருவாக்கியுள்ளது’ என அணுசக்தி ஒத்துழைப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், அதிபர் சிறிசேனவுடன் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய ஊடக மாநாட்டில் குறிப்பிட்டிருந்தார்.

சிறிலங்கா தனது நாட்டில் அணுசக்தி அடிக்கட்டுமானத்தை நிறுவுவதற்குத் தேவையான ஆளணிகளுக்கான பயிற்சி உட்பட பல்வேறு வகைகளில் இந்த உடன்பாடு மூலம் இந்தியா, சிறிலங்காவுக்கு உதவுவதுடன், இலகு தர சிறிய அளவில் அணு உலைகளை இந்தியா சிறிலங்காவுக்கு வழங்குவது வரை விரிவுபடுத்தப்படும்.

இந்தியப் பிரதமர் சிறிலங்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் தெரிவித்தார். ஆனால் இது தொடர்பான மேலதிக விபரங்கள் எதனையும் பிரதமர் வெளியிடவில்லை.

சிறிலங்காவின் முன்னாள் அரசாங்கத்துடன் கொழும்பு வர்த்தகத் துறைமுகத்திற்கு அருகே கப்பற்றுறை ஒன்றை 1.5 பில்லியன் டொலர்களில் அமைப்பதற்கு சீனா கைச்சாத்திட்ட நிலையில், சிறிசேன அரசாங்கத்தின் இந்தியாவுடனான நட்புறவானது சீனாவுக்கு பாரியதொரு அதிருப்தியை ஏற்படுத்தும்.

சிறிலங்கா தனது நாட்டில் அணுசக்திச் செயற்பாடுகளை விரிவுபடுத்த விரும்பியிருந்தால் சீனா, ரஸ்யா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உதவிகளைக் கோரியிருக்க முடியும்.

ஆனால் இந்த நாடுகளைத் தெரிவு செய்யாது இதற்குப் பதிலாக சிறிலங்கா, இந்தியாவைத் தெரிவு செய்துள்ளது. இது சிறிசேனவின் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள எழுதப்படாத ‘நன்றியுரை’ ஆகும்.

எதுஎவ்வாறிருப்பினும், சிறிலங்காவில் அதிகரித்துள்ள சீனாவின் செல்வாக்கை இல்லாதொழித்தல் என்பது குறுகிய காலத்தில் சிறிலங்காவைப் பொறுத்தளவில் இலகுவான காரியமல்ல.

கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறிலங்காவில் சீனா நான்கு பில்லியன் டொலர்கள் வரை முதலிட்டுள்ளது.

வரும் சில மாதங்களில் இந்தியா-சிறிலங்கா உறவு நிலை மிகவும் சுவாரசியம் மிக்கதாக இருக்கும்.

அடுத்த மாதம் சிறிலங்காவுக்கான தனது சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி மேற்கொள்ளவுள்ளதானது இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய நகர்வில் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *