மேலும்

ஐ.நா அறிக்கை செப்ரெம்பர் வரை ஒத்திவைப்பு – ஒருமுறை மட்டும் அவகாசம் என்கிறார் ஆணையாளர்

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகளின் அறிக்கையை வெளியிடுவதை ஐ.நா மனித உரிமைகள் பேரவை செப்ரெம்பர் மாதம் வரை ஒத்திவைத்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அளித்த பரிந்துரைக்கு மனித உரிமைகள் பேரவை நேற்று பிற்பகல் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த அறிக்கையை ஒத்திவைக்க தாம் கோரியதற்கான காரணங்கள் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விளக்கமளித்துள்ளார்.

அதில், அவர்  “இந்த ஒரு முறை மட்டுமே தாம் அறிக்கையை ஒத்திவைக்கப்படுகிறது. அறிக்கை வரும் செப்ரெம்பர் மாதம் வெளியிடப்படும் என்பதை உறுதிப்படுத்துகிறேன்.

எனது கோரிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவை நேற்று பிற்பகல் ஏற்றுக் கொண்டுள்ளது.

இது ஒரு சிக்கலான முடிவு.  அறிக்கையை உண்மையான காலஅட்டவணையில் வெளியிட வேண்டும் என்பதற்கு நல்ல வாதங்கள் இருக்கின்றன.

அதேவேளை, சிறிலங்காவில் மாறி வரும் நிலைமைகளில் இந்த அறிக்கையை பலப்படுத்தும் வகையில் மேலும் புதிய ஆதாரங்கள் கிடைக்கலாம் என்ற வலுவான வாதங்களும் உள்ளன.

மேலதிகமாக, முக்கியமான மனித உரிமை விவகாரங்களில் முழுமையாக எனது பணியகத்துடன் ஒத்துழைக்கத் தயாராக உள்ளதாக, சிறிலங்காவின் புதிய அரசாங்கத்திடம் இருந்து தெளிவான உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.

முன்னைய அரசாங்கம் இதனைச் செய்ய மறுத்து விட்டது.

புதிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு, அவர்களது கடப்பாடுகளை யதார்த்தமாக்க எனக்கு உதவும்.

ஒருமுறை அறிக்கையைத் தற்காலிகமாக ஒத்திவைப்பது, மனித உரிமை விவகாரங்களில் ஒத்துழைப்பு வழங்க விரும்பும் புதிய அரசாங்கத்துக்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக அமையும் என்று, ஐ.நா விசாரணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க, முன்னைய ஆணையாளர் நவிபிள்ளையினால் நியமிக்கப்பட்ட, மூன்று நிபுணர்களும்,  ஒருமித்த கருத்தை எனக்கு தெரிவித்துள்ளனர்.

இவற்றைக் கருத்தில் கொண்ட பின்னரே, இன்னும் வலுவானதும், விரிவானதுமான அறிக்கையை சமர்ப்பிக்க மேலதிக காலஅவகாசத்தைக் கோருவதென முடிவு செய்தேன்.

சிறிலங்காவில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், தைரியமான வந்து, விசாரணைக்குழுவின் முன்பாக  சாட்சியம் அளித்தவர்கள்,  இது, அறிக்கையைக் கிடப்பில் போடுவதற்கான முதற்படியாக இருக்கலாமோ, அல்லது நீர்த்துப் போகச்செய்வதற்கான முயற்சியாக இருக்கலாமோ, இதனைத் தம்மால் பார்வையிட முடியாமல் போகுமோ என்று அச்சம் கொண்டிருக்கின்றனர் என்பதை நான் அறிவேன்.

அவர்களின் அச்சத்தையும் ஆழமான கவலைகளையும், நான் முழுமையாகப் புரிந்து கொள்கிறேன்.

சிறிலங்காவில் உள்நாட்டு விசாரணைகள் தோல்வியடைந்த வரலாற்றுப் பின் புலத்தில் தான், இந்த அனைத்துலக விசாரணைகளுக்கு,  முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்பதையும் நான் அறிவேன்.

எந்த தவறான புரிதலும் இருக்கக் கூடாது. வரும் செப்ரெம்பர் மாதம் இந்த அறிக்கை வெளியிடப்படும் என்பதில், நான் தனிப்பட்ட முறையில், உறுதியான, அசைக்க முடியாத கடப்பாட்டைக் கொண்டுள்ளேன்.

முன்னைய ஆணையாளர்களைப் போலவே, பாதிக்கப்பட்டவர்களின் வலுவான குரலாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

இந்த அறிக்கை ஒரு மெய்யான- நம்பகமான பொறுப்புக்கூறும், நல்லிணக்க செயல்முறையில் அதிகபட்சமான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும், அதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கான உண்மை, நீதி, இழப்பீடு என்பன இறுதியில் மதிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *