மேலும்

நிஷா பிஸ்வாலுடன் கூட்டமைப்புத் தலைவர்கள் சந்திப்பு

Nisha-TNAசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் நிஷா பிஸ்வால், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இன்று காலை 9 மணி தொடக்கம் 11 மணி வரை சுமார் 2 மணிநேரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Nisha-TNA

இந்தச் சந்திப்புக் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்து வெளியிடுகையில்,

இந்தச் சந்திப்பு பயனுள்ளதாக அமைந்தது. நடந்து முடிந்த அதிபர் தேர்தல் குறித்தும் அதன் பின்னரான நிலைப்பாடுகள் குறித்தும் நாம் விரிவாக எடுத்துக் கூறினோம்.

குறிப்பாக,  புதிய அரசாங்கம் முக்கியமான விடயங்களில் கவனம் செலுத்தி வருகிறது.

ஊழலை இல்லாதெழித்தல், ஜனநாயகத்தை மீள உருவாக்குதல், நல்லாட்சியைத் தோற்றுவித்தல் போன்ற செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதிபர் தேர்தலில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்திற்கு தமிழ் மக்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

அவர்களது எதிர்பார்ப்புகள் இந்த அரசின் ஊடாக பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

இராணுவத்திற்கென சுவீகரிக்கப்பட்ட பெருமளவு  காணிகள் அவர்களது பயன்பாட்டில் இல்லை.

இவ்வாறான காணிகளை உடனடியாக விடுவித்து அந்த இடங்களில் மக்களை உடனடியாக மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஏனைய காணிகளையும் விடுவித்து மக்களை முழுவதுமாக குடியமர்த்த வேண்டும்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்து தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை இந்த அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.

இதற்கு அமெரிக்கா இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் படிப்படியாக தீர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் நிஷாவிடம் எடுத்துக் கூறினோம்.

அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் எந்தவித தடங்கல், தாமதம் இன்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கோரினோம்.

எமது கோரிக்கைகளை முழுமையாக ஏற்றுக்கொண்ட அவர் இது குறித்து சிறிலங்கா அரசாங்கத்திற்கு அமெரிக்கா தெரியப்படுத்தும் என்றும் உறுதியளித்தார்.

அத்துடன், சிறிலங்கா குறித்து இடம்பெறும் விசாரணைகள் முடிவடைந்திருப்பின் அந்த அறிக்கை ஜெனிவாவில் அடுத்த மாதம் கூடவுள்ள மனித உரிமைகள் பேரவையில் அமர்வில் சமர்ப்பிக்கப்படலாம்.

அது குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நடவடிக்கை எடுப்பார் என்று நிஷா பிஸ்வால் பதிலளித்தார்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *