மேலும்

திருக்கோணமலை மாவட்டம்: தொடரும் மழை, பெரு வெள்ளம் – வாழ்வாதாரமின்றி மக்கள் தவிப்பு

திருக்கோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்ச்சியான மழையினால் திருக்கோணமலையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

கந்தளாய்க் குளத்தின் வான் கதவுகள் அனைத்தும் திறந்துவிடப்பட்டதனால் தம்பலகமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளியடி, நடுப்பிரப்பன்திடல், சின்ன வர்ணமேடு, பெரிய வர்ணமேடு, கரைச்சைத்திடல், கள்ளிமேடு, சிப்பித்திடல், நாயன்மார்திடல், ஐயனார்திடல், மாக்கைத்திடல், குஞ்சடப்பன்திடல், கோவிலடி, பட்டிமேடு ஆகிய பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

வீடுகளில் வெள்ள நீர் 3 அடி உயரம் வரை புகுந்துள்ளது. கிராம மக்கள் தம்பலகமம் ஆதிகோணேஸ்வரா மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான சமைத்த உணவினை தம்பலகமம் பிரதேச செயலகத்தினூடாக பிரதேச செயலாளர் வழங்கி வருகின்றார். 20.12.2014 ஆம் நாள் முழுநாளுமே பிரதேச செயலர் மக்களுடன் இருந்து அவர்களுக்குத் தேவையான வசதிகளை நேரடியாகவே செய்திருந்தார். மழை தொடர்ச்சியாகப் பெய்து வருவதனால் வெள்ளநீரின் மட்டம் உயர்ந்து வருகின்றது.

வயல்நிலங்கள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. கடந்த மாரி, கோடை என இரு போகங்களும் நீர் இன்மையினால் தம்பலகமம் பிரதேசத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவில்லை. கடன்பட்டே இம்முறை விவசாயிகள் நெற்செய்கையினை மேற்கொண்டிருந்தனர்.

இப்பெரு வெள்ளம் காரணமாக தம்பலகமம் பிரதேசத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.

எவ்வாறு எதிர்கால வாழ்க்கையினை தொடர்வதென்றே தெரியாமல் உள்ளதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

கூட்டாம்புளி – வர்ணமேடு வீதியின் மதகொன்று உடைந்ததனால் அவ்வீதியினால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தம்பலகமம் – கிண்ணியாப் போக்குவரத்து வீதியினை குறுக்கறுத்து நீர் பாய்ந்தோடுவதனாலும் வீதி ஒரு இடத்தில் உடைந்திருப்பதனாலும் இவ்வீதியூடான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது.

அத்துடன் தம்பலகமம் வடிச்சலாறு 22.12.2014 பிற்பகல் உடைந்துவிட்டதனால் இலங்கைநேசன் மில்லடியில் உள்ள வீதியின் மேலால் நீர் பாய்ந்தோடுகின்றது. நாளை அவ்வீதியினூடாகப் போக்குவரத்து துண்டிக்கப்படக்கூடிய அபாயம் நிலவுகின்றது.

மூதூர்:

தொடர்ச்சியான மழையினால் கட்டைப்பறிசான் நலன்புரிநிலையங்களில் உள்ள தற்காலிக கொட்டில்களினுள் நீர் புகுந்துள்ளது. இங்குள்ள மக்கள் சம்பூர் மகாவித்தியாலயத்தில் 20.12.2014 ஆம் நாள் இடம்பெயர்ந்து தங்கியிருந்தனர். அவர்களுக்கான சமைத்த உணவினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் திரு.கு.நாகேஸ்வரன் அவர்கள் வழங்கினார்.

சேனையூர், கட்டைப்பறிச்சான், கடற்கரைச்சேனை, நல்லூர், பள்ளிக்குடியிருப்பு, மேன்கமம், பாரதிபுரம், இருதயபுரம், கங்குவேலி, மணற்சேனை, சிவபுரம், பட்டித்திடல், பெருவெளி, சகாயபுரம், இறால்குழி ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் வயல்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தோட்டப்பயிர்கள் எல்லாம் ஊற்றுப்பிடித்து இறந்து விட்டன. வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது.

கங்குவேலிக்கு அருகாமையில் உள்ள மகாவலி ஆற்றின் அணைக்கட்டு 32 அடி நீளத்திற்கு 22.12.2014 ஆம் நாள் நள்ளிரவு 01.00 மணிக்கு உடைப்பெடுத்ததனால் மகாவலி நீர் வயல்நலங்களினூடாக பெருக்கெடுத்துள்ளது. கங்குவேலியை நோக்கி நீர் வந்துகொண்டிருக்கிறது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.மழை தொடர்ந்துகொண்டிருப்பதனால் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கின்றது.

இருதயபுரம் – சூரங்கல் வீதி முற்றாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

செய்தியும் ஒளிப்படங்களும் – க.திருச்செல்வம்,
[தலைவர் – தமிழரசுக்கட்சி மூதூர்த் தொகுதிக் கிளை]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *