மேலும்

மைத்திரி – ரணில் இரகசிய உடன்பாட்டில் கூறப்பட்டிருப்பது என்ன?

maithri-kandy-meeting (1)எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டதாக கூறப்படும், இரகசிய உடன்பாட்டின் பிரதியை, சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்டுள்ளார்.

நேற்று கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், கடந்த நவம்பர் 1ம் நாள் செய்து கொள்ளப்பட்ட இந்த உடன்பாட்டில் பிரதிகளை ஊடகவியலாளர்களுக்கு அவர் வழங்கினார்.

இதன்படி,  சிறிலங்கா தொடர்பான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எல்லாப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துவதாகவும், அனைத்துலக சமூகத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாகவும், மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் இணக்கம் கண்டுள்ளனர்.

வடக்கில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினரை 50 வீதத்தினால் குறைக்கவும்,  உயர்பாதுகாப்பு வலயங்களை சுருக்கி, காணி உரிமையாளர்களிடம் அவற்றை ஒப்படைக்கவும் இந்த உடன்பாட்டில் இணங்கப்பட்டுள்ளது.

13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கவும் இவர்கள் இணங்கியுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டை 40 வீதத்தினால் குறைத்து, அந்த நிதியின் பெரும் பகுதியை வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்குச் செலவிடவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதும், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகவும், சரித்த ரத்வத்தையை  அதிபரின் செயலராகவும் நியமிக்க வேண்டும்.

சிறிலங்கா அதிபர் பாதுகாப்பு அமைச்சு தவிர்ந்த வேறு எந்த அமைச்சுக்களையும் கைவசம்  வைத்திருக்கக் கூடாது.

பிரதமரின் ஒத்துழைப்புடனேயே அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

நிதி, கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், விவசாயம், வீதி மற்றும் நெடுஞ்சாலைகள், சக்தி, மற்றும் மின்சாரம், அரசியலமைப்பு மறுசீரமைப்பு, ஊடகம், உள்ளூராட்சி, மாகாணசபைகள், இளைஞர் விவகாரம், வர்த்தகம், மற்றும் துறைமுக அமைச்சுக்கள் உள்ளிட்ட 20 அமைச்சுக்கள் ஐதேகவுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் இந்த இரகசிய உடன்பாட்டு ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *