மேலும்

பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்

flood (4)வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக  கொட்டி வரும் பெருமழையால், பெரும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில், ஆறுகள் பெருக்கெடுத்தும், குளங்கள் நிரம்பியும், பல பகுதிகள் வெள்ளக் காடாக மாறியுள்ளன.

இந்தநிலையில், வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களிலும் கடும் மழை பெய்து வரும் நிலையிலும், குளங்கள் உடைப்பெடுக்கத் தொடங்கியுள்ளதை அடுத்தும், பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில், கந்தளாய் குளம் நிரம்பியதையடுத்து, அதன் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால், தம்பலகாமம், கந்தளாய் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

கட்டைப்பறிச்சான் இடம்பெயர்ந்தோர் முகாமுக்குள்ளேயும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

flood (2)

இந்தநிலையில், சேருவில பகுதியில் உள்ள கங்குவேலி, வவுணாவில் வெள்ளப் பாதுகாப்பு அணை உடைப்பெடுத்துள்ளதால் மூதூர் பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கங்குவேலி வவுணாவில் ‘வெள்ளம் தாங்கி’ என்ற பகுதியிலேயே  பாதுகாப்பு  அணை நேற்றிரவு உடைப்பெடுத்துள்ளதாக தெரியவருகிறது.

1958ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்குப் பின்பு மூதூர் மற்றும்  சேருவில பிரதேசத்தின் சில பகுதிகளை வெள்ளத்திலிருந்து   பாதுகாக்கும் நோக்கில் இந்தப் பாரிய அணை சுமார் 60 வருடங்களுக்கு முன்பு  அமைக்கப்பட்டது.

இந்த பாதுகாப்பு  அணை  உடைப்பெடுத்துள்ளதால், கங்குவேலி, படுகாடு. நீலாபொல பிரதேச வயல் நிலங்கள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மகாவலி கங்கையில் வெள்ளம் பெருக்கெடுத்ததாலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

flood (3)

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும், கடும் மழையினாலும், ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தினாலும், பெரும்பாலான குளங்கள் நிரம்பி வழிகின்றன.

இதனால் குளங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதால், குடியிருப்பு பகுதிகளும், வயல் நிலங்களும், வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் பல இடங்களில் இடுப்பளவுக்கு மேல் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளன.

இதற்கிடையே, மன்னாரில், மல்வத்து ஓயா உள்ளிட்ட ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தினால், நானாட்டான், முசலி, மாந்தை பிரதேசங்களிலுள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன.

வீதிகளில் போக்குவரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

flood (1)

வவுனியா மாவட்டத்தில் பாவற்குளம் உள்ளிட்ட பல குளங்களில் நீர் நிரம்பியுள்ளதால் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

மேலும் பல குளங்களின் அணைக்கட்டுகள் உடைப்பெடுத்து,  வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றான இரணைமடுக் குளம் நிரம்பியதையடுத்து, இன்று காலையில் 6 வான்கதவுகள் 6 அங்குல உயரத்துக்கு திறந்து விடப்பட்டன.

நேற்றுமாலை 30.5 அடியாக இருந்த இரணைமடுக்குளத்தின்  நீர்மட்டம் இன்று அதிகாலை 31.5 அடியாக  அதிகரித்தது.

இதனையடுத்து, அனர்த்த முகாமைத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, வான் பாயும் இடங்களிலுள்ள மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வான்கதவுகள் திறக்கப்பட்டன.

flood (4)

இந்தநிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று அதிகாலை 5 மணி தொடக்கம் கடுமையான மழை பெய்து வருவதாலும், இரணைமடுக்குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டலும், நகரத்தின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளன.

தொடர்ந்து மழை கொட்டிக்கொண்டிருந்ததால், இன்று காலை 10 மணியளவில் இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம், 31.7 அடியை எட்டியது.

இதையடுத்து 10 வான்கதவுகள் 8 அங்குலம் வரை திறந்து நீர் வெளியேற்றப்படுகிறது.

வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், குளத்தின் கீழ் உள்ள பன்னங்கண்டி, முரசுமோட்டை, கண்டாவளை, வெலிக்கண்டல், ஊரியான் போன்ற பகுதிகளிலுள்ள மக்களை அவதானத்தடன் இருக்கும்படி கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

2012ஆம் ஆண்டுக்குப் பின்னர், இரணைமடுக் குளத்தின்  வான்கதவுகள், இந்த ஆண்டே திறக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *