மேலும்

மட்டக்களப்பில் மகிந்தவுக்கு சிங்களவர்கள் எதிர்ப்பு – காவல்துறை தடியடி

batti-protest (1)சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இன்று மாலை  தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அரங்கிற்கு வெளியே, பிரதான வீதியில் அவருக்கு எதிராக சிங்களவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி சுமணரட்ண தேரர் தலைமையிலான குழுவினரே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்கள்  கூட்டம் நடைபெற்ற மைதானத்துக்குள் செல்ல முடியாத வகையில் மைதானத்தின் பிரதான வாயிலை படையினர் இழுத்து மூடியிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் உள்ள புளுக்குணாவ மற்றும் கெவுளியாமடு பகுதிகளில் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் அடங்கிய மனுவை மகஜரை சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கச் செல்வதாக, சுமணரட்ண தேரர் கூறிய போதிலும்,  அவர்களை படையினர் மைதானத்துக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

அதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், விகாதிபதிக்கும் சிறிலங்கா காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது.

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக  ஆர்ப்பாட்டகாரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டது.

இந்நிலையில், பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது உரையை முடித்து கொண்டு சென்றுவிட்டார்.

batti-protest (3)

batti-protest (4)

இதற்கிடையே சிறிலங்கா அதிபர் இன்று காத்தான்குடியில் பரப்புரை மேற்கொண்ட மைதானத்தில் கட்டப்பட்டிருந்த மகிந்த ராஜபக்சவின் பாரிய பதாதை முறிந்து வீழ்ந்து ஆறு பெண்கள் காயமடைந்தனர்.

காத்தான்குடி ஹிஸ்புல்லா அரங்கில் இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. சிறிலங்கா அதிபரின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த பெண்களே காயமடைந்தனர்.

அவர்கள் காத்தான்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக நால்வர் மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *