மேலும்

அரபுலக புரட்சி போல சிறிலங்காவில் ஏற்பட விடமாட்டேன் – முல்லைத்தீவில் மகிந்த சூளுரை

mahinda-speechஈராக்கிலோ, லிபியாவிலோ, எகிப்திலோ நிகழ்ந்தது போன்று சிறிலங்காவில் இடம்பெறுவதற்கு அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இன்று பிற்பகல் தேர்தல் பரப்புரை பேரணியில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ஈராக், லிபியா, எகிப்து போன்ற நாடுகளின் இன்றைய நிலையை பாருங்கள். அந்த நிலை சிறிலங்காவில் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது.

நாடு மீண்டும் இருண்ட யுகத்துக்குத் திரும்பிச் செல்வதற்கு இடமளிக்க முடியாது. மீண்டும் தீவிரவாதம் தலையெடுப்பதற்கு அனுமதிக்கமாட்டோம்.

நாங்கள் 30 ஆண்டுகள் போருக்குள் இருந்து விட்டோம். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே நாட்டை அபிவிருத்தி செய்ய முடிந்துள்ளது.

நாங்கள், இன, மத,மொழி ரீதியாக பிளவுபட்டு நின்றால் முன்நோக்கிச் செல்லமுடியாது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பின்னர் நாம் எல்லாவற்றையும் மாற்றியிருக்கிறோம்.

மக்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறோம்.

வடக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய வாய்ப்பளித்திருக்கிறோம்.  வடக்கில் அரசாங்கம் வீதிகள், பாடசாலைகள், மருத்துவமனைகளைப் புனரமைத்துள்ளது.

தமிழ்மக்கள் தவறான பரப்புரைகளுக்கு பலியாக கூடாது. சிறிலங்கா அரசாங்கம் எல்லா இலங்கையர்களையும் சம்மாகவே நடத்துகிறது, இனரீதியாக பிரித்துப் பார்க்கவில்லை.

அதிபர் தேர்தல் நாடு முழுவதற்குமானது. மக்கள் அதன் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும்.

மூன்றாவது பதவிக்காலத்துக்கு நான் தெரிவு செய்யப்படுவதற்கு தமிழ்மக்கள் உதவ வேண்டும்.” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையே கிளிநொச்சியில் சற்று முன்னர் சிறிலங்கா அதிபரின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *