மேலும்

வவுனியாவில் ஆணைக்குழுவைத் திணறவைத்த முறைப்பாடுகள்

missing-vavuniya-witness (1)வவுனியா மாவட்டத்தில் இருந்து காணாமற்போனோர் குறித்து, சிறிலங்கா அதிபர் நியமித்த ஆணைக்குழுவிடம் புதிதாக 328 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

காணாமற்போனோர் குறித்து விசாரணை செய்யும் அதிபர் ஆணைக்குழுவின் அமர்வு கடந்த நான்கு நாட்களாக வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்றது.

கடந்த 14ம், 15ம் நாள்களில் செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் ஆணைக்குழவின் அமர்வில் காணாமற்போனோர் குறித்த சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

நேற்று முன்தினமும், நேற்றும், வவுனியா பிரதேச செயலகத்தில், சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

இந்த நான்கு நாட்களிலும் மொத்தம், 214 பேருக்கு சாட்சியம் அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. இவர்களில் 179 பேர் தொடர்பாக சாட்சியங்களை உறவினர்கள் அளித்திருந்தனர்.

இந்தநிலையில், இந்த நான்கு நாட்களிலும், காணாமற்போனவர்கள் குறித்த 328 புதிய முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெருமளவில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தப் புதிய முறைப்பாடுகள், காணாமற்போனோர் குறித்து இன்னமும் பதிவு செய்யாமல் பெருமளவானோர் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.

இதையடுத்து, ஆணைக்குழுவிடம் பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தையும் தாண்டி விட்டதாகத் தெரியவருகிறது.

ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளை விசாரிக்க முடியாமல் திணறி வரும் அதிபர் ஆணைக்குழுவை புதிதாக குவிந்த முறைப்பாடுகள் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

வவுனியா மாவட்டத்தில் நான்கு நாட்களிலும் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களின் போது, பெரும்பாலானோர் சிறிலங்கா படையினர் மீதே குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.

missing-vavuniya-witness (1)

missing-vavuniya-witness (2)

missing-vavuniya-witness (3)

தமது உறவினர்களை சிறிலங்கா படையினர் பிடித்துச் சென்றதாகவும், வெள்ளைவானில் கடத்திச் சென்றதாகவும், வெளியில் சென்றிருந்த போது காணாமற்போனதாகவும், போரின் முடிவில் படையினரிடம் சரணடைந்த பின்னர் காணாமற்போனதாகவும், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த பின்னர், கைது செய்யப்பட்டு காணாமற்போனதாகவும், முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பலர் தமது உறவினர்கள் காணாமற்போக காரணமான சிறிலங்கா புலனாய்வு அதிகாரிகளின் பெயர்களையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை, விடுதலைப் புலிகள் மீதும் சில முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.

இந்தியப்படையினர் கைது செய்து காணாமற்போன 17 வயது இளைஞர் குறித்தும் அவரது பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டது.

மேலும், விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தளபதி ஒருவரின் மனைவி இரகசியமான சாட்சியத்தை அளித்திருந்தார்.

அத்துடன் விடுதலைப் புலிகளின் இம்ரான்-பாண்டியன் படையணித் தளபதியாக இருந்த ராகுலன், பிரான்சிஸ் அடிகளாருடன் படையினரிடம் சரணடைந்த பின்னர் காணாமற்போனதாக அவரது மனைவி முறைப்பாடு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *