மேலும்

உரிமைகளுக்காக அடிபணியத் தயாரில்லை – முதல்வர் விக்னேஸ்வரன்

wigneswaran-chennaiஅரசியல் ரீதியாக அடிபணிந்து எமது உரிமைகளைப் பெற நாங்கள் தயாராக இல்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.  

வடக்கு மாகாண பேரவையில் இன்று காலை 2015 ஆம் ஆண்டுக்கான நிதிஒதுக்கீட்டுச் சட்டத்தை சமர்ப்பித்து அறிமுகவுரை ஆற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.   அவர் தனது உரையில்,

”2009 இல் இருந்து 2013 வரையில் வெளிநாட்டுப் பணங்களுடனும், சர்வதேச நிறுவனங்களின் கடன்களுடனும் அரசாங்கம் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் ஈடுபட்டிருப்பினும், இந்தியா போன்ற நாடுகளின் உதவியுடன் வீடமைப்பில் ஈடுபட்டிருப்பினும், ஒரு சில சுய வாழ்வாதாரத் திட்டங்களில் ஈடுபாடு காட்டியிருப்பினும், பாதிக்கப்பட்டோர் சம்பந்தமான போதுமான விபரப்பட்டியலைப் பெறுவதற்கோ, அவர்களின் தனிப்பட்ட தேவைகளைக் கணித்தெடுப்பதற்கோ போரின் பின்னரான வடமாகாணத்தின் தேவைகளைக் கணித்தெடுப்பதற்கோ தவறிவிட்டது.

ஆனால் சமூகத்தின் மனோநிலை பற்றிய ஆராய்வு, அதாவது உள ஊனமுற்றவர்கள் பற்றிய ஆராய்வு, பிறப்பின் மூலமாகவும் நோயின் மூலமாகவும் வலுவிழந்தோர் சம்பந்தமான ஆராய்வு வாழ்வாதார அபிவிருத்தி பற்றிய ஆராய்வு, தொழில் வாய்ப்புக்கள் பற்றிய ஆராய்வு, போரின் பின்னரும் தொடர்ந்து நிலைகொண்டிருக்கும் பல்லாயிரம் படையினர் முகாமிட்டிருக்கும் சூழலில் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் தாக்கம் பற்றிய ஆராய்வு, சமூகத்தின் கலாசாரச் சீரழிவுகள் பற்றிய ஆராய்வு, தொடரும் வன்முறைக் கலாசாரங்கள் பற்றிய ஆராய்வு போன்றவை பற்றி முழுமையான ஆராய்ச்சி நடத்தப்படவில்லை.

இவை சார்பாக நாம் கேட்ட செலவீனங்களுக்காகத் தேவையான நிதியமும் எமக்குத் தந்துதவப்படவில்லை. அதாவது எம்மைப் போரினால் பாதிக்கப்படாத பிரதேசங்களுடன் வைத்துக் கணித்து அவ்வாறான நிதி உதவிகளே எமக்குந்தரப்பட்டு வந்துள்ளன. மேலதிகமாகக் கேட்டவை கொடுக்கப்படவில்லை.

இதனால் பலவித முன்னேற்ற நடவடிக்கைகள் ஸ்தம்பித்த நிலையில் உள்ளன.   இவற்றிற்கு மேலதிகமாக எம் சபையை உருவாக்க உதவி செய்த பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் வலுவிழந்து காணப்படுகிறது. வலுவற்றே காணப்படுகிறது என்று கூடக் கூறலாம்.

மாகாணசபை வழிமுறையானது அதிகாரப் பகிர்வை அடியொட்டியே இயற்றப்பட்டது. ஆனால் பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலு அடையச் செய்வதாகவே காணக் கூடியதாக உள்ளது.

ஆளுநர் அத்தகைய ஜனாதிபதியின் முகவராகச் செயற்படுகின்றார். மாகாணசபையால் எந்த ஒரு நியமனத்தையும் ஆளுநரின் அனுமதியின்றி வழங்க முடியாது. ஜனாதிபதி இது பற்றித் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வதை எவருந் தட்டிக் கேட்க முடியாத நிலையே தற்பொழுது நிலைபெற்றிருக்கின்றது.

இராணுவமே தொடர்ந்து வடமாகாணத்தை நிர்வகித்து வருவதான ஒரு நிலையை போரின் போதான வடமாகாண யாழ். படைத் தலைவரும் தற்போதைய வடமாகாண ஆளுநருமான இரண்டாம் பதவிக்காலம் பெற்றுள்ள ஆளுநர் ஏற்படுத்தி வருகின்றார்.

அதே நேரத்தில் அலுவலர்களின் அதிகார வளம், அனுபவ வளம் ஆகியன அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. உரம்மிக்க அதிகாரிகளை உட்கொண்டு வருவதற்கு உரிய கட்டமைப்பொன்றும் உருவாக்கப்படவில்லை. அலுவலர் பற்றாக்குறை நியதிச் சட்ட ஆக்கத்தையும் நிலைகுலைய வைத்துள்ளது.

எமது ஒருவருடகால அனுபவமானது பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் எமது வடகிழக்கு மாகாணத் தமிழ்ப் பேசும் மக்களுக்கு விடிவு காலத்தை ஏற்படுத்தக் கூடும் என்று கூறிய சிலரின் கனவைச் சிதைப்பதாகவே அமைந்துள்ளது.

அரசியல் ரீதியாக அடிபணிந்து எமது உரிமைகளைப் பெற நாங்கள் தயாராக இல்லை என்பதையும் இத்தருணத்தில் கூறி வைக்கின்றேன்.

பல விதங்களிலும் மத்திய அரசாங்கந் தனது ஆதிக்கத்தை மேலோங்கச் செய்யவே சகல நடவடிக்கைகளையும் எடுத்து வந்துள்ளது.

நாடெங்கிலும் குடும்ப ஆட்சியும் மத்தியின் வல்லாட்சியும் நிலை பெற்றிருக்கின்றதென்றால் வடமாகாணத்தில் அது சர்வாதிகாரத்திற்கு இடங்கொடுத்து வருவதாகவே காணக் கூடியதாக இருக்கின்றது.

எமது மக்களின் தனித்துவத்தை, தன்மானத்தை, தகைமைகளைத் தகர்த்தெறியவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.   எமது பாரம்பரிய இனப்பரம்பல் பரிதாபகரமாக மாற்றியமைக்கப்பட்டு வருகின்றது.

தெற்கில் இருந்து எமது தமிழ்ப் பேசும் மக்கள் எவ்வாறு வன்முறைகளினால் அப்பிரதேசங்களை விட்டு வெளியேற்றப்பட்டார்களோ அதே போல் வடகிழக்கில் வாழ்ந்து வரும் தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறவும் வெளியார்கள் வந்து குடியமர வழி அமைக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.

இப்பேர்ப்பட்ட சூழலில் தான் எமது நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் சமர்ப்பிக்கப்படுகிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *