மேலும்

யாருக்கு ஆதரவு, சம்பந்தனின் இந்தியப் பயண இரகசியம் – முடிச்சை அவிழ்க்கிறார் மாவை

mavai-senathirajahஅடுத்த மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின்  பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“அதிபர் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.

ஆனால், யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை.

இன்றைய கூட்டத்தில், கட்சி உறுப்பினர்கள் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.

வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தல் குறித்தும் வாதிக்கப்பட்டது.

பல்வேறு உறுப்பினர்களும், தேர்தலைப் புறக்கணிக்காமல் தமிழர்கள் அதிகளவில் வாக்களிப்பில் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக இன்னமும் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டியுள்ளது. எமது நிலைப்பாட்டை பின்னர் அறிவிப்போம்.

அதிபர் தேர்தல் குறித்து ஆராய்வதற்காக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இந்தியா செல்லவில்லை.

ஆண்டுதோறும் செய்து கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைக்காகவே அங்கு சென்ன்றுள்ளார்.

அதிபர் தேர்தல் தொடர்பாக தற்போது புதுடெல்லியுடன் பேச வேண்டிய தேவை இல்லை.

விரைவில் இரா.சம்பந்தன் நாடு திரும்புவார். அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவை அவர் அறிவிப்பார்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *