மேலும்

‘சிறிலங்காவில் சீனாவின் இருப்பு தனக்கு பாதுகாப்பற்றதென இந்தியா கருத வேண்டியதில்லை’ – முன்னாள் இராஜதந்திரி ஜெயந்த தனபால

Jayantha Dhanapalaசீனாவுக்கு சிறிலங்கா சிறப்புச் சலுகைகளை வழங்குவது தொடர்பாகவும் சிறிலங்காவில் சீனாவால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பாகவும் இந்தியா திறந்த மனதோடு கருத்துக்களை வெளியிட வேண்டும் என முன்னாள் இராஜதந்திரி ஜெயந்த தனபால தெரிவித்துள்ளார்.

போர்க் காலத்தில் சிறிலங்காவின் வெளியுறவுக் கோட்பாட்டில் மிக முக்கிய பங்கு வகித்த உயர் இராஜதந்திரியான திரு.தனபால அண்மையில் ‘த இந்து’ ஊடகத்திடம் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இந்தியா மற்றும் சீனாவுடனான சிறிலங்காவின் உறவு, சிறிலங்காவில் ஜனவரி 08 அன்று இடம்பெறவுள்ள அதிபர் தேர்தல் மற்றும் நிறைவேற்று அதிபர் முறைமையை ஒழிப்பது தொடர்பாக சிறிலங்காவில் தற்போது மேற்கொள்ளப்படும் தேர்தல் பரப்புரை உட்பட பல்வேறு அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக திரு.தனபால தனது கருத்துக்களை வழங்கியுள்ளார்.

சிறிலங்காவில் சீனாவின் பிரசன்னம் அதிகரிப்பது தொடர்பாக இந்தியா அதிருப்தியடைவதாகவும் இவர் சுட்டிக்காட்டினார்.

“சிறிலங்கா அபிவிருத்தியடைய வேண்டிய தேவையிருந்த போது அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா இந்தியாவிடம் கோரிய போது இந்தியா சில பொருளாதாரக் காரணங்களுக்காக இதனை ஏற்க மறுத்தது. இதனைத் தொடர்ந்தே சிறிலங்கா சீனாவின் உதவியை நாடியது. ஆகவே இதனை சீனாவுக்கு சிறிலங்கா சிறப்புச் சலுகையை வழங்குவதாக இந்தியா கூறமுடியாது” என சீனா, அமெரிக்கா மற்றும் ஜெனீவா ஆகிய நாடுகளில் சிறிலங்காவின் இராஜதந்திரியாகச் செயற்பட்ட திரு.தனபால குறிப்பிட்டுள்ளார்.

எதுஎவ்வாறிருப்பினும், பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள சிறிலங்காத் தீவானது சீனாவிடமிருந்தே அதிக கடன்களைப் பெற்றுள்ளது எனவும் இதன் விளைவாக இலங்கையர்களாகிய நாங்கள் அரசியல் ரீதியாக ஒரு நாட்டில் தங்கியிருக்க வேண்டும் எனக் கருதப்பட முடியாது என திரு.தனபால மேலும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அனைத்துலக சமூகத்துடன் தனது உறவை விரிவுபடுத்தி வரும் இந்நிலையில், சிறிலங்காவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியாவே உள்ளதாகவும், மேற்குல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிறிலங்காவுக்கு வருகைதரும் இந்நிலையில் சிறிலங்காவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது எனக் கூறுவது முரண்பாடான விடயமாகும் எனவும் இதேவேளையில் மூலோபாய ரீதியான அச்சங்களைப் போக்குவதற்காக சிறிலங்காவானது இந்தியாவுடன் தொடர்பைப்  பேணவேண்டும் எனவும்  திரு.தனபால மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவின் ‘முத்துமாலை’ மூலோபாயம் மிகவும் கவனமாக ஆராயப்பட வேண்டும் எனவும் ஏனெனில் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் இந்தியாவுக்கு எதிராக சீனாவைத் தூண்டிவிட்டு ஆசியாவில் மோதல் ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சியை அமெரிக்கா மேற்கொள்வதாக திரு.தனபால சுட்டிக்காட்டியுள்ளார்.

இரு நாடுகளினதும் அரசியல் நலனைக் கருத்திற் கொண்டு இரு நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நிரந்தர உறவை இந்தியாவும் சிறிலங்காவும் கைக்கொண்டுவருவதால் சிறிலங்காவானது இந்தியாவுடன் பூகோள-அரசியல் சார் உறவைப் பேணவேண்டிய நிலையிலுள்ளதால் சிறிலங்காவுடன் இருதரப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மிக முக்கிய ஒரு பங்குதாரராக இந்தியா தொடர்ந்தும் நிலைத்திருக்க வேண்டியது அவசியம் என்பதை இந்தியா உணர்ந்து கொள்ள வேண்டும் என தனபால மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலுக்கான எதிரணியின் பரப்புரையில் மிக முக்கிய விடயமாகப் பேசப்படும் நிறைவேற்று அதிபர் முறைமையை ஒழித்தலை மிக அண்மைக்காலமாக சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரி திரு.தனபால ஆதரித்து வருகிறார்.

35 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது சிறிலங்காவை முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சி செய்த போது, சிறிலங்காவில் சிங்கப்பூர் மாதிரியிலான நிர்வாகத்தை நடாத்துவதற்கு தனது சொந்த விருப்பத்தில் ஜெயவர்த்தன மிகவும் வினைத்திறன் மிக்க நிறைவேற்று அதிபர் முறைமையை அறிமுகம் செய்ததாக திரு.தனபால சுட்டிக்காட்டினார்.

கடந்த பல ஆண்டுகளாக சிறிலங்காவை ஆட்சி செய்த தலைவர்கள் நிறைவேற்று அதிபர் முறைமையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் தமக்குள்ள மேலதிக நிறைவேற்று அதிகார முறைமையைப் பயன்படுத்தியுள்ளனர். தற்போதைய சிறிலங்காவின் அதிபர் திரு.மகிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரத்தை வரையறையின்றிப் பயன்படுத்துவதால் இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இவரது ஆட்சியானது குடும்ப அதிகாரம் மிக்க ஆட்சியாக மாற்றப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிபர் முறைமையை சிறிலங்காவிலிருந்து நீக்குவதாகக் கூறி தற்போது எதிரணியின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறங்கியுள்ளார். “மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விளக்கவுரையில் நிறைவேற்று அதிபர் முறைமையை அரசியல் யாப்பிலிருந்து ஒழிப்பேன் என பிரகடனப்படுத்தியுள்ளார்” என தனபால தெரிவித்தார்.
ராஜபக்ச அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரான திரு.சிறிசேன அண்மையில் ஆளுங் கூட்டணியிலிருந்து விலகி எதிரணியில் இணைந்து கொண்டார். ஜாதிக ஹெல உறுமய, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஜனதா விமுக்தி பெரமுன போன்றன தற்போது மைத்திரிபாலவை ஆதரித்துள்ளனர்.

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் எதிரணியின் பொதுவேட்பாளரான மைத்திரிபாலவை ஆதரித்துள்ளதானது இவரது முக்கியத்துவத்தை மிகைப்படுத்தியோ அல்லது குறைவாகவோ எடைபோட முடியாது என தனபால குறிப்பிட்டுள்ளார். “அரசியலை விட்டு சந்திரிக்கா விலகி ஒன்பது ஆண்டுகளின் பின்னர் தற்போது இவர் எதிரணியுடன் இணைந்துள்ளதானது இவருக்கு ஆதரவான வாக்குகளை எதிரணிக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு உதவும் என்ற நம்பிக்கையேயாகும்” என திரு.தனபால மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வழிமூலம் : By Meera Srinivasan – The Hindu
மொழியாக்கம் : நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *