மேலும்

மிகப்பெரிய சவால்களைச் சந்திக்கப் போகிறது சிறிலங்கா – அனைத்துலக நெருக்கடிக் குழு எச்சரிக்கை

தற்போது சிறிலங்காவில் அதிபர் தேர்தல் தொடர்பாக அரசியற் போட்டி இடம்பெறுவதால் வரும் மாதங்களில் பல்வேறு மிகப்பெரிய சவால்களை சிறிலங்கா சந்திக்கும் என்று அனைத்துலக நெருக்கடிக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரசெல்சை தலைமையகமாக கொண்ட  அனைத்துலக நெருக்கடிக் குழு [International Crisis Group – ICG] வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்,

“சிறிலங்காவின் எதிர்க்கட்சி நாட்டில் மீண்டும் ஜனநாயக இடைவெளியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதானது நாட்டில் பல்வேறு வன்முறைகள் மற்றும் உறுதியற்ற நிலைப்பாடு உருவாவதற்குக் காலாக உள்ளன. இந்த நிலையால் நாடு ஆபத்தைச் சந்திக்க வேண்டியேற்படும்.

நாட்டில் குழப்பங்கள் ஏற்படாது இவ்வாறான ஆபத்தைத் தவிர்ப்பதற்கு நாட்டின் எதிர்க்கட்சியும் அரசாங்கமும் அரசியல் ஆளுமையையும் ஆட்சித் திறனையும் கொண்டிருத்தல் அவசியமானதாகும்.

அனைத்துலக சமூகம் சிறிலங்காவின் நிலைப்பாட்டில் தனது நெருக்கமான கவனத்தைக் குவிப்பதன் மூலம் சிறிலங்காவின் இரு அரசியற் தரப்பிற்கும் ஒரு தெளிவான செய்தியை அனுப்புவதன் மூலமும் நாடு எதிர்கொள்ளவுள்ள பாரிய சவால்களை வெற்றி கொள்ள முடியும்.

நாட்டில் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலை மேற்கொள்வதன் மூலமும், தேர்தலுக்குப் பின்னான பெறுபேற்றை எதிர்கொள்வதற்கான உறுதித்தன்மையை நிலைநாட்டுவதன் மூலமும் அனைத்துலக சமூகமானது சிறிலங்காவில் ஏற்படும் குழப்பங்களையும் வன்முறைகளையும் நிறுத்த முடியும்.

அத்துடன் உள்நாடு மற்றும் அனைத்துலக நாடுகளைச் சேர்ந்த தேர்தற் கண்காணிப்பாளர்கள் வினைத்திறனான தேர்தற் கண்காணிப்பில் ஈடுபடுவதற்கான அழுத்தம் வழங்கப்படும் போதும் சிறிலங்காவில் அமைதியை உண்டுபண்ணலாம்.

ராஜபக்ச அரசாங்கம் அனைத்துலகக் கடப்பாடுகளைப் பின்பற்றுவதையும் அனைத்துலக சமூகம் உறுதிப்படுத்த வேண்டும். வன்முறைகள் மூலமோ அல்லது எந்தவொரு மோசடிகள் மூலமோ அதிபர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை ராஜபக்ச மேற்கொள்ளும் போது அதற்கு எதிராக 2015ல் கூடவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை உட்பட அனைத்து இராஜதந்திர நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்கின்ற தெளிவான செய்தியை ராஜபக்ச அரசாங்கத்திற்கு அனைத்துலக சமூகம் வழங்க வேண்டும்.

இதுவரையில் தனது ஆட்சியை பலவந்தமாகவோ அல்லது தேர்தலுக்குப் பின்னான வன்முறைகள் மூலமோ தக்கவைத்துக் கொள்வதற்காக ராஜபக்ச அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட 44 முயற்சிகள் நாட்டில் நீண்ட காலப் பாதிப்பை உண்டுபண்ணுவதுடன், எதிர்காலத்தின் உறுதியற்ற தன்மைக்கும் வித்திடுவதாக அமைந்துள்ளது.

தேர்தல் முடிவடைந்த கையோடு வன்முறைகள் ஏற்படாது தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். வாக்களிப்பு முடிவடைந்த பின்னரும் கூட வன்முறைகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக தேர்தற் காலத்தில் வன்முறையற்ற பரப்புரையை மேற்கொள்வதற்கு எதிர்க்கட்சிகளுக்கு உந்துதலளிக்கப்பட வேண்டும்.

நம்பகமான சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல் இடம்பெற்ற பின்னர் அதன் பெறுபேறுகள் அனைத்துக் கட்சிகளாலும் மதிப்பளிக்கப்பட வேண்டும்.

குறிப்பாக அதிகாரப் பரவலாக்கல், சிறுபான்மை மதத்தினரின் உரிமைகள் பாதுகாக்கப்படுதல் மற்றும் குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்படும் போது அவற்றுக்குப் பொறுப்பளித்தல் போன்றன உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

தற்போது சிதைவுற்றுள்ள சிறிலங்காவை மீளக்கட்டியெழுப்பி உறுதியை நிலைநாட்டி முழுமையான தேசமாகக் கட்டியெழுப்புவதென்பது எந்த வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற்றாலும் மிகவும் கடினமான பணியாகும்.

எதுஎவ்வாறிருப்பினும், பல மில்லியன் கணக்கான சிறிலங்கா வாக்காளர்களின் உறுதிப்பாடு, நாட்டின் அனைத்துலக பங்குதாரர்களின் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் நல்வாய்ப்பு போன்ற பல்வேறு காரணிகள் நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கு மிகவும் அவசியமானதாகும். என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *