மேலும்

திருப்பதி சென்றடைந்தார் மகிந்த – கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட பயணத்திட்டம்

mahinda-trupathiசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மாலை திருப்பதியைச் சென்றடைந்துள்ளார்.அங்கு அவருக்கு திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருப்பதியில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள ரேனிகுண்டா விமான நிலையத்தில் சிறப்பு விமானம் மூலம் வந்திறங்கிய மகிந்த ராஜபக்ச, அங்கிருந்து உலங்குவானூர்தி மூலம் பல்கலைக்கழக மைதானத்தில் சென்று தரையிறங்கினார்.

அங்கிருந்து தரைவழியாக திருமலைக்குச் சென்றார். அங்கு அவருக்கு திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக, ரேனிகுண்டா விமான நிலையத்தில் இருந்து வாகனப் பேரணியாகவே அவர் திருப்பதி செல்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

பின்னர் பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு உலங்குவானூர்தி மூலம் பல்கலைக்கழக மைதானத்தில் சென்று தரையிறங்கும் வகையில் பயணத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டது.

mahinda-trupathi

படம் – ஈநாடு

அத்துடன் மகிந்த ராஜபக்ச பயணம் செய்யும் வீதி 2 மணிநேரம் போக்குவரத்துக்காக தடைசெய்யப்பட்டது.

மேலும், மகிந்த ராஜபக்ச பயணம் செய்த போது, மூன்று வாகனத் தொடரணிகள் பயணம் மேற்கொண்டன. இவற்றில் இரண்டு போலியான வாகனத்தொடரணிகளாகும்.

இதற்கிடையே மகிந்த ராஜபக்ச ரேனிகுண்டா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சற்றுமுன்னதாக, தமிழ் இளைஞர் ஒருவர் அந்தப் பகுதியில் வைத்து கைது செயப்பட்டார்.

சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடியதாக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமரன் என்ற இளைஞரே ஆந்திர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அவருடன் வந்த மூன்று பேர் தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், சித்தூர் மற்றும் திருப்பதி பகுதிகளில் தமிழர்கள் கைது செய்யப்படுவதாகவும், இதுபற்றி வாய்திறக்க ஆந்திர காவல்துறையினர் மறுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *