மேலும்

போர்க்குற்றம் சுமத்தப்பட்ட ஜெனரல் அவசரமாக கொழும்பு திரும்பினார்

General Srilal Weerasooriyaதென்னாபிரிக்காவில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போதிலும், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சிறிலால் வீரசூரிய கைது செய்யப்படுவதில் இருந்து தப்பி, கொழும்பு திரும்பியுள்ளார்.

தென்னாபிரிக்காவில் உள்ள சைமன்ரவுன் கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற, கிறிஸ்தவ இராணுவ உதவி அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜெனரல் வீரசூரிய தனது மனைவி, தில்ஹானியுடன் அங்கு சென்றிருந்தார்.

தென்னாபிரிக்க தமிழ் கூட்டமைப்பினால், அங்கு அவருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

சிறிலங்கா இராணுவத் தளபதியாக ஜெனரல் வீரசூரிய பதவி வகித்த போது, தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் நீதிக்குப் புறம்பான படுகொலைகளுக்காக, அவர் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, வெளிநாட்டுக் குற்றங்களுக்கான சிறப்பு அலகின் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து ஜெனரல் சிறிலால் வீரசூரிய தென்னாபிரிக்காவில் கைது செய்யப்படக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், கைது செய்யப்படுவதில் இருந்து தப்பி, ஜெனரல் வீரசூரிய அவசரமாக கொழும்பு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஓய்வுபெற்ற, சேவையில் உள்ள சிறிலங்காவின் மூத்த இராணுவ அதிகாரிகள் மீது போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்தும் தமது ஒட்டுமொத்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாகவே, ஜெனரல் வீரசூரிய மீதான தென்னாபிரிக்க தமிழர் கூட்டமைப்பின் முறைப்பாடு அமைந்திருந்ததாக, உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா இராணுவ மற்றும் வெளிவிவகார அமைச்சு மூத்த அதிகாரிகள், இது சிறிலங்கா இராணுவத்தின் பெயரைக் கெடுக்கின்ற விடுதலைப் புலிகளின் பரப்புரை உத்தி என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *