மேலும்

19 வேட்பாளர்கள் போட்டியிடும் சிறிலங்கா அதிபர் தேர்தல்

mahinda-nominationஅடுத்தமாதம் 8ம் நாள் நடைபெறும் சிறிலங்கா அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 19 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக, சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 

இன்று காலை எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும், அதையடுத்து தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவும் தமது வேட்புமனுக்களை தேர்தல் ஆணையாளரிடம் கையளித்தனர்.

இவர்களுடன் சேர்த்து மொத்தமாக 17 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், 2 சுயேட்சை வேட்பாளர்களுமாக மொத்தம் 19 பேர் இன்று அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இன்று நண்பகலுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்ததையடுத்து, ஆட்சேபனைகளைத் தெரிவிக்க அரைமணி நேரம் ஒதுக்கப்பட்டது.

இதன்போது, மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும், மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகவும், ஆட்சேபனை மனுக்கல் சமர்ப்பிக்கப்பட்டன.

அவற்றை ஆராய்ந்த தேர்தல் ஆணையாளர் அவை ஏற்புடையதல்ல என்று கூறி இரண்டு ஆட்சேபனைகளையும் நிராகரித்தார்.

இதையடுத்து, 19 வேட்பாளர்களினது வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளரால் அறிவிக்கப்பட்டது.

mahinda-nomination

maithri-nomonation

mahinda-nomination

maithri-nominationஅதேவேளை, வன்முறைகள் இல்லாத தேர்தல் இடம்பெறுவதை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்த தேர்தல்கள் ஆணையாளர், தாம் சுதந்திரமாகச் செயற்படவில்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டையும் நிராகரித்தார்.

அரசாங்கப் பணியாளர்களை தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுத்தக் கூடாது என்றும் அது தேர்தல் வன்முறை என்றும் சுட்டிக்காட்டிய மகிந்த தேசப்பிரிய, ஊடகங்கள் அனைத்து வேட்பாளர்களுக்கும் சமஅளவில் இடம் ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்தல் செயலகத்தில், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்த தேர்தலில் இரண்டு ராஜபக்சக்களும், இரண்டு சிறிசேனக்களும் போட்டியிடுகின்றனர்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன், இன்னொரு ராஜபக்சவான சட்டத்தரணி நாமல் ராஜபக்ச எமது தேசிய முன்னணி சார்பில் போட்டியிடுகிறார்.

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன், தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் சார்பில் இரத்நாயக்க ஆராச்சிகே சிறிசேன என்பவரும் போட்டியிடுகிறார்.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்-

  1. பத்தரமுல்லே சீலரத்ன தேரர் – ஜனசெத பெரமுன
  2. எம்.பி.தெமிணிமுல்ல – ஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு
  3. பாணி விஜேசிறிவர்தன – சோசலிச சமத்துவக் கட்சி
  4. சிறிதுங்க ஜயசூரிய – ஐக்கிய சோசலிச கட்சி
  5. ராஜபக்ச பேர்சி மகேந்திர – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
  6. ஜயந்த குலதுங்க – எக்சத் லங்கா மகா சபா
  7. விமல் கீகனகே – இலங்கை தேசிய முன்னணி
  8. பள்ளேவத்தே கமராலலாகே மைத்திரிபால யாப்பா சிறிசேன – புதிய ஜனநாயக முன்னணி
  9. ஐ.எம்.இல்யாஸ் – சுயேட்சை
  10. இப்றாஹிம் நிஸ்தார் மொஹமட் மிப்லார் – ஐக்கிய சமாதான முன்னணி
  11. பொல்கம்பல ராலலாகே சமிந்த அனுருத்த பொல்கம்பல – சுயேட்சை
  12. துமிந்த நாகமுவ – முன்னிலை சோசலிச கட்சி
  13. ஏ.எஸ்.பீ.லியனகே – சிறிலங்கா தொழிலாளர் கட்சி
  14. சுந்தரம் மகேந்திரன் – நவ சம சமாஜக் கட்சி
  15. கட்டுகம்பல அப்புகாமிலாகே பிரசன்ன பிரியங்கர – ஜனநாயக தேசிய இயக்கம்
  16. ராஜபக்ச ஆரச்சிலாகே அஜித் நாமல் ராஜபக்ச – எமது தேசிய முன்னணி
  17. இரத்நாயக்க ஆராச்சிகே சிறிசேன – தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி
  18. சரத் மனமேந்திர – புதிய சிஹல உறுமய
  19. ருவன்திலக்க பேதுரு ஆரச்சி – எக்சத் லங்கா பொதுஜன பக்சய

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *