மேலும்

ஜெனரல் வீரசூரியவுக்கு எதிராக போர்க்குற்ற முறைப்பாடு பதிவு – கைது செய்யப்படுவாரா?

General Srilal Weerasooriyaவிடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, போர்க்குற்றங்களை இழைத்ததாக, தென்னாபிரிக்கா சென்றுள்ள சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சிறிலால் வீரசூரியவுக்கு எதிராக குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க தமிழ் அமைப்பு ஒன்றே இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளது.

கிறிஸ்தவ இராணுவ உதவுதொகை அமைப்பின் அனைத்துலக மாநாடு, தென்னாபிரிக்காவின் சைமன்ரவுன் கடற்படைத் தளத்தில் இடம்பெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் தனது மனைவி தில்ஹானியுடன் பங்கேற்கச் சென்றுள்ளார் ஜெனரல் சிறிலால் வீரசூரிய.

இந்தநிலையிலேயே, தென்னாபிரிக்க தமிழ் கூட்டமைப்பு, அவருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளது.

1990களில் சிறிலங்கா இராணுவத் தளபதியாகப் பணியாற்றிய போது, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்று ஜெனரல் சிறிலால் வீரசூரியவுக்கு எதிராக, தென்னாபிரிக்காவில் உள்ள வெளிநாட்டுக் குற்றங்களுக்கான சிறப்புப் பிரிவின் ஆணையாளரிடம், முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

“சிறிலங்காவில் தமிழ் மக்களின் போராட்டத்தை எப்போதும் நாங்கள் ஆதரிக்கிறோம்.

மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்த ஜெனரல் சிறிலால் வீரசூரியவை உடனடியாக அனைத்துலக சட்டங்களின் கீழ், கைது செய்து நீதியின் முன்நிறுத்த தென்னாபிரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறோம்” என ஆறு இலட்சம் இந்திய வம்சாவளியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தென்னாபிரிக்க தமிழ் கூட்டமைப்பு கோரியுள்ளது.

அதேவேளை, சிறிலங்காவின் அமைதிக்கும் நீதிக்குமான அமைப்பும், ஜெனரல் வீரசூரியவுக்கு தென்னாபிரிக்காவில் இடமளிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

கிறிஸ்தவ இராணுவ உதவுதொகை அமைப்பின் மாநாட்டின் பெயரை ஜெனரல் வீரசூரியவின் பிரசன்னம் கெடுத்து விடும் என்றும் இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கடுமையான குடிவரவுக் கட்டுப்பாடுகள், நுழைவிசைவு நடைமுறைகளைக் கொண்டுள்ள தென்னாபிரிக்கா, போர்க்குற்றவாளி ஒருவருக்கு அனுமதி அளித்துள்ளது, ஆச்சரியமளிப்பதாகவும், இந்த அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

போர்க்குற்றவாளியான ஓய்வுபெற்ற ஜெனரல் வீரசூரியவை தென்னாபிரிக்காவுக்கு அழைத்ததற்காக கிறிஸ்தவ இராணுவ உதவுதொகை அமைப்பு தென்னாபிரிக்க மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் இந்த அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *