மேலும்

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து தேசிய அரசே ஆராயுமாம் – நழுவுகிறார் மைத்திரி

maithripala sirisenaஅதிபர் தேர்தலுக்குப் பின்னர் அமைக்கப்படும் தேசிய அரசாங்கமே, தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆராயும் என்று, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிபிசிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

”எமது முதல் 100 நாட்களுக்கான நடவடிக்கைத் திட்டத்தில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கான தீர்வு குறித்து உள்ளடக்கப்படவில்லை.

தேர்தலுக்குப் பின்னர் அமைக்கப்படவிருக்கும் தேசிய அரசாங்கமே அதனை ஆராயும்.

எமது கூட்டணியில் பல அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன

சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக கட்சி, ஜாதிக  ஹெல உறுமய என பல அரசியல் கட்சிகள் எங்கள் அமைப்பில் உள்ளன.

அதனை விட பல பொது அமைப்புக்களும் அதில் அடங்குகின்றன.

எங்களது கூட்டணியினால், 100 நாட்களுக்கான செயற்திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளோம்.

இந்த 100 நாள் திட்டத்தில், நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறைமையை ஒழித்தல், அரசியலமைப்பில் மாற்றங்களை செய்தல் மற்றும் வறிய மக்களின் நலன்களுக்கான பொருளாதார மறுசீரமைப்பு ஆகியன அடங்கியுள்ளன.

எமது 100 நாள் திட்டத்தில் இவை மாத்திரம் தான் இருக்கின்றன. இதில் ஏனைய விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை.

தேர்தலுக்கு பின்னர் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு தேசிய அரசாங்கத்தை நாங்கள் அமைப்போம்.

அந்த அரசாங்கம் தான் சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கும்.

ஒருவேளை தற்போது இருக்கும் நாடாளுமன்றத்தில் அனைவரையும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான சூழ்நிலை ஏற்படவில்லையானால், இந்த நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துவேன்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமையின் கீழ் உள்ள அனைத்து அதிகாரங்களையும் நீக்கி விடுவேன்.

ஆனால், முப்படைகளின் தளபதியாகவும், மாகாணசபைகளை கட்டுப்படுத்தும் அதிகாரங்களையும் மட்டும் வைத்துக் கொள்வேன்.” என்றும் அவர் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *