மேலும்

ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் ‘எஸ்பொ’ காலமானார்

espoஈழத்தின் முதுபெரும் எழுத்தாளரும் ‘எஸ்பொ’ என தமிழிலக்கிய உலகில்
அறியப்பட்டவருமான  எஸ்.பொன்னுத்துரை அவர்கள் இன்று [26-11-2014] அவுஸ்ரேலியாவில் சிட்னி நகரில் காலமானார்.

1932ல் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்த அவர் சிறுகதை, நாவல், நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு என தமிழ் இலக்கியத் தளத்தின் பல்துறை வித்தகராக திகழ்ந்தார்.

தமிழ்நாட்டின் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், சென்னை கிறித்தவக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்ற இவர் மட்டக்களப்பில் ஆசிரியராகவும் அதிபராகவும் பின்னர் நைஜீரியாவில் ஆசிரியாகவும் பணியாற்றினார்.
.
1990 முதல் அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வந்த அவர் தமிழ்நாடடில் ‘மித்ர’ பதிப்பகத்தை நிறுவி இறுதிக்காலம் வரையிலும் தனது நூல்களுடன் பல தமிழ் எழுத்தாளர்களின் நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டார்.

‘மித்ர’ என இயற்பெயர் கொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த ஈழப்போராட்டத்தின் முக்கிய போராளிகளில் ஒருவரான ‘அர்ச்சுனா’ எஸ்பொ அவர்களின் மகனாவார்.

தமிழின் புலம்பெயர்ந்தோர் இலக்கிய வகையினை அடையாளப்படுத்தியதில் அவரும் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியும் தொகுத்து பதிப்பித்த ‘பனியும் பனையும்’ முக்கியமான வெளியீடாகும்.

அவர் தன் வரலாறாக ‘வரலாற்றில் வாழ்தல்’ என்னும் தலைப்பில் இரண்டாயிரம் பக்க நூலாக வெளிக்கொணர்ந்தார்.

இவரது ‘சடங்கு’ சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக மதிப்பிடப்படுகின்றது.

இவருக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2010ம் ஆண்டிற்க்கான வாழ்நாள் இயல் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு புதினப்பலகை குழுமத்தினரும் தமது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *