மேலும்

களத்து மேடுகளில் துப்பாக்கி கொண்டல்ல உயிரின் வலி கொண்டு கடூழியம் புரிந்தார்கள் – குணா கவியழகன்

karthikai-malarஏறத்தாழ 25 ஆண்டுகளாக, வன்முறை எனும் பேரலைக்கு அஞ்சிய மக்களை காக்கும் பொருட்டு, எதிர்வன்முறை எனும் அணை கட்டி மாண்டவர்களுக்காக, நினைவேந்திய மகத்தான நாள் இன்று .

1958ல் இருந்து சுமார் 25 ஆண்டுகளான 1983 கருப்பு ஜூலை  வரை அரச வன்முறை தமிழின எதிர்ப்பு எனும் விசத் தாண்டவம் ஆடியபோது எதிர் வன்முறையே அஞ்சி நடுங்கும் மக்களை காக்கும் என கண்டு போர்க்களம் போன இளைஞர்கள் இவர்கள்.

களத்து மேடுகளில் துப்பாக்கி கொண்டல்ல உயிரின் வலி கொண்டு கடூழியம் புரிந்தார்கள். அசைக்கவியலாத ஒரு பேர் அணையை,எந்த அலைகளாலும் அச்சுறுத்தவியலாத காலமற்ற அணையை தம் சனங்களுக்கான காப்பாக்கி விட வேண்டும் என உழைத்தார்கள்.

பேருழைப்பு, பெரு வலி, பெரிய தியாகம் புரிந்தார்கள். அணையின் ஒவ்வொரு பிடி மண் இடுக்கிலும் ஒவ்வொரு உயிர் இருந்தது. ஒருநாள் வீழ்ந்தவர் நூறாயிருந்தால் வந்தவர் இருநூறாயிருந்தனர்.

உயிர் பொருட்டன்று காக்கும் அணை கட்டும் உழைப்பே பொருள் உள்ள அறம்: இதை விட வேறென்ன தத்துவம் இந்த இளைஞரை ஆட்கொண்டது. மாண்டவர்களை துதித்தார்கள் மாள்வதாயினும் மண் சுமப்பதே தம் காலக்கடன் என ஏற்றார்கள்

உலக நாடுகள் சமுத்திர அலையாய் ஒன்றாகிப் பெருகி வந்தன ஈழத்தமிழனுக்கான பிரளய வெள்ளமென. வீரர்களை வீழ்த்தி அணையை உடைத்தது. அவர் காத்த மக்களை பலி கொண்டது. வெள்ளத்தின் விசநாக்குகள் துரத்துகின்றன இன்றும்…

உயிர் தந்து தாம் சுமந்த மண்ணுக்கு கூலியாய் புட்டு கூட கேட்டதில்லை  இவர்கள். காக்கும் அணை ஒன்றே குறியென வாழ்ந்தார்கள் மாண்டார்கள். இன்று அணை உடைந்ததற்காய் சாட்டையால் அடிக்கிறார்கள், இந்தப் பிணங்களின் மீதும் இன்னும் பிணமென ஆகா மனங்களின் மீதும்.

அணை கட்டலின் தோல்வி பொறிமுறை தோல்வியாகலாமேயன்றி மண்சுமந்தவரின் தவறாக முடியுமா? பொறிமுறையில் உண்டான குறையை கண்டுபிடிப்பது புதிய பொறிமுறையை வகுக்க வழிகாட்டித்  தரும். ஆனால் மண் சுமந்தவரின் முதுகில் சாட்டையால் அடித்தால் அடியின் வலியை ஒரு  நாள் எல்லோர் முதுகும் உணர நேரும்.

இன்று அரசியல் தேவை, அதிகாரத்தேவை, பிரபல்யத்தேவை இன்னும் இதுவாறான தேவைகளுக்காக அர்ப்பணிப்புகள் மீதும் அவதூறு பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

அர்ப்பணிப்புகளை அவமதிக்கும் கலாச்சாரத்தின் தூதுவர்களை நாம் குருட்டு விழிகளால் துதிக்கத் தொடங்கினால், வரும்காலம் அர்ப்பண அரசியலையே அழித்துவிடும். தியாகம் மதிக்கப்படுவது அறம் ஆகவில்லை என்றால் அரசியலில் அயோக்கியத்தனத்தை காண நேரும்.

இன்றும் எங்களுக்கு அணை வேண்டும். அதற்கு வல்ல பொறிமுறை காண வேண்டும். நல்ல பொறியியலாளரும் வேண்டும். மண் சுமக்க மனம் கொள்ளும் மனிதர்களும் வேண்டும். இந்த இடத்தில் நேற்றைய தியாகம் மதிக்கப்படுவது தர்மம் ஆகவில்லை என்றால் வரும் காலம் தியாகிகளைத் தராது தண்டித்துவிடும்.

வியாபாரிகள் மக்களை வழிநடத்துவார்கள் அவர்கள் வெற்றியும் பெறுவார்கள் தோற்கப்போவது தான் நுகர்வோராய் இருக்கும்.

இன்று மண் சுமந்தவரின் முதுகில் வீசப்படும் சாட்டையால் நாளை எல்லோர் மேனியும் புண்ணாகும்.

இதை பொறுப்பீரா ஒறுப்பீரா என் சனமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *